Low Pressure: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்! செப்.25 முதல் 3 நாள் மழை! சம்பவம்தான் போங்க!
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், மற்றொரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வங்கக்கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இது செப் 27ம் தேதி ஒடிசா-ஆந்திர கடலோரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். தமிழகத்தின் வடமாவட்டங்களில், சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 23ஆம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-09-2025 மற்றும் 25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 26ம் தேதி தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அந்த அளவுக்கு இல்லாமல் விட்டுவிட்டு இருந்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. சென்னையை தவிர திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அதாவது கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து தற்போது தமிழகம், தெற்கு ஆந்திராவுக்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வருகிறோம்.
வரும் அக்டோபர் 3ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த முறை மழையின் அளவு தீவிரமாகவே இருக்கும் என்கிறார்கள். இந்த மழைக்குள்ளேயே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை பெய்தால் நீர் நிலைகள் மேலும் நிரம்பி அவற்றை திறந்து விட வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் இப்போதே சென்னை மக்களுக்கு கவலை கிட்டிவிட்டது என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications