இந்திய வரலாற்றின் “ஆரம்பம்”.. மலையாள வாடையுடன் தமிழ் மண் - கன்னியாகுமரியில் அப்படி என்ன ஸ்பெஷல்?
கன்னியாகுமரி: காஷ்மீரில் தொடங்கும் இந்திய மண்ணின் தெற்கு முனையான முக்கடல் சங்கமும் கன்னியாகுமரியில் சுற்றுலா செல்லும் வகையில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்று விரிவாக பார்ப்போம்.
கன்னியாகுமரி. தமிழ்நாட்டின் சென்னைக்கு அடுத்தபடியாக பிற மாநில இந்தியர்களால் அதிகளவில் உச்சரிக்கப்படும் பெயர் கன்னியாகுமரி. காரணம் அது அமைந்திருக்கும் இடம். அரசியல்வாதிகள் தொடங்கி வியாபாரிகள் வரை அனைவரும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்றே சொல்கிறார்கள்.

இப்படி தினமும் கோடிக்கணக்கான மக்களால் உச்சரிக்கப்படும் கன்னியாகுமரி கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா மண்ணை முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறது. ஒருபக்கம் தமிழ்நாட்டின் கலாச்சாரம், மறுபக்கம் மலையாள கலாச்சாரம் என கலாச்சார பொக்கிஷமாகவும் இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொன்னாலும் வரலாற்று ரீதியாக பழமையான மொழி கலாச்சாரத்தை கொண்ட தமிழ் மண்ணான கன்னியாகுமரியை இந்த வரலாற்றின் ஆரம்பம் என்று அழைக்கலாம்.
வங்கக்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் என முக்கடல் சங்கமுக்கும் முக்கிய தலமான கன்னியாகுமரிக்கு லட்சக்கணக்கான மக்கள் வாரந்தோறும் சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர். இந்திய அளவில் அதிகளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக கன்னியாகுமரி இருக்கிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதன் அழகை அனுபவிக்க ஒரு வாரம் இருந்தாலும் போதாது. அந்தளாவுக்கு ஏராளமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கி உள்ளது கன்னியாகுமரி. இதில் குறிப்பாக பெரும்பாலான மக்களுக்கு பிடித்தது கடல்தான். முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அதிகாலை உதயமாகும் சூரியனை பார்ப்பதே அலாதி சுகம்தான். ஒருமுறை அதை பார்த்துவிட்டாலே இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஆகிவிடுவோம்.
அதே கடலில் தமிழ்நாட்டை நோக்கியபடி அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ் ஆசான் திருவள்ளுவரின் வானுயர்ந்த சிலை உங்களை பிரம்மிக்க வைக்கும். அதன் அருகே உள்ள விவேகானந்தர் பாறையும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய தலங்களில் ஒன்றாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தாரக மந்திரத்தை தாங்கிப்பிடிக்கும் வகையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என மும்மதத்தினரும் சமத்துவமாக வாழும் மண் கன்னியாகுமரி.

இங்கு 3 மதத்தினரின் புனித வழிபாட்டு தலங்களும் அதிகளவில் உள்ளன. நெல்லை தமிழ், குமரி தமிழுடன் மலையாள நெடி கலந்த இம்மண்ணின் மக்களின் பேச்சு நம் காதில் தேன் வந்து பாய்ந்ததைபோல் இருக்கும். பௌர்ணமியின்போது ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதிக்கும் காட்சி தெரியும் காட்சியை இந்தியாவிலேயே கன்னியாகுமரியில் மட்டும்தான் காணமுடியும்.
குறிப்பாக சித்ரா பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் அடிவானத்தில் எதிரெதிரே தோன்று காட்சியை காணவே கண் கோடி வேண்டும். கடல் மட்டுமின்றி மாத்தூர் தொங்கு பாலம், காந்தி நினைவிடம், மெழுகு சிலை அருங்காட்சியகம், வட்டக்கோட்டை கோட்டை, சொத்தவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை என ஏராளமான பகுதிகள் கன்னியாகுமரியில் ரசிப்பதற்கு உள்ளன.

மதுரை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, திருவனந்தபுரம் என பல்வேறு நகரங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு பேருந்து போக்குவரத்து உள்ளது. குமரியில் இருந்து 76 கிமீ தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளது. கன்னியாகுமரிக்கு பல்வேறு நகரங்களில் இருந்து ரயில் மூலமாகவும் சென்று வரலாம். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க சிறந்தது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications