For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூக ஊடகங்கள்... விஷமமா?, அல்லது விஷமா? பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

அண்மைக் காலமாக சமூக ஊடகங்களின் மூலமாக அநாகரிகம் வேகமாகப் பரவிவருகிறது.

கட்சிகளையும் தலைவர்களையும் கலாய்த்து வெளியிடப்படும் மீம்ஸ் மூலம் படைப்புத் திறனை வீணாக்குகிறார்களோ என்று கூட மனத்தில் தோன்றுகிறது. சாதாரண காலங்களிலேயே பிரபலம் அடையும் இத்தகைய பதிவுகள் தேர்தல் நெருங்கும் காலத்தில் விறுவிறுப்படைந்து விடுகின்றன.

அதே சமயம் கவலைதரும் வகையில் மோசமான தாக்கத்தையும் அவை ஏற்படுத்திவிடுகின்றன. துளியளவு கூட உண்மை இல்லாதவை பெரிதாக்கப்பட்டு, சமூக ஊடகத்தைக் கருவியாகப் பயன்படுத்தி கொரோனா மாதிரி பரப்பப்படுகின்றன.

Writer Paa Krishnans Artilce on Social Media

இதில் வேதனை அளிப்பது, அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு மயங்காவிட்டாலும் பொதுமக்கள் இத்தகைய பதிவுகளுக்குத் தூண்டில் மீனைப் போல் இரையாகிவிடுகிறார்கள். அண்மையில் சமூக ஊடகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து பரப்பபட்டது ஓர் உதாரணம்.

தமிழகத்தின் பெயர் "தட்சிண பாரத்" என்று மாற்றப்படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக ஒரு பதிவு வடிவமைக்கப்பட்டு, பரப்பப்டடது. இதை சம்பந்தப்பட்ட கட்சியை எதிர்ப்போர் கூட தங்களது பரப்புரையில் கூறி விமர்சிக்கவில்லை. இவ்வாறு ஓர் அறிவிப்பு வெளியாகியிருந்தால், அது அலைவரிசைகளில் "பிரேக்கிங்க நீயூஸ்" ஆக நிச்சயம் இடம் பெற்றிருக்கும். மறுநாள் நாளேடுகளில் தலைப்புச் செய்தியாகவும் வெளியிடப்பட்டிருக்கும். பொதுவாக டிஆர்பி பசியில் இருக்கும் அலைவரிசகள் இத்தகைய அறிவிப்பைக் கண்டால் விட்டிருக்கமாட்டார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வ பிரதியிலோ, அதன் இணையதளத்திலோ தட்சிணப் பிரேதஷ் என்று காணப்படவில்லை. அப்படியெல்லாம் இல்லை. ஆனால், விஷமாகப் பரப்பப்பட்டுள்ளது.

அதைப் போல் பழைய எழுத்து வரிவடிவத்தையே பாஜக தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிட்டு, "பெரியார் கொண்டுவந்த சீர்திருத்தம் என்பதால், இதைக்கூட ஏற்கவில்லை" என்று புதிய விமர்சனத்தையும் சிலர் முன் வைக்கிறார்கள். இதை ஒரு பெரிய சர்ச்சையாக்க சமூக ஊடகங்கள் முயற்சி செய்கின்றன.

எந்தக் கட்சியையும் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்குப் பூரண உரிமை உண்டு. ஆனால், அணு அளவும் உண்மையே இல்லாததைத் திட்டமிட்டு பரப்புவது விஷமம் அல்ல. விஷம்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, குறிப்பிட்ட கூட்டத்தைப் பற்றிக் கூறியதற்காகப் பல பேர் பொங்கினார்கள். அதே சமயம் ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் ஓர் ஆலயத்தின் குருக்களுக்குக் கொரானோ வந்ததாகப் பரப்பியதை விவாதமாகப் பொருளாகவே ஆக்கினர். மாற்றுப் பிரிவினர் மீது இப்படி சேறு இறைக்கப்படும்போது, எதிர் தரப்பினர், அதன் நம்பகத் தன்மையை ஆராய்வதற்குப் பதில் மனத்துக்குள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போக்கு எல்லாக் கட்சிகளிடமும் இருக்கிறது. ஆள்வோரிடமும் ஆள விரும்புவோரிடமும் இருக்கிறது. பொதுவுடைமை சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்போர் மட்டுமே பெருமளவுக்கு இதுபோல் சமூக ஊடகங்களில் வருவதை நம்பி தங்களது நிலைப்பாட்டுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதைப் போல் அநாகரிகமாகக் கருத்தைத் தெரிவிப்பதும் இல்லை என்று கூட சொல்லிவிடலாம்.

உண்மைக்கு மாறானவை சமூக ஊடகங்களின் வாயிலாக திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. மறைந்துவிட்ட தலைவரை "திருட்டு ரயில் ஏறி வந்தார்" என்றும், இன்னொரு தலைவரின் பெயரையே திரித்துப் பேசி பதிவிடப்படுகின்றன. இதை பரப்புரைகளில் அரசியல்வாதிகள் கையாள்கிறார்கள். தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன், முதலமைச்சரைப் பற்றி மத்திய முன்னாள் அமைச்சர் தரம் தாழ்ந்து பேசியதைக் காட்டும் காணொலி சமூக வலைதளங்களில் உலா வந்தது. அதை அக்கட்சியின் பெண் தலைவர் ஒருவர் மறைமுகமாகக் கண்டித்திருப்பது வரவேற்கத் தக்கது. என்றாலும், யாரும் வெளிப்படையாக விமர்சிப்பது இல்லை.

காமராஜரைப் பற்றி அண்ணா திமுகவினர் சில மேடைகளில் விமர்சித்துப் பேசியதுண்டு. காரணம், திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பின் அவரைத் தொடர்ந்து வெளியேறி அவரது தலைமையிலான அண்ணா திமுகவில் இணைந்தனர். அப்போது, காமராஜர் "ஒரே குட்டையில் ஊறிய மட்டை" என்று விமர்சித்தார். அதன் விளைவாக இப்படி காமராஜரை அண்ணா திமுகவினர் விமர்சித்துப் பேசினர்.

ஆனால், அதை எம்ஜிஆர் ஏற்கவில்லை. பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எம்ஜிஆர் ஒரு பொதுக்கூட்ட மேடையில், "என் கட்சியினர் தெரிந்தோ தெரியாமலோ காமராஜரைப் பற்றி அவதூறாகப் பேசினால், அதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மனம் திறந்து பேசினார். அது அவர் மீதான மரியாதையை மேலும் உயர்த்தியது.

இப்படி கட்சியினர் பேசுவதைப் போல் ஊடகங்களில் உண்மைக்கு மாறாகவும் தரக் குறைவாகவும் பதிவுகள் வெளியிடப்பட்டால், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் உடனே கண்டிக்க வேண்டும். அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோர வேண்டும். அதுதான் பண்பு.

தேர்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த பல விதிகள் உள்ளன. சமூக ஊடகங்கள், பொது ஊடகங்களில் இப்படித் தரக்குறைவாகவும் அவதூறாகவும் உண்மைக்கு முற்றிலும் மாறாகவும் பதிவிடப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சில சிறப்பு நடத்தை விதிகளை உருவாக்கலாம். இதை வளரவிட்டால், பரவப் போவது விஷமம் அல்ல விஷம்!

English summary
Senior Journalist Paa Krishnan expresses concern over the recent developments mud mud-slinging on the opponents and demoralising them by spreading statements far from truth. He insists the Election Commission to come out with some kind of regulatory measures to curb such bad taste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X