சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! அடுத்த 3 மணி நேரம் உஷார்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதாவது சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி என 8 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள் அலர்ட் என்பது, மிதமான முதல் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும்போது கொடுக்கப்படும் அலர்ட். இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அர்த்தம். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், சாலைகளில் போக்குவரத்து பாதிப்புகள் சில இடங்களில் மின்வெட்டு அல்லது மின்சாரம் தடைபடும். மற்றபடி பெரிய பாதிப்புகள் இருக்காது.
ஆரஞ்சு அலர்ட் என்பது, கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்க கொடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையின் போது 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.
இன்று மதியம் விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று (ஜூன்.23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.24 தொடங்கி 29ம் தேதி வரை தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (23-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (24-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications