"ஆளும் அரசை விமர்சிக்க நான் என்ன எதிர்க்கட்சித் தலைவரா".. கேரள ஆளுநரின் திடீர் மனமாற்றம் ஏன்?
திருவனந்தபுரம்: அரசை தொடர்ந்து விமர்சிக்க நான் ஒன்றும் எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியுள்ளார். கேரள அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வந்த ஆளுநரின் இந்த பேச்சு தற்போது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் அரசியல் சாசன மாண்புகளுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் தொடர் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாடு தொடங்கி மேற்கு வங்காளம் வரை இந்த சலசலப்புகள் நீடித்து வருகின்றன. அதிலும் கேராளவில் அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.

உண்ணாவிரதம் இருந்த கேரள ஆளுநர்
குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஆளுநர் ஈடுபட்டார். இந்தியாவிலேயே ஆளுநர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது அதுவே முதல் முறை என்பதால் நாடு முழுவதும் அந்த விவகாரம் கவனம் பெற்றது. அதேபோல, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து விட்டு நினைவு தெரிந்த காலம் முதல் நான் ஆர்.எஸ்.எஸ் தான் என்று மேலும் பரபரப்பை கிளப்பி விட்டு இருந்தார்.

அதிகரித்த விரிசல்
கேரளாவில் ஆளும் இடது சாரிகளின் சித்தாந்தங்கள் குறித்தும் நேரடியாக ஆளுநர் ஆரிப் முகம்மது கான் முன் வைத்தும் அந்த மாநில அரசு இடையேயான மோதலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனம் தொடங்கி மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் கிடப்பில் போட்டது வரை தொடர்ந்து கேரள அரசு - ஆளுநர் முகம்மது ஆரிப் கான் இடையேயான விரிசல் அதிகரித்துக்கொண்டே வந்தது.

மத்திய அரசை விமர்சிக்கும் வகையில்
இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரள சட்டமன்ற கூட்டம் கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகம்மது கான், கேரள அரசு அளித்த உரையை அப்படியே படித்தார். மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடும் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும் மாநில அரசு தயார் செய்த ஆளுநர் உரையில் வாசகங்கள் இருந்தன.

நான் எதிர்க்கட்சித்தலைவர் இல்லை
கேரள ஆளுநராக பதவியேற்றது முதலே அந்த மாநில அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த ஆளுநர் ஆரிப் முகம்மது கான் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை மாற்றம் இன்றி படித்தது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில், அரசை தொடர்ந்து விமர்சிப்பதற்கு நான் ஒன்றும் எதிர்க்கட்சித்தலைவர் இல்லை என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகம்மது கான் கூறியதாவது:-

குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்கிறேன்
கேரள அரசு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் நடந்து கொண்ட போதுதான் நான் விமர்சித்துள்ளேன். மாநில அரசுடன் மோதுவது எனது வேலை இல்லை. அரசியல் அமைப்பு வகுத்த சட்டத்தின் படி அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்து செல்லப்படுவதை உறுதி செய்வதுதான் எனது வேலையாகும். பல்கலைக்கழக வேந்தர்களின் பொறுப்பில் ஆளுநரை நீக்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுதொடர்பான மாநில அரசின் மசோதாவை நான் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

திடீர் மனமாற்றம் ஏன்
கேரள அரசுடன் தொடர்ந்து மிகக் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் இந்த திடீர் மனமாற்றம் கேரள அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆளுநரின் இந்த பேச்சு தொடர்பாக கேரள மாநில எதிர்க்கட்சித்தலைவர் விடி சதீஷன் கூறியதாவது:- மாநில அரசை விமர்சிக்க வேண்டும் எங்களில் யாரும் கேட்டதில்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக எங்கள் பணிகளை செய்கிறோம். அதை ஆளுநர் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். அரசு பக்கமோ ஆளுநர் பக்கமோ நாங்கள் நிற்க மாட்டோம். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளது என நாங்கள் அப்போதும் சொன்னோம். இப்போதும் சொல்கிறோம். சட்டமன்றத்தில் ஆளுநரின் கொள்கை உரை மூலம் பொதுமக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications