For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''பசியும் மருந்தாகும்''

By Staff
Google Oneindia Tamil News

ஆக்கம்: டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை

மனிதனின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வன இஸ்லாமியக் கொள்கைகள்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகள் - கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் - மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன.

"இறைவன் ஒருவனே, அவனே வணங்குவதற்குரியவன்" என ஏற்கும் பொழுது பிறப்பு, தோல், நிறம், பேசும் மொழி, வாழுமிடம் ஆகியவற்றால் தோற்றுவிக்கப்படும் வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. ஐந்து வேளை கூட்டுத்தொழுகை, உயர்வு, தாழ்வு, செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாட்டை நீக்கி விடுகிறது. ரமளான் நோன்பு பசியை உணர வைத்து, சக மனிதர்களின் சிரமத்தை உணர்த்தி விடுகிறது. ஸகாத் என்ற ஏழைவரி (வருமானத்தில் ஆகுமான செலவு போக மீதமுள்ள பணத்தில்) செல்வம் ஓரிடத்தில் தங்காமல் பகிர்ந்து கொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ஹஜ் மனித சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், அமைதியையும் உலகுக்கு எடுத்துக்காட்டி விடுகிறது.

மறுமை வாழ்வு, நீதித் திருநாள், கேள்வி கணக்கு சுவனம் என்பன பற்றி மனிதனுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்துவதற்கு உதவுவதாக திருமறையும், திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமைந்துள்ளன. இவற்றில் மூன்றாவது கடமையான ரமளான் நோன்பு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரமளான் என்ற சொல் கரித்தல், சுட்டெரித்தல் என்ற பொருள் கொண்டது. விறகை தீ எரிப்பது போல நோன்பு பாவங்களை எரித்து விடுகிறது என்பதால் நோன்பு கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமளான் என்றழைக்கப்படுகிறது. இம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம், பொறுமையின் மாதம், ஈகையின் மாதம் என நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்.

ரமளான் மாதம் பகற்பொழுதில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பரிசுத்தவான்களாகலாம் (2:183,185) என வான்மறை விளக்குகிறது.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட "ஸுஹுபுகள்" என்ற வேதக்கட்டளைகளும், தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களும் வழங்கப்பட்ட புனித மாதமாக ரமளான் அமைந்துள்ளது. மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டி நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் இருப்பதால், அம்மாதத்தை கடமையான நோன்பு நோற்கும் காலமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். (2:185) ஹிஜ்ரி 2ம் வருடம் முதல் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக்கப்பட்டது.

உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை பகற்காலங்களில் தவிர்ப்பது என்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. நோன்பு நோற்றிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாயமாகும். இதனைத் தவிர்க்காமல் உணவையும் பானத்தையும் விட்டிருப்பதால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு மாத நோன்பு, உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவுகின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது.

உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மிருக உணர்வுகள் களைந்து எறியப்படுகின்றன. உணவு, பானம், உறக்கம் ஆகியவற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது. நோன்பு நோற்பவரின் உள்ளத்தில் உயர்ந்த இறையுணர்வைத் தூண்டுகிறது. அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.

வீண்பேச்சு, பொய், புறங்கூறல், சண்டை -சச்சரவு, காமப் பார்வை முதலியனவற்றைத் தடுத்து, ஒழுக்க உணர்வுகளைப் பரிணமிக்க செய்வதால் நோன்பு ஒரு கேடயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "பசித்திருத்தல் ஓர் அருமருந்து" (லங்கனம் பரம ஒளஷதம்) என்பது முதுமொழி.

தனித்திருப்பதும் பசித்திருப்பதும் விழித்திருப்பதும் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்ட வல்லன. பிராணிகள் நோயுற்றால் இறை தின்ன மறுத்து விடுகின்றன. விரைவாக நலம் பெற அது உதவுகிறது. மனிதனுக்கும் அது பொருந்தும். ஏனெனில் வயிறு ஒரு கெட்ட பாத்திரம். உடல் நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

'வயிறு நலமுடன் பேணப்பட்டால் உடல் நலமும் பேணப்படுகிறது" என்பது நபிமொழியாகும்.(பைஹகீ) “ நம்பிக்கையாளர் ஒரு வயிற்றில் உண்ணுகிறார். இறைமறுப்பாளர் ஏழு வயிற்றில் உண்ணுகிறார்" என்பதும் நபிமொழி (திர்மிதீ). அதாவது அளவுக்கதிகமாக உண்ணுகிறார் என்பது கருத்து.

“உண்ணும்பொழுது வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும். மற்றொரு பகுதி தண்ணீருக்கும், இன்னொரு பகுதி காலியாகவும் இருக்கட்டும்" என்பது நபிமொழியாகும் (திர்மிதீ) அதுவே உணவின் அளவாகும்.

“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற மாமறையின் வழியைப் பின்பற்றி வாழ்ந்த வழிகாட்டிகளான பெரு நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர் என வரலாறு பதித்திருக்கிறது. அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது.

''அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு'' (திருக்குறள்-943)

எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும். ஏனெனில் நோன்பு என்ற நற்செயல் உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது.

“நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே" என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார்.

மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குனர்)

“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நலம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது" மேலும் கூறுகிறார்.

“அமெரிக்கார்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது."

“நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக்கத்தை சமநிலைப்படுத்துகிறது."

“பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. ஆகவே தான் மனித குலம் தோன்றியதிலிருந்து ஏதாவதொரு வகையில் நோன்பு நோற்பது பின்பற்றப்பட்டு வந்துள்ளது."

அனைத்தையும் அறிந்த அல்லாஹ், ரமளான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பு நோற்பதைக் கடமையாக்கி, நம் உடல் நலம் பேண உதவி செய்துள்ளான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நற்செயல்களுக்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பாளிக்கு அல்லாஹ்வே நன்மை வழங்குகிறான். “நோன்பு எனக்காக நோற்கப் படுகிறது அதற்கு நானே கூலி வழங்குகிறேன்" என அல்லாஹ் கூறுகிறான். 'ரய்யான்" என்ற தனி சுவனமே நோன்பாளிகளுக்கு மட்டும் காத்திருக்கிறது.

உடல் நலத்தை வழங்கி, நீண்ட ஆயுளையும் தந்து, இறைவனின் அன்பைப் பெற்றுத் தரும் ரமளான் நோன்பு நமக்கு மிகப்பெரும் நற்பேறே!

“ரமளான் மாதத்தை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும் வரை என் சமூகத்தார் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறிய சொற்களை நினைவில் கொள்வோம்.

நன்றி: சிந்தனை சரம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X