For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டுவிழா

Google Oneindia Tamil News

Somasundaranar
- முனைவர் மு.இளங்கோவன்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் (05.09.1909) நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் மேலைப்பெருமழையில் 05.09.2010 (ஞாயிற்றுக் கிழமை), காலை பத்து மணிமுதல் பகல் ஒருமணிவரை கொண்டாட விரும்புகிறோம்.

புலவர்பெருமான் அவர்கள் தமிழ் நினைவில் தோய்ந்திருந்ததால் குடும்பவளர்ச்சியில் நாட்டமில்லாமல் திகழ்ந்துள்ளார். அவர் பிள்ளைகளுக்கே ஐயாவின் பெருமை முழுமையாகத் தெரியாமல் உள்ளது. அவர் ஊரினரும் ஓரளவே ஐயா பற்றி அறிவார்கள். இந்த நிலையில் மேலைப்பெருமழை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருவாளர் சோ. இராசமாணிக்கம் அவர்களும் இன்றைய ஊராட்சி மன்றத்தலைவர் திருவாட்டி வேதவள்ளி இராசமாணிக்கம் அவர்களும், மேலைப்பெருமழையில் பிறந்து, தஞ்சாவூரில் வாழ்ந்து வரும் திரு.சிவபுண்ணியம் அவர்களும் புலவர் பெருமானின் நூற்றாண்டு விழாவை நடத்த இயன்ற உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர்.

தமிழுக்கு உழைத்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் பெருமையை உலக அளவில் தெரிவிக்கவும் பதிவு செய்யவும் விரும்புகிறோம்.

ஆர்வமுடைய தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,அயல்நாடுகளில் வாழும் தமிழன்பர்கள் இணைந்து ஐயாவின் பெருமையினை நினைவுகூரப் பணிவுடன் அழைக்கின்றேன்.ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப நிகழ்வாக இதனைக் கருத வேண்டும்.

பெருமழைப் புலவரின் அறிவாற்றலையும் தமிழ்ப்பணிகளையும் குறித்துக் கருத்துரைக்க விரும்புபவர்கள் அவரவர் சொந்தப் பொறுப்பில் வந்து சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

பெருமழைப் புலவருக்கு விழா ஒன்று எடுத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ ஐயா அவர்களிடம் தெரிவித்துக் கலந்துரையாடினேன். துணைவேந்தர் அவர்களுக்கு அந்த நிகழ்வில் பங்கெடுக்கும் பேரார்வம் இருந்தும் குறிப்பிட்ட நாளில் தவிர்க்க இயலாத காரணத்தால் அவர்கள் சென்னையில் இருக்கவேண்டிய நிலை உள்ளதை உணர்த்தினார்கள். எனினும் அவர்களின் பேரன்பையும் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள். அவர்களை அடுத்துச் செந்தமிழ் அந்தணர் மதுரைப் புலவர் இரா. இளங்குமரனார் அவர்களைக் கலந்துகொள்ள வேண்டினேன். புலவர் அவர்கள் அன்றைய நாளில் அரியலூரில் ஒரு திருமணம் நடத்தி வைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளார்கள். அதனால் மாலையில் வைத்தால் கலந்துகொள்ள இயலும் என்ற தம் தமிழார்வத்தைப் புலப்படுத்தித் தம் அன்பான வாழ்த்தைத் தெரிவித்தார்கள்.

சிங்கப்பூர் தமிழ் அன்பர் திரு முஸ்தபா அவர்கள் பெருமழைப்புலவரின் மேல் பெருவிருப்பம் கொண்டவர்கள். அவர்களின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் ஒரு திட்டம் வரைந்து வழங்கும்படியும் வேண்டினார்கள்.அன்றைய நாளில் வேறொரு முதன்மையான பணியில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பில் தாம் கலந்து கொள்வதாக உறுதி செய்து வாழ்த்தினார்கள்.

புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கவும் நிகழ்ச்சி சிறக்கவும் பலர் ஆர்வம்காட்டி ஊக்கமூட்டி வருகின்றனர்.

நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு புலவர்பெருமானின் அறிவாற்றலையும், சங்க இலக்கியத் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூரும் அறிஞர்களின் பட்டியல் பின்வருமாறு:

முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள்,தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்

முனைவர் மு.இளமுருகன் தமிழ்ப்பேராசிரியர், த.உ.ம.கலைக்கல்லூரி,கரந்தை,தஞ்சாவூர்

முனைவர் அரங்க.சுப்பையா ,மேனாள் தமிழ்ப் பேராசிரியர், த.உ.ம.கலைக்கல்லூரி, கரந்தை, தஞ்சாவூர்

புலவர் உதயை மு.வீரையன் அவர்கள்,சென்னை

முனைவர் ஒப்பிலா.மதிவாணன்(இயக்குநர்,பதிப்புத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் சு.தமிழ்வேலு அ.வ.கல்லூரி,மன்னம்பந்தல்,மயிலாடுதுறை

முனைவர் தஞ்சை நா.தனராசன், தமிழ்த்துறைத் தலைவர், திரு.வி.க.அரசு கலைக்கல்லூரி, திருவாரூர்

பாவலர் நாச்சிக்குளத்தார்(பெருமழைப்புலவரின் மாணவர்)

திரு.நாகை எழில்கோ,தமிழாசிரியர்,தென்னம்புலம்

முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,புதுச்சேரி),

அன்பர்களின் வருகைக்கு ஏற்ப விழா அரங்கில்தான் சிறப்புரை, கருத்துரைஞர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். ஆனால் நிகழ்ச்சி வசதிக்காக ஒரு கிழமையில் ஒரு மாதிரி நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு செய்யப் பெறும்.

விழாக்குழுவினருடன் தொடர்புகொள்ள விரும்புவோர் பின்வரும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

திரு.சோ.பசுபதி(புலவரின் தலைமகன், மேலைப் பெருமழை) + 91 9698985730

திரு.சோ.இராசமாணிக்கம் (ஊ.ம.தலைவர், மேலைப் பெருமழை) + 91 9842425215

திரு.சி.சிவபுண்ணியம்(தஞ்சாவூர்) + 91 9443126615

திரு.இரவி (திருத்துறைப்பூண்டி) + 91 9443806094

முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி) + 91 9442029053

திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் பாண்டி என்ற ஊரில் இறங்கி மேலைப்பெருமழையை எட்டுக் கல் தொலைவு தானியில்/ பேருந்தில் அடையலாம்.

நன்றி: http://muelangovan.blogspot.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X