• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விடுதலையின் நிறம்

By Staff
|

Harriet Jacobsஅடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்க வழக்கத்தால்எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது.

இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக, சட்டங்களால் விற்பனைக்குரிய ஒருபொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது...

ஹேரியட் ஜேக்கபஸ்.. பல தலைமுறைகளாக அடிமை களாகவே வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து.. தானும் ஒர்அடிமையாகவே வாழ்வைத் தொடங்கினாலும், சாகும் போது ஒரு அடிமையாகச் சாகக்கூடாது .. தன் குழந்தைகளைஅடிமைகளாக விட்டுச் செல்லக் கூடாது என்ற உறுதியோடு வாழ்நாளெல்லாம் போராடி.. அதில் வெற்றியும் பெற்றஒரு அமெரிக்கக் கறுப்பினப் பெண்.

தன் வாழ்வில் தான் கடந்து வந்தவற்றை எவ்வித மிகையும் இல்லாத தெளிந்த எளிமையான நடையில் அவர் பதிவுசெய்திருக்கும் நூலே "விடுதலையின் நிறம்".

அமெரிக்கக் கறுப்பின மக்கள் சிக்கலின் ஆணி வேரை அறிந்து கொள்ள, அந்த இனச் சிக்கலை முழுமையாகப்புரிந்து கொள்ள, அமெரிக்காவில் நிலவி வந்த அடிமை முறை குறித்துத் தெரிய வேண்டும். அடிமையாக இருப்பதுஎன்றால் என்ன என்பது புரிய வேண்டும்.

அப்படி ஒரு புரிதலுக்கு வழிவகுக்கிறது ஹேரியட் ஜேக்கப்சின் இந்நூல்.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, ஏன், 20-ஆம் நூற்றாண்டிலும் கூடக்கறுப்பர்களை அடிமைகளாக வைத்துக் கொள்வது கெளரவத்தின் அடையாளமாகவும், இயல்பான ஒருநடைமுறையாகவும் இருந்து வந்துள்ளது. தலைமுறை தலைமுறையாக உயிரற்ற சொத்துக்கள் கைமாறும் போது,அடிமைகளும் அத்தகைய சொத்துக் களாகவே கருதப்பட்டு, உரிய ஆவணங்கள் மூலம் கைமாற்றப்பட்டனர்.

அடிமைப் பெண்ணின் குழந்தைகள், கேள்வியேயின்றி, அடிமைகளாகவே, தங்கள் தாயுடைய எஜமானரின்சொத்தாகவே கருதப்பட்டனர். உலகெங்கிலும் ஒடுக்கப்படுபவர்களிலேயே, மிக மோசமாக ஒடுக்கப்படுபவள்பெண் என்ற பேருண்மை இதிலும் வெளிப்படுகிறது. ஆண்களுக்கு உண்டான அத்தனை கொடுமைகளையும்அனுபவிப்பதோடு, கூடுதலாக, பாலியல் அடிப்படையிலான மன மற்றும் உடல் தொடர்பான கொடுமைகளையும்அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள் ஒரு கறுப்பின அடிமைப் பெண்.

கறுப்பின அடிமைப் பெண்கள் பலரின் குழந்தைகள், அவர்களின் எசமானர்களுக்குப் பிறந்ததாகவே இருக்கின்றன.தன் தந்தையின் வீட்டில், தன் உடன்பிறப்புகளுக்கிடையே, ஒரு அடிமையாக வளர்க்கப்படுகின்றனஅக்குழந்தைகள்.

பல நேரங்களில் தந்தையே மகளையும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் கொடூரங்களும் நடக்கின்றன. ஒருஅடிமைப் பெண்ணைப் பாலியல் முறையில் கையகப்படுத்துவதில் எசமானர்களான தந்தைக்கும் மகனுக்கும்இடையில் நடக்கும் மறைமுகப் போட்டிகள்.. தன் மகளைக் காக்கப் போராடும் அடிமைத் தாய்மார்கள்..இவையெல்லாம் அடிமையாக வாழவைக்கப் பட்டிருக்கும் பெண்களின் இழிநிலையை நமக்கு உணர்த்துகின்றன.

குழந்தைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு எங்கோ கண்காணாத இடங்களுக்கு விற்கப்படும் நிலையில்,அக்குழந்தைகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அத்தாய்க்கு அறவே அற்றுப் போகிறது.

இவ்வாறு உயிரும் உணர்வும் அற்ற ஒரு விலைப் பொருளாக மதிக்கப்படுவதும், அத்தகைய மதிப்பீட்டிற்கு மாறாக,உணர்வுகளை வெளிப்படுத்தினால் கிடைக்கும் கொடூமையான தண்டனைகளும் நம் கற்பனைக்கு எட்டாதஒன்றாகவே இருக்கின்றன.

Harriet Jacobsஹேரியட் தனது நூலில் பல இடங்களில் குறிப்பிடுவது போல், ஒரு அடிமையாக வாழ்வது என்றால் என்னஎன்பதைப் புரிந்து கொள்வதும், புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகக் கடினமாகவே இருக்கின்றன.

உணர்வுகளற்ற நிலை என்பதில்.. பசி, தூக்கம், வலி போன்ற அடிப்படை உணர்வுகளோடு, திருமணம், தாய்மை,குடும்பம் போன்ற சமூக உணர்வுகளும் எவ்வாறு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்பதை அவற்றைஅனுபவித்த ஒரு அடிமையின் வார்த்தைகளிலேயே அறிந்து கொள்வது.. மிக ஆழமான பாதிப்பைஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மட்டுமே நிலவி வந்த இந்த அடிமை முறை குறித்து, வட மாநிலங்களின்,ஹேரியட்டின் வார்த்தைகளில், "சுதந்திர மாநிலங்களின்", மக்களின் பார்வை மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது. "தந்தைவழி நிறுவனத்தின்" அழகிய அம்சமாக அங்கு அது சித்திரிக்கப்படுகிறது. அதிலும் தப்பியோடும் அடிமைகளைப்பிடித்து அவர்களது எசமானர்களிடமே திருப்பி அனுப்புவதில் எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இன்றிச் சுதந்திரமாநிலங்களின் மக்கள் செயல்படுகின்றனர்.

தப்பியோடிய அடிமைகள் குறித்த விளம்பரங்கள் சுதந்திர மாநிலங்களில் வெளியிடப்படுவதும், அவற்றின்அடிப்படையில் தகவல்களை அம்மாநில மக்கள் தப்பியோடிய அடிமைகளின் எஜமானர்களுக்குத் தெரிவித்துஅவர்களைப் பிடிக்க உதவுவதும் அன்றாட நிகழ்வுகளாகவே இருந்து வந்திருக்கின்றன.

தப்பியோடிய அடிமைகள் குறித்த தேடுதல் வேட்டை இந்நூலில் மிக விரிவாக விவரிக்கப்படுகிறது. அது போன்றஒரு தேடுதல் வேட்டையைப் பயன்படுத்தி, அடிமைகளின் வீடுகள் கொள்ளையடிக்கப் படுவதும், காரணமின்றிஅவர்கள் சவுக்கால் அடித்துச் சித்திரவதை செய்யப்படுவதும், ஊரே ரண களமாக, எங்கும் இரத்தம் கட்டி நிற்க,இரவு முழுவதும் கேட்கும் அடிமைகளின் அலறல்களும், மனத்தைப் பதைக்கச் செய்கின்றன.

அதன் உச்சக்கட்டமாக, அமெரிக்க அரசே தப்பியோடிய அடிமைகள் குறித்த ஒரு மோசமான சட்டத்தை இயற்றி,அடிமை முறையைச் சட்டப்படி மேலும் இறுக்கமானதாக மாற்றுகிறது.

அடிமைகள் தப்பியோடுவதைத் தடுக்கச் சட்டமுறையிலான முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், மதச்சார்பான அச்சுறுத்தல்களும் நடைபெற்று இருப்பதை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கறுப்பின மக்கள் கிறித்தவ மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். தேவாலயங்களிலும்வழிபாடுகளிலும் அவர்கள் ஒதுக்கப்பட்ட போதும், தங்கள் மத நம்பிக்கைகளை விடாமல் காத்துவந்திருக்கின்றனர்.

அடிமை நிலையிலிருந்து விடுபட எண்ணுபவர்களுக்குச், சிறிய அளவிலேனும் எதிர்ப்புக் காட்டுபவர்களுக்கு,அளிக்கப்படும் கொடுமையான தண்டனைகள் மூலம், அத்தகு எண்ணமே பிறருக்கு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் வெள்ளையர் கூட்டம். அதற்குத் துணையாக மத உணர்வுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள், தங்கள் எசமானர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.இல்லையேல் அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இறைவனின் சபையில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என்பது போன்ற அறிவுறுத்தல்களின் மூலம் கறுப்பின மக்களை எப்போதும் ஒருவித அச்சத்திலேயேவைத்திருக்க மதம் பயன்பட்டிருக்கிறது.

ஹேரியட் தீவிர மத நம்பிக்கையோடே இறுதி வரை வாழ்ந்தார் என்ற போதும், இத்தகு மதச் சார்பானஅச்சுறுத்தல்களை நம்பாமல், இவை வெள்ளையரின் சூழ்ச்சி என்ற புரிதலோடு இருந்திருக்கிறார் என்பது மிகுந்தவியப்பளிக்கிறது.

ஒரு அடிமைக் குடும்பத்தில், அடிமைப் பெற்றோருக்குப் பிறந்து, ஒரு அடிமையாகவே வாழ்ந்து வந்த போதும்எந்தக் கட்டத்திலும் தன் மதிப்பை விட்டுக் கொடுக்கத் துணியாதவராகவே அவர் வாழ்ந்து வந்திருக்கிறார் என்பதுகவனத்திற்குரியது.

மேலோட்டமாக நோக்குகையில், அவரது வாழ்நாள் போராட்டம் அடிமை நிலையிலிருந்து விடுதலைக்கானபோராட்டமாகத் தென்பட்டாலும், அடிப்படையில் அவரது தன் மதிப்பைக் காக்க அவர் நடத்தியபோராட்டமாகவே அது இருக்கிறது.

Harriet Jacobsமிகச் சிறிய வயதிலேயே கூட தனது எசமானர் தன்னை வைப்பாட்டியாக வைத்திருக்க நினைத்து அதற்காக அவரைஅச்சுறுத்தியும், துன்புறுத்தியும் பல வகையில் முயன்ற போதும் கூட மிக உறுதியாக அதற்கு உடன்படாதநிலையிலேயே தன் மதிப்பைக் காப்பதற்கான அவரது போராட்டம் தொடங்கி விடுகிறது.

ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகள் அடிப்படையிலான மறுப்பாக மட்டும் அது இருக்கவில்லை. தனக்கு விருப்பம்இல்லாத ஒருவரோடு அவரது அச்சுறுத்தலுக்குப் பணிந்து எவ்வித உறவும் வைத்துக் கொள்ள விரும்பாத ஒருபெண்ணின் தன்மதிப்பாகவே அது இருக்கிறது.

ஹேரியட் தானும் தன் குழந்தைகளும் விடுதலை பெற வேண்டும் என்று மனதார விரும்புகிறார். அதற்காகவே வாழ்நாளெல்லாம் போராடுகிறார். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிக மிகக் குறுகலான, பொந்து போன்ற ஒருஇடத்தில், தன் பாட்டியின் வீட்டுப் பரணில், 7 ஆண்டுக் காலம் மறைந்து வாழ்கிறார்.

அதே வீட்டில் இருக்கும் தன் குழந்தைகளைக் கூடச் சந்திக்காமல், அவர்களுடன் அளவளாவும் ஆவல்களைஅடக்கிக் கொண்டு, தனது இருப்பிடத்தில் தானே ஏற்படுத்திக் கொண்டு ஒரு சிறு சந்தின் வழியாகவே தனதுகுழந்தைகளை, அவர்கள் அறியாமல் காண்பதிலேலே மகிழ்ச்சி கொள்கிறார். அதனால் உடல் நலம் கெட்டு,அங்கிருந்து தப்பிச் சுதந்திர மாநிலங்களுக்குச் சென்ற பிறகும் கூடக் கை கால்களை இயல்பாக அசைக்க முடியாமல்பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்.

இத்தனை துயரங்களுக்குப் பிறகும், அவரது எசமானர், அவரை அவரிடமே விற்பதன் மூலம் அவருக்கு விடுதலைஅளிக்க முன் வரும் போது அதை மறுக்கிறார். அங்குதான் ஹேரியட் உயர்ந்து நிற்கிறார். அவர் நினைத்திருந்தால்அந்த உடன்பாட்டிற்குச் சம்மதித்து அவர் எளிதில் விடுதலை பெற்றிருக்கக் கூடும்.

ஆனால் தன்னைத் தானே ஒரு விற்பனைப் பொருளாக ஏற்க அவரது தன்மதிப்பு இடம் கொடுக்கவில்லை.

