Heavy Rain: சென்னையிலும் இன்று மழை விடாது.. 6 மாவட்டங்களில் கனமழை விட்டு விளாசப் போகுது! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும், நாளை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
தென் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புது காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று (20-02-2026) பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று (21-02-2026) காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிவுள்ளது.
இது காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.
இன்றும் நாளையும் கனமழை வெளுக்கும்
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வரும் 22 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23-02-2026 முதல் 25-02-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 26-02-2026 மற்றும் 27-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை:
21-02-2026 முதல் 25-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் மழை பெய்யும்
சென்னையில் இன்று (21-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (22-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 21-02-2026 மற்றும் 22-02-2026: மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-02-2026 முதல் 25-02-2026 வரை : எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 21-02-2026 மற்றும் 22-02-2026: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-02-2026 முதல் 25-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 21-02-2026 மற்றும் 22-02-2026: கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-02-2026 முதல் 25-02-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications