ரஷ்ய ரயிலில் பயணம் செய்த இந்திய பயணி.. இப்படியெல்லாமா இருக்கு? வாயடைத்து போன நெட்டிசன்கள்
மாஸ்கோ: இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர், ரஷ்ய ரயிலில் பயணம் செய்து அதில் தனக்கு கிடைத்த அனுபவங்களையும் அதில் உள்ள வசதிகளையும் வெளிப்படுத்தி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரயிலா இல்லை சொகுசு கப்பலா என எண்ணும் அளவிற்கு வசதிகள் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் சிலாகித்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ரஷ்யாவில் உள்ள ரயில் ஒன்றில் பயணம் செய்து அதனை விடியோவாக தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது. அப்படி வைரல் ஆக அதில் என்னதான் இருக்கிறது என நினைக்கிறீர்களா? ரயிலில் உள்ள வசதிகளும் நவீன டிசைன்களுமே நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

ஹீட்டர் வசதி, மைக்ரோஓவன்
இரண்டு அடுக்கு கொண்ட ரயில் ஏதோ, ஸ்டார் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்தது போல நவீன வசதிகளும் வியக்க வைக்கும் டிசன்களையும் கொண்டு இருக்கிறது. நம்ம ஊரில் முதல் வகுப்பு கூபே பயணிகளுக்கு இருப்பது போல வசதிகள் கொண்ட தனித்த இருக்கைகளும் உள்ளன. ரயில்களுக்குள்ளேயே ஹீட்டர் வசதி, மைக்ரோஓவன் என வீட்டில் இருக்கும் வசதியை மிஞ்சும் வகையில் அங்கு இருக்கும் வசதிகள் பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
அதேபோல, ரயில் பயணம் செய்யும் போதே தேவையான நொறுக்குத்தீனிகளை நாமே தேர்வு செய்யும் வகையில் வெண்டிங் மெஷின்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. அதில் பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்ளுக்கான தொகையை ரயிலில் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் செலுத்தினால், அவற்றை இயந்திரத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கின்றனர். இதுபோன்ற ரயிலில் உள்ள பல வசதிகளை குறிப்பிட்டு இந்திய சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சொகுசு கப்பல் போல இருக்கிறது
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் நையாண்டியாகவும், வியப்பாகவும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ரயிலில் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா? சொகுசு கப்பல் போல இருக்கிறது என ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "சகோதரி, அடுத்த முறை என்னையும் அழைத்துச் செல்லுங்கள்" என்று பதிவிட்டு இருந்தார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், தற்போது இந்தியாவிலேயே கிட்டத்தட்ட இதேபோன்ற வசதிகளுடன் ரயில்கள் வந்துவிட்டன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் வரும் காலங்களில் இந்த வசதியை ஏதிர்பார்க்கலாம்? என்று பதிவிட்டு உள்ளார்.
பொதுப்பெட்டிகள் கிடையாதா?
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த ரயிலில் பொதுப்பெட்டிகள் எல்லாம் கிடையாதா? இருந்தால் நம்ம ஊரில் இருக்கும் நிலையை அங்கேயும் ஒப்பிட்டு பார்த்துவிடலாம் என்று பதிவிட்டுள்ளார். ரஷ்யாவில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உலக அளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட ரயில்வே ரஷ்யாவிடம் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications
