For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலைகள் விளைந்த நிலம்! - பகுதி 1

By Shankar
Google Oneindia Tamil News

- க ராஜிவ் காந்தி

'இந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. இதனால் அங்கிருந்து தினமும் 300 லாரிகளில் தமிழகத்திற்கு நெல் வரத்து உள்ளது.'

- இன்றைய (18.08.2017) தினத்தந்தி நாளிதழ் செய்தி.

'இந்த வாரம் மிஷினுக்கு போகணும்டா...' அம்மாவோ அப்பாவோ புதன், வியாழனிலேயே சொல்லிவிடுவார்கள். அக்ராஹாரத்தில் குடியிருந்தபோது நெல் கொட்டி வைக்க மரத்தாலான பத்தாயம் இருந்தது. இங்கே குதிர்தான். மண்ணால் செய்யப்பட்ட பகுதிகளை ஒன்றிணைக்கப்பட்டிருக்கும். மேற்பகுதியில் மண்ணாலேயே மூடி இருக்கும். கீழே அடிப்பகுதியில் ஒரு ஓட்டை இருக்கும். அதன் வழியாக நெல்லை பிடித்துக்கொள்ளலாம். குதிர் பார்க்காதவர்கள் மில்க் பிக்கிஸ் பாக்கெட்டில் பிஸ்கட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உருளையும் கூம்பும் சேர்ந்த வடிவத்தை கற்பனை செய்துகொள்ளவும்.

The Land of Murders

குதிருக்குள் இறங்க எனக்கு பயம். உள்ளே கும்மிருட்டாக இருக்கும். ஒரு சிம்னி விளக்கை பிடித்துக்கொண்டு உள்ளே இறங்குவது த்ரில்லான அனுபவம். வெளியே வந்த பிறகு சுனை உடம்பெல்லாம் பிடுங்கி தின்னும். ஆனால் நெல் தீரும் சமயத்தில் ஒரு ஆள் உள்ளே இறங்கித் தான் தள்ள வேண்டும். ஒருமுறை எடுத்தால் நான்கு அல்லது ஐந்து மரக்கால் எடுப்போம். அதனை முதல் நாள் இரவே ஊற வைத்து விடுவோம். நெல் அவிப்பதற்காகவே பெரிய குவளை ஒன்றும் நடுத்தர குவளை ஒன்றும் இருக்கும். அது தவிர அன்னக்கூடையும் கூட பயன்படுத்தப்படும். குவளையில் நெல்லை கொட்டி தண்ணீரை ஊற்றியதும் நெல்லில் ஒளிந்திருக்கும் ஒன்றிரண்டு கருக்காய்கள் மேலே எழும்பி வந்துவிடும். கருக்காய் என்பது அரிசி இல்லாத நெல். பதர்.

இரவு 7 மணிக்கெல்லாம் கொல்லைப்புறத்தில் அம்மா அடுப்பை எடுத்து வைத்து விடுவார். பெரும்பாலும் பொங்கல் அடுப்புதான். பொங்கலுக்காக ஒரு அடுப்பு தயாரிப்பார்கள். நான்கு செங்கல்களை ஒன்றாக அடுக்கி அதனை மண்ணைக் கொண்டு மெழுகினால் அடுப்புக்கான தூண்கள் தயார். ஐந்து தூண்களை வைத்து இரண்டு அடுப்புகள். இது எப்போதுமே வீட்டில் இருக்கும். நெல் அவிக்க அதனைத் தான் எடுப்பார்கள். குவளையைத் தூக்கி வைக்க நாங்கள் உதவி செய்வோம். 7 மணியில் இருந்து 10 மணி வரை நெல் அவியல் நடக்கும். அவிக்கப்பட்ட நெல்லை ஒரு மூலையில் கொட்டி வைப்போம். மறுநாள் காலையிலேயே தெருவில் கொட்டி காய வைப்போம். காக்கா விரட்டும் பொறுப்பு பாட்டிக்கு. அப்படி நெல் காய்ந்த பிறகு அது மிஷினுக்கு அரைக்க செல்லும்.

அப்பா நல்ல அரசு பணியில் இருந்தாலும் அம்மா, அப்பா இருவருமே விவசாயத்தை விட்டது இல்லை. செலவு செய்யும் தொகை, மெனக்கெடல், கூலி எல்லாம் கணக்கு பண்ணினால் ஆண்டுதோறும் நஷ்டம் தான் மிஞ்சும். பிள்ளைகள் நாங்கள் கடுமையாக திட்டுவோம். ஆனால் அம்மாவின் கொள்கை 'நாம் சாப்பிடும் சாப்பாடு நம் நிலத்தில் விளைந்ததாக இருக்க வேண்டும்'. மிஷினுக்கு போவது ஞாயிற்றுக்கிழமை அமைந்தால் நல்லது. சனிக்கிழமை சக்திமான் பார்க்க எந்த தடையும் இருக்காது. காயும் நெல்லை பர்த்துக்கொண்டே சக்திமானையும் பார்க்கலாம்.

ஒரே கோணியில் நான்கு மரக்கால் நெல்லையும் வைத்து கட்டி சைக்கிளில் எடுத்து செல்வேன். கேரியரில் ஒரு குச்சி வைத்து கட்டினால் க்ரிப் கிடைக்கும். அல்லது சைக்கிள் டயரில் இருக்கும் ட்யூப்பை வைத்து சைக்கிள் சீட்டோடு இணைத்து நெல்லை கட்டிக்கொள்ளலாம். சில நேரங்களில் இரண்டு மூன்று வீடுகளாக சேர்ந்து மாட்டு வண்டியில் எடுத்துசெல்வோம். மிஷினுக்கு போவது பிடித்தமான பணி. 5 லிருந்து 10 ரூபாய் வரை நமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அம்மாவே போண்டா வாங்கித் தின்னுக்க என்று கொடுப்பார். மெலட்டூரில் நான்கு நெல் அரைக்கும் மில்கள் இருந்தன. அதில் எங்கள் ஃபேவரைட் பராசக்தி ரைஸ்மில். எடை போட்டு க்யூவில் கொண்டு போய் மூட்டையை வைக்க வேண்டும். கரண்ட் இருந்தால் உடனே அரைக்கப்பட்டுவிடும். இல்லாவிட்டால் கரண்ட் வரை காத்திருக்க வேண்டும்.

நெல்லை கொட்டும் மெஷின் கவிழ்க்கப்பட்ட ஒரு பெரிய கூம்பாக இருக்கும். அதில் நெல்லை கொட்டுவார்கள். முதலில் அரிசியும் லேசாக தவிடும் சேர்ந்து வரும். தவிடு தனியாக பிரிக்கப்படும். இன்னொரு மெஷினை காத்தாடி என்பார்கள். அதிலிருந்துதான் அரிசி கொட்டும். இரண்டு பெரிய தட்டுகளில் மெஷினாலேயே சலிக்கப்பட்டு நொய் தனியாக, அரிசி தனியாக கல் தனியாக கொட்டும். அதில் கையை வைத்து பார்ப்பது பிடித்தமான ஒன்று. கொண்டு வந்த கோணிப்பையிலேயே கீழே தவிடு, நடுவில் அரிசி, அடுத்து நொய் என்று கட்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்புவோம். தவிடு மாட்டுக்கு. அரிசியை கொட்டி அளந்து அதற்கான டின்களில் நிரப்புவார்கள்.

இப்படித்தான் நெல்லில் இருந்து சோறு நமது தட்டுகளுக்கு வந்துகொண்டிருந்தது.

ஆனால் இன்று?

இதோ கதிராமங்கலம் போராட்டக் களத்திற்கு சொந்த ஊர் வழியாக போய்க்கொண்டிருக்கிறேன். மெலட்டூரில் மில்கள் எல்லாம் பூட்டிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு விவசாயமே பொய்த்துப்போன நிலையில் மில்களுக்கு எப்படி வேலை இருக்கும்? திருக்கருகாவூர், பள்ளியக்ரஹாரம், பாபநாசம் பகுதிகளில் இருந்த அவியல் மில்கள் கூட மூடப்பட்டுவிட்டன. எங்கேயாவது ஒன்றிரண்டு மில்கள் மட்டும் மிளகாய், மல்லி அரைக்க இயங்குகின்றன. வயல்களில் விவசாயம் செய்ததற்கான செய்வதற்கான சுவடுகளே இல்லை. ஆடு மாடுகளுக்கு புல் கூட இல்லை. எல்லா நீர் ஆதாரங்களுமே வறண்டு கிடக்கின்றன. பாலைவனத்துக்குள் தவறாக நுழைந்ததுபோலவே காட்சியளிக்கிறது டெல்டா.

The Land of Murders

பக்கத்து வீட்டில் துரை என்னும் பெரியப்பா இருந்தார். தவிட்டு வியாபாரம் செய்வார். சைக்கிளை ஓட்டிசென்று தவிடு எடுத்து தள்ளிக்கொண்டே வந்து அடுத்த ஊரான நாகலூரில் கொண்டு சேர்ப்பார். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வேலை இல்லை. ஐம்பது வயதுக்குமேல் வேலையில்லாமல் ஒரு மனிதர் வீட்டில் சும்மா இருப்பது எவ்வளவு வேதனையானது? அந்த வேதனையோடே சமீபத்தில் மறைந்தார். மில்லில் பணிபுரியும் அண்ணன்கள் மூட்டையை கட்டும்போது ஒரு தட்டை நீட்டுவார்கள். ஒரு கைப்பிடி அரிசியை போட வேண்டும். அவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்வார்கள்?

கிட்டத்தட்ட அழியும் நிலைக்கே வந்துவிட்டது விவசாயம் என்னும் நமது வாழ்வாதாரம். இது ஒரு தெளிவாக திட்டமிடப்பட்டு நடந்தேறிய பேரழிவு. இந்த பேரழிவில் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பங்கு உண்டு. நெல் விளைவிக்கப்படவில்லை. மில்கள் இயங்கவில்லை. பின்னர் எப்படி நமது தட்டுகளுக்கு அரிசி வருகிறது? எங்கிருந்தோ வருகிறது என்றால் அது திடீரென்று நிறுத்தப்பட்டால்? நாளை நம் பிள்ளைகளுக்கு இது நேர்ந்தால்...?

சாப்பிட நம் வீட்டில் இப்போதைக்கு சோறு இருக்கலாம். ஆனால் நம் மாநிலத்தில் விவசாயம் இல்லை. நெல் இல்லை. அரிசி விளைவிக்கப்படுவது இல்லை. இது எத்தனை அபாயகரமானது? இதையெல்லாம் உணரும் நிலையில் நாம் இல்லை. விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு ஓவியாவை காப்பாற்ற ஓட்டு போட்டுக்கொண்டிருக்கிறோம். காரணம் மிஸ்டு கால் கொடுத்து ஓட்டு போட்டு விவசாயத்தையோ, விவசாயிகளையோ காப்பாற்ற முடியாது என்பதே...

எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது தமிழ்நாட்டு விவசாயம்? அதில் நமக்கு இருக்கும் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.

- வி(ழி)தைப்போம்...

English summary
What is happening in Delta Districts? Is cultivation still going on? Here is Rajiv Gandhi's personal experience in Delta districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X