For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இருக்காது-ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், பசுமைத் தாயகம், காஸா ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு வேளாண்மை மன்ற சட்டமும் மரபு வேளாண்மை அறிவுரிமையும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.

உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான ராமதாஸ் பேசுகையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 தேவையில்லாதது, அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து, இந்த சட்டத்தினால் ஏற்படும் தீமையை பற்றி அவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு கருத்தரங்கிற்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம். வருகிற சட்டமன்ற உறுப்பினர்கள் வரட்டும்.

அடுத்ததாக, விவசாய பிரதிநிதிகள் சேர்ந்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள், தீமைகள், அந்த சட்டத்தால் வேளாண் சமுதாயம் பாதிக்கப்படுவது பற்றி விவாதிக்கலாம். அவரிடம் மனு கொடுக்கலாம்.

அதற்கும் தீர்வு ஏற்படாமல் போனால், அடுத்ததாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும்.

இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழனுக்கு இடம் இல்லை என்ற நிலை உருவாகும். சென்னையில் தற்போது தமிழனுக்கு சொந்தமாக இடம் இல்லை. வெளி மாநிலக்காரர்கள் நிலத்தை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். சிற்றூர் முதல் கிராமம் வரை விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு அதை ஏதோ ஒரு ஆங்கில பெயரில் நகராக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் விளை நிலங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. இன்னும் நாம் போராட வேண்டிய தளங்கள் ஏராளமாக உள்ளன என்றார்.

இயற்கை விவசாயத்தை அழித்து விட்டனர்:

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசுகையி்ல், அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை மன்ற சட்டத்தின்படி வேளாண் பட்டப்படிப்பு முடித்து ரூ. 1000 கட்டி, அந்த மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்தால்தான் விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க முடியும். வேறு யாரும் ஆலோசனைகள் வழஙகினால் முதல் தடவை ரூ.5,000மும், 2வது தடவை ரூ.10,000 மற்றும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வழி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

ஏற்கனவே பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயற்கை வேளாண்மையை அழித்து விட்டனர். வாழ்க்கை ஆதாரங்களை அழிக்க தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்கிறார்கள் என்றார்.

விவசாயிகளே இல்லாத நிலை உருவாகும்:

உழவர் பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் தேவிந்தர் சர்மா பேசுகையில், இந்த வேளாண் சட்டம் காரணமாக 2020ம் ஆண்டு தமிழகத்தில் விவசாயிகளே இல்லை என்ற நிலை உருவாகும்.

விவசாயிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

எம்எல்ஏக்களுக்கு எதுவுமே தெரியவில்லை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் பேசுகையில்,

தமிழக சட்டப்பேரவையில் கடைசியாக நடந்த கூட்டத் தொடரில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட்டன. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது.

குறிப்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து விவாதம் நடைபெறாததால், அச்சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. பேரவை உறுப்பினர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது பெரும் மோசடியாகும் என்றார்.

சாவு மணி சட்டம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் சட்டமாகும். இந்திய விவசாய முறை என்பது 5,000 ஆண்டு கால பாரம்பரிய அறிவின் தொகுப்பாகும். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் நம் விவசாயிகள்.

அத்தகைய பாரம்பரிய அறிவை நாம் ஒரே நாளில் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட முடியாது. பாரம்பரிய விவசாய அறிவின் அடிப்படையில்தான் விவசாயத் துறையை நவீனப்படுத்த வேண்டும். மாறாக பன்னாட்டு பணக்கார நிறுவனங்களின் நலன்களுக்காக, ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

சட்டம் நிறுத்தி வைப்பு-கருணாநிதி:

இந் நிலையில் விவசா‌யிக‌ளி‌ன் கரு‌த்து‌க்களுக்கு ம‌தி‌ப்பளித்து த‌மி‌ழ்நாடு வேளா‌ண்மை ம‌ன்ற‌ச் ச‌ட்ட‌ம்-2009யை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக முதல்வர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X