"என்னைக் கொடுமையாக அடக்கி ஒடுக்கியவர்கள் யாரோ, அவர்களிடமே பணம் கொடுத்து என்னை விலைக்குவாங்குவது என் துன்பங்களால் ஏற்பட்ட வெற்றிப் பெருமிதத்தை அகற்றிவிடுவதாகத் தோன்றியது"

ஆனால் அவரது விருப்பத்தையும் மீறி, அவர் மீது அக்கறையும் அனுதாபம் கொண்டு அவருக்கு அடைக்கலம்அளித்துக் காத்த வெள்ளைப் பெண்மணி ஒருவர் அவருக்குத் தெரியாமல் அவர் எசமானரிடமிருந்து ஹேரியட்டின்பெயரிலேயே அவரை வாங்கி அவருக்கு விடுதலை அளித்த போது, மகிழ்வதற்குப் பதிலாக இடிந்து போகிறார்.

"விற்பனைச் சீட்டு. இந்த வார்த்தைகள் என்மேல் பலத்த அடியாக விழுந்தன. கடைசியாக நான்விற்கப்பட்டுவிட்டேன்.

சுதந்திரத்தின் நகரமான நியூயார்க்கில் மனிதர்களே விலைக்கு விற்கப்படும் நிலை. விற்பனைச் சீட்டில் இதுபதிவாகியுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நியூயார்க்கில் பெண்கள் விற்பனைக்குரியபொருட்களாக இருந்தார்கள் என்று வருங்காலத் தலைமுறையினர் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

பிற்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாகரீக முன்னேற்றத்தை அளந்தறிய விரும்பும் ஆய்வாளர்களுக்குஇது ஒரு பயன்மிக்க ஆவணமாக இருக்கும். இந்தத் துண்டுக் காகிதத்தின் மதிப்பு எனக்குத் தெரியும்.

ஆனால் சுதந்திரத்தை நான் அதிகமாக நேசிப்பதால் அந்தச் சீட்டைப் பார்ப்பதற்கு விரும்பவில்லை. அதைப்பெற்றுத் தந்த தாராள மனம் கொண்ட அந்தத் தோழிக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளேன். சட்டப்பூர்வமாகதனக்குச் சொந்தமில்லாத ஒன்றுக்காகப் பணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரத்தோடு உரிமை கோரிய அந்தப்போக்கிரியை நான் இழிவாகக் கருதினேன்."

வெள்ளையர்களிலும் தனக்கு உதவி புரிந்த நல்லவர்களைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்யும் அதேவேளையில், தங்களுக்கான அங்கீகாரத்திற்காக, தன் நலனுக்காகக், காட்டிக் கொடுக்கவும், வெள்ளையர்களைவிடக் கொடுமையாக நடக்கவும் முனைந்த கறுப்பர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.

நூலின் முற்பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் நீண்ட முன்னுரைகளும், நூலின் போக்கில் அளிக்கப்படும்குறிப்புகளும், பிற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஹேரியட்டின் கடிதங்களும், இந்நூலின் செய்தியை மேலும்முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

மிக எளிமையான ஒரு நடையில், நேரில் பேசுவது போல் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அமெரிக்கக் கறுப்பினமக்களின் சிக்கல்கள் குறித்து ஒரு புதிய தெளிவை ஏற்படுத்துகிறது.

அதோடு, தமிழ்நாட்டிலும் பண்ணையாள் முறை என்பது போன்ற பெயர்களில், ஒடுக்கப்பட்ட மக்கள் விற்கப்பட்டுஅடிமைகளாக வாழவைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த பதிவுகளை ஆங்கிலேய அதிகாரிகள் பலர்செய்திருக்கிறார்கள்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பண்ணை அடிமை நிலவியது என்பதற்கு அவை ஆதாரங்களாகத் திகழ்கின்றன.இந்தக் குறிப்புகளை ஒருங்கு திரட்டி ஆராயும் பணிமேற்கொள்ளப் படவில்லை என்பது வருந்துவதற்குரியது.

கறுப்பின மக்களின் தற்போதைய சிக்கல்கள் குறித்துப் புரிந்து கொள்ள "விடுதலையின் நிறம்" நூல் எவ்வாறுஉதவுகிறதோ, அதைப் போலவே இன்றும் நம்மிடையே இருக்கும் சாதியப் பாகுபாடுகளின், ஒடுக்குமுறையின்கொடிய தன்மைகள் குறித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை குறித்தும் பெரிதும் தெளிவை உண்டாக்கஅவை போன்ற பதிவுகள் தேவையென்றே கருதுகிறேன்.

விடுதலையின் நிறம்

- ஹேரியட் ஜேக்கப்ஸ்

விடியல் பதிப்பகம்

11, பெரியார் நகர்,

மசக்காளிப்பாளையம் வடக்கு,

கோவை

500 பக்கங்கள் விலை: ரூ. 240

- பூங்குழலி(seide@md2.vsnl.net.in)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X