For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேயாப் பல்கலைக்கழகத்தைப் பார்த்தேன்...!

By Chakra
Google Oneindia Tamil News

Malay University
மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறை தனிநாயகம் அடிகளார் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. அத்தகு பெருமைக்குரிய இடத்திற்குப் பேராசிரியர் மன்னர்மன்னன் அழைத்துச்செல்ல விரும்பினார். அப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் மன்னர்மன்னன் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். அத்துறையில் பேராசிரியர் கி.கருணாகரன் அவர்கள்(முன்னைத் துணைவேந்தர்,தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்),பேராசிரியர் மோகன்லால்(இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) ஆகியோர் வருகைதரு பேராசிரியர்களாகப் பணிபுரிவதாக அறிந்தேன். அவர்களைக் காணவும் இந்தியவியல்துறையில் உள்ள பேராசிரியர் நண்பர்களைக் கண்டு மகிழவும் சென்றேன்(24.05.2010).

காலையில் 9 மணி அளவில் சென்றேன். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் அங்கு ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் பல பேராசிரியர்கள் வெளியிடப்பணிகளில் இருந்ததாக அறிந்தேன். எனவே கி.கருணாகரன் ஐயா அவர்களுடன் ஐந்தாறு பேராசிரியர்கள் தமிழ், மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல் பற்றிய பல தலைப்புகளில் உரையாடினோம். ஐயா கருணாகரன் உலக அளவில் நடைபெறும் மொழியியல் ஆய்வுகள் பற்றியும் தம் மிக்சிகன் பல்கலைக்கழகப் பணிப்பட்டறிவு பற்றியும் எடுத்துரைத்தார்கள். திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள நாட்டுப்புற இசை மரபுகளில் ஒற்றுமைகளைப் பாடிக்காட்டி நான் விளக்கினேன். என் ஆய்வு முயற்சியைத் தொடரும்படி அனைவரும் வற்புறுத்தினர்.

அலுவலக வேலைகளை அனைவரும் முடித்துக்கொண்டு நகரத்திற்குப் புறப்பட்டோம். பேராசிரியர் வ.செயதேவன் (சென்னைப் பல்கலைக்கழகம்) அவர்கள் ஒரு புறநிலைத் தேர்வாளராக வாய்மொழித் தேர்விற்காக வந்து விடுதியில் தங்கியிருந்தருந்தார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு அனைவரும் பதிப்பாளர் சோதிநாதன் ஐயாவைக் காணச் சென்றோம். எங்கள் சந்திப்பு பகலுணவு உண்ணுவதாகவும் உரையாடுவதாகவும் அமைந்தது. பலதரப்பட்ட தமிழ்சார்ந்த செய்திகளை உரையாடினோம்.

திரு.சோதிநாதன் ஐயா அன்பும் அடக்கமும் நிறைந்த பெரியவர். அவர்களின் பதிப்புப் பணிகள் பற்றி நான் பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். மலேசியாவின் புகழ்பெற்ற பதிப்பகமான உமா பதிப்பகத்தின் உரிமையாளர் அவர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பெருமைக்குரியவர். அனைவரும் உணவு முடித்து ஐயா சோதிநாதன் அவர்களின் உமா பதிப்பகம் சென்றோம்.

இன்றைய பதிப்பு நிலை பற்றி ஐயா பல செய்திகளை மனம் திறந்தார். மலேயாவில் பள்ளி சார்ந்த நூல்கள் நன்கு விற்பனையாவதைத் தெரிந்து கொண்டேன். தமிழகத்திற்கு மலேசியாவிலிருந்து நூல்கள் வருகின்றன. அதுபோல் கல்வியியல் சார்ந்த பல இலங்கை எழுத்தாளர் நூல்களை ஐயா எங்களுக்குக் காட்டி மகிழ்ந்தார்கள். தமிழகத்திற்கும் மலேசியாவுக்கும் இடையே விலையில் ஏற்றத்தாழ்வுகள் மிகுதியாக இருந்தன.

அனைவரையும் பல்கலைக்கழகத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு நானும் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்களும் சில பொருட்களை வாங்க கோலாலம்பூர் கடைத்தெருவுக்கு வந்தோம். தமிழர்களின் கடைகள் பல தெரிந்தன. மசூதி இந்தியா பகுதியில் சில பொருள்கள், துணிகள் வாங்கிக் கொண்டு இரவு 7.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் திரும்பினோம். இளந்தமிழ் இல்லத்தில் இருந்த என் பைகளை ஒரு மகிழ்வுந்தில் எடுத்து வைத்துக்கொண்டு சிறப்புரை நடக்க உள்ள விடுதிக்கு வந்தோம்.

பேராசிரியர் மன்னர் மன்னன் அவர்களின் அன்புக்குக் கட்டுண்ட பல தமிழுணர்வாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றி என்னை உரையாற்ற பேராசிரியர் அவர்கள் பணித்தார்கள். திரு.இளந்தமிழ் அவர்கள் வரவேற்று உரையாற்றினார். என்னை அறிமுகம் செய்து மன்னர் அவர்கள் சிறு அறிமுகத்தை வழங்கினார்கள் ஒரு மணி நேரம் என் உரையும் கலந்துரையாடலும் இருந்தது. பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இரவு 10 மணியளவில் ஒரு விடுதியில் உணவுக்கூடத்தில் அனைவரும் ஒன்றுகூடினோம். நிகழ்ச்சிக்கு ஐயா மாரியப்பனாரும் அருள்முனைவரும், முனியாண்டி அவர்களும் வந்து இணைந்து கொண்டு உணவுக்கூடத்துக்கும் வந்தார்கள்.

என் உடைமைகள் நண்பர் முனியாண்டியின் மகிழுந்து வண்டியில் ஏற்றிகொண்டு விடுதியில் உணவுக்கு ஒன்றுகூடினோம். மாரியப்பனார் அவர்களின் துணைவியார் நம் குழந்தைகளுக்குச் சில பரிசில்பொருள்கள் நினைவுக்காக எடுத்து வந்து வழங்கினார்கள். கடையின் உரிமையார் நல்ல தமிழ்ப்பற்றாளர். திருக்குறளில் அவருக்கு நல்ல ஈடுபாடு. கலந்துரையாடினோம்.

அனைவரிடமும் பிரியா விடைபெற்றுகொண்டு நண்பர் முனியாண்டி அவர்களின் இல்லம் வரும்பொழுது நடு இரவு பன்னிரண்டு மணியிருக்கும். அதன் பிறகு காலையில் வானூர்தி நிலையம் புறப்படுவதற்கு ஏற்பப் பொருள்களை வரிசைப்படியும் முறைப்படியும் அடுக்கினேன். பின்புதான் தெரிந்தது நான் கொண்டு சென்ற எடை அளவு புத்தகங்கள்,இதழ்கள் மீண்டும் தமிழகத்துக்கு எடுத்து வரும் அளவு குவிந்திருந்தது.அனைத்ததையும் முறைப்படுத்திக் கொண்டேன். இரவு 1.30 மணிக்குப் படுக்கைக்குக் சென்றேன்.

25.05.2010 காலை 5 மணிக்கு விழித்துக் குளித்து முடித்து, சிற்றுண்டி உண்டு வானூர்தி நிலையம் அடையும்பொழுது காலை 7 மணியிருக்கும்.

நண்பர் திரு.முனியாண்டி அவர்கள் என்னைத் தம் மகிழ்வுந்தில் அமரச்செய்து வானூர்தி நிலையம் அழைத்து வந்தார். அவர்களின் அன்புக்கு யாது கைம்மாறு ஆற்றுவேன்?

திரு.முனியாண்டி அவர்கள் என் பொருள்களைச் சோதனையிட்டு, என்னை ஆய்வுக்கு உட்படுத்தும் வரை உடன் இருந்து 8 மணியளவில் புறப்பட்டார். அதன்பிறகு ஒரு மணி நேரம் வானூர்தி நிலையக் கடைகளில் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வாங்கிக்கொண்டு வானூர்தியில் வந்து அமர்ந்தேன்.

வானூர்தி குறித்த நேரத்தில் புறப்பட்டது. வானூர்தியில் பகலுணவு கொடுத்தார்கள். நம் ஊர் நேரப்படி முற்பகல் 11 மணிக்குச் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தேன். பொருட்கள் அடங்கிய பையினைப் பெற்று வெளியேற ஒரு மணி நேரம் ஆனது. பிறகு பேருந்துக்காகக் காத்திருப்பு.

பத்து நாளுக்கு மேலாக அயல்நாட்டில் வாழ்ந்த நான் காவலர்களையோ, பேருந்து ஒலிப்பானையோ பார்க்கவோ,கேட்கவோ இல்லை. ஆனால் இவை யாவும் ஒரே நேரத்தில் நம்மை அச்சமூட்டும் அளவுக்கு மீனம்பாக்கத்திலிருந்து புதுவை வரை தொடர்ந்து இருந்தன.

பேருந்தில் ஏறிப் புதுச்சேரிக்கு வந்துபொழுது பிற்பகல் 3.45 மணியிருக்கும். வந்த களைப்பு அடங்குவதற்குள் என் சிறிய மாமனார் செர்மனி நாட்டின் பெர்லின் நகரிலிருந்து எங்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களைச் சரியாக விருந்தோம்பி, மகிழ்ச்சிப்படுத்த முடியாதபடி உடல் சோர்ந்திருந்தேன். அவர்களும் இயல்பாகக் கடற்காற்று வாங்கப் புதுவைக் கடற்கரைக்குச் சென்று திரும்பினார்கள். அதற்கிடையில் கல்லூரிக்குச் சென்று என் வருகையை உறுதிப்படுத்தி இல்லம் வந்தேன்.

நன்றி: http://muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X