திருநெல்வேலி, தென்காசியில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்! உஷார் மக்களே!
சென்னை: டிட்வா புயல் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்திருந்தது. இதனால், தமிழ்நாட்டின் இயல்பான மழைஅளவு அதிகரித்தது. இந்நிலையில், இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்.1ம் தேதி தொடங்கி, நேற்று வர தமிழகம் முழுவதும் சராசரியாக 410.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இந்த காலத்தில் பதிவாகும் இயல்பு மழையின் அளவு 372.7 மி.மீ ஆகும். எனவே மழை இயல்பை விட 10% அதிகமாக பெய்திருக்கிறது. மாவட்ட அளவில் பார்த்தால் திருநெல்வேலியில் 118% அளவுக்கு மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக எனில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பை விட மழை மைனஸ் 27% குறைவாக பெய்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று (டிச.5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (டிச.6)தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.7 முதல் 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (05-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (06-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications