வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு ஒரு வாரம் நல்ல மழை தான்.! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது தென்மேற்கு மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் வங்கக்கடலில் இப்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பல இடங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் இன்று இரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 50 செமீ, சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 40 மழை பெய்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
வரும் நாட்களில் நிலவும் கிளைமேட் தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (13-08-2025) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (14-08-2025) 0830 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திரா பகுதிகளைக் கடக்கக் கூடும்.
கனமழை பெய்யும்
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (14-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (15-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய தினம் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகஸ்ட் 18ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல்
வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அரபிக்கடலின் தெற்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரளா கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications