For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையில் வீரவாஞ்சிக்கு மணி மண்டபம் - அரசு ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

செங்கோட்டை: பெரும் இழுபறிக்குப் பின்னர், நீண்ட தாமதத்திற்குப் பின்னர் செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடினால் பாரத தேசம் விடுதலை பெற போவதில்லை, ஆயுதம் ஏந்தி போராட வேண்டும், அப்போதுதான் ஆங்கிலேயன் அஞ்சுவான் என்று முடிவெடுத்து 1911-ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை செங்கோட்டை சிங்கம் வீரவாஞ்சிநாதன் காலை 10.50க்கு சுட்டு கொன்றார்.

கயவர்கள் பிடிப்பதற்காக சூழ்ந்த நிலையில் அவர்களது கையில் சிக்க எண்ணாது தன்னை தானே சுட்டு தன்னுயிரையும் மாய்த்து கொண்டு வீரமரணம் அடைந்த மாவீரனுக்கு நினைவு மண்டபம் கட்ட அப்போதைய தமிவக முதல்வர் காமராஜர் செங்கோட்டை முத்துசாமி பூங்கா வளாகத்தில் 8-8-1957 அன்று அடிக்கல் நாட்டினார்.

அதன்பின் வந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எந்த கட்சிகளும் மணிமண்டபம் கட்டுவது பற்றி அறிவிக்கவில்லை. அடிக்கல்லும் அனாதையாகியது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் செங்கோட்டை வந்து காங்கிரஸ் கட்சியினர் உதவியோடு காமராஜர் நாட்டிய அடிக்கல்லை தேடி பிடித்து நகராட்சி அலுவலகத்தில் ஓப்படைத்தார். அதன்பின் பல ஆண்டுகாலமாகவே வீரவஞ்சிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், வீரவாஞ்சிநாதன் குடுமபத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் நடைபெறும் வீரவாஞ்சி நினைவு நாளில் வலியுறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 8-6-09 அன்று தியாகி கோதையம்மாள் நெல்லை ஆட்சி தலைவரிடம் வீரவாஞ்சி மணிமண்டபம் அமைக்க மனு கொடுத்தார். மேலும் கடந்த 17-6-09 அன்று செங்கோட்டையில் நடந்த விரவாஞ்சி 98வது வீரவணக்க நாளில் அஞ்சலி செலுத்த வந்த அவரது குடும்பத்தினர், தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் வீரவாஞ்சிக்கு மணி மண்டபம் கட்ட கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்து நெல்லை ஆட்சி தலைவர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு நேற்று அவசர தகவல் அனுப்பியுள்ளது.

அதனை தொடர்ந்து செங்கோட்டை தாசில்தார் ரவிசங்கர், மற்றும் வருவாய்துறையினர் கோதையம்மாளிடம் தகவல்களை பெற்றுள்ளனர். மேலும் வீரவாஞ்சிநாதன் தம்பி மகன் ஹரிஹரசுப்பிரமணியனிடமும் வீரவாஞ்சி குறித்த தகவல்களை பெற உள்ளனர்.

நகராட்சி தீர்மானம், பத்திரிக்கை செய்திகள், அடிக்கல், மணி மண்டபம் அமைக்க வேண்டிய இடம் குறித்தும் ஆய்வு செய்து இன்று மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

காமராஜர் அடிக்கல் நாட்டி 52 ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் கலைஞர் அரசு வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரவாஞ்சிநாதன் தம்பி மகன் ஹரிகரசுப்பிரமணியன் கூறும்போது, எனது பெரியப்பாவின் 98வது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் கலைஞர் செங்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பது பெருமையாக உள்ளது.

இந்த பெருமை செங்கோட்டை நகருக்கே சாரும். காமராஜரின் கனவை கலைஞர் நிறைவேற்றுவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

இந்த நிலையில், செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணி மண்டபம் அமைக்கும் இடத்தையும், அவர் வாழ்ந்த வீட்டையும், காமராஜரால் 8-8-1957ல் நாட்டப்பட்ட அடிக்கல்லையும் தென்காசி கோட்டாட்சி தலைவர் சண்முகநாதன் இன்று பார்வையிட்டார்.

அவருடன் செங்கோட்டை தாசில்தார் ரவிசங்கர், ஆணையர் அசோக் குமார், வாஞ்சி இயக்க தலைவர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X