துபாயில் நபிகள் நாயகம் குறித்த அருங்காட்சியகம்
துபாயில், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்த முடிவு, துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணைய தலைவர் ஷேக் மயாத் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடந்த ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது போதனைகள் உள்ளிட்டவை உள்பட நபிகள் குறித்த அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இந்த அருங்காட்சியகம் விளங்கும்.
மேலும், நபிகள் நாயகத்தின் உண்மையான வரலாற்றை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு அறிவிக்கும் மையமாகவும் இது திகழும். வரலாற்றை திருப்பிப் போட்ட மாற்றங்களுக்கு நபிகள் ஆற்றிய பங்கையும் இது எடுத்துரைக்கும்.
உலக அளவில் நபிகள் நாயகம் குறித்த முதல் அருங்காட்சியமாக இது திகழும் என்று மக்தூம் கூறியுள்ளார். இந்த அருங்காட்சியகம், கிழக்குக்கும், மேற்குக்கும் இடையிலான பாலமாக திகழும் என்றும் அவர் கூறினார்.