Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மின் அகரமுதலிகள்

Subscribe to Oneindia Tamil

வின்சுலோ தமிழ் அகரமுதலி (A comprehensive Tamil and English dictionary of high and low Tamil) http://dsal.uchicago.edu/dictionaries/winslow/

மிரோன் வின்சுலோ அவர்கள் அமெரிக்காவில் உள்ள வெர்மான் மாநிலத்தில் வில்லிசுடன் என்ற ஊரில் 1789 ஆம் ஆண்டு திசம்பர் 1 இல் , பிறந்தார். இவர் ஒரு கிறித்தவச் சமயபோதகர்; இவர் தொகுத்த தமிழ் ஆங்கில விரிவு அகராதி (A Comprehensive Tamil and English Dictionary) 68,000 சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.சோசப் நைட் பிரபு அவர்களின் மூலப்படியைத் துணையாகக் கொண்டு நாளும் மூன்று மணிநேரம் என்ற அளவில் இருபதாண்டுகள் உழைத்து வின்சுலோ இந்த அகரமுதலியை 1862 இல் உருவாக்கினார். தமிழ் ஆங்கிலம் என்ற அமைப்பில் இந்த அகரமுதலி உள்ளது.

அ தொடங்கி வௌவு என்று முடியும் சொல் ஈறாக 969 பக்கத்தில் தமிழ்ச்சொற்களும் சொற்களுக்கு உரிய விளக்கமும் உள்ளன.விடுபட்ட சொற்களையும் இணைத்து 976 பக்கத்தில் வின்சுலோ அகராதித் தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் கொண்டு விளங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலிக்கு முன்மாதிரியான அகரமுதலியாக இதனைக் கொள்ளலாம்.இதில் இலக்கிய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.

தமிழ் விக்சனரி http://ta.wiktionary.org/wiki

விக்கிப்பீடியா என்ற தளம் பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும். இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது.உலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.இதன் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது. ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் உள்ளன.

தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இன்று 1,12,587 சொற்களைக் கொண்டு(15.04.2010) உலக அகரமுதலிகளில் 24 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.

அம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப்பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது (இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்). அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும். அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).

தொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை, தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன், அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் "அப்பா" என்ற சொல் உள்ளது. அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.

விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று. புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச் செய்யலாம்.

விக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம்,தமிழ் இந்தப் பகுப்பில் பெயர், வினை, உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப்பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.

தமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன. இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாகத் தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும். இவற்றின் துணை கொண்டும் தேடலாம். மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டையும் பெறலாம்.

அதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன. தமிழ் - ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச் சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன. அதுபோல் ஆங்கிலம் - தமிழ் என்ற வகையில் ஆங்கிலச்சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.

தமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது. இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது. பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள், பறவைகள், விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு, வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும். கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி http://www.crea.in/dictionary.html

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல்பதிப்பு(1992)இணையத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்-தமிழ் -ஆங்கிலம் என்ற அமைப்பில் பொருள் தருகின்றது. ஒரு சொல்லின் இலக்கண வகை,வழக்குக் குறிப்பு,துறைக்குறிப்பு உள்ளிட்டவற்றின் துணைகொண்டு தேடலாம்.எழுத்துகள் ஒருங்கு குறியில் இருப்பின் மிகுந்த பயன் தந்திருக்கும்.

ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலி http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய சிங்களச் சொல்லையும், தமிழ்ச் சொல்லையும் தரும் ஆங்கிலம்-சிங்களம்-தமிழ் அகரமுதலியும் பயன்பாட்டில் உள்ளது. பயன்பாட்டில் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய சிங்களச் சொற்கள், தமிழ்ச்சொற்களின் விளக்கம் உள்ளது.ஆங்கிலமொழியில் ஆங்கிலச் சொற்கள் உள்ளன. அதற்குரிய பொருள் சிங்களமொழிச் சொல்லிலும் தமிழ்ச் சொல்லிலுமாகத் தரப்பட்டுள்ளன.28 335 சொற்களுக்குரிய விளக்கம் இதில் உள்ளது.

ஆங்கிலம் - தமிழ் - செர்மன் அகரமுதலி http://www.tamildict.com/english.php

ஆங்கிலத்தில் சொற்களைத் தட்டச்சிட்டால் அதற்குரிய தமிழ்ச்சொற்பொருளும் செர்மன்மொழிப் பொருளும் தரும் வண்ணம் ஒரு அகரமுதலி உள்ளது. ஆங்கிலச்சொற்களுக்கு இணையான சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக இந்த அகரமுதலியில் தரப்பட்டுள்ளன. இந்த அகரமுதலியில் பல்வேறு தேடல் வசதிகள் உள்ளன. பாமினி, ஒலி அடிப்படை எனப் பலவகை விசைப் பலகைகளைப் பயன்படுத்தலாம். ஆங்கிலம்-தமிழ், தமிழ் -ஆங்கிலம், ஆங்கிலம் -செர்மன், செர்மன்-தமிழ் என்று பலவகையில் சொல் தேர்வு செய்யலாம். 47 துறைசார்ந்த சொற்கள் இதில் உண்டு.

கலைச்சொல் அகரமுதலி http://www.thozhilnutpam.com/
மின்னியல்,மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பவியல் சார்ந்த செய்திகளை விளக்கும் சொற்களுக்கு உரிய விளக்கம் பெறும் தளமாக இது உள்ளது. இத்தளத்தில் உள்ள அருஞ்சொற்பட்டியல் என்ற தலைப்பில் உள்ள பகுதிக்குச் சென்றால் பல துறை சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்குரிய கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் பொது அருஞ்சொற்பொருள், தானியங்கி அருஞ்சொற்பொருள், பறவையியல், தாவரவியல், வேதியியல்,மூலிகை,மலர்,பழம்,குடி நுழைவு, கணிதம், உடலியல், இயற்பியல், உளவியல், கப்பலியல்,குறிகையியல், காய்கறிப் பெயர்கள், விலங்கியல், ஒருங்கிணைப்பியல் சார்ந்த பல துறைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைத் தாங்கி இத்தளம் உள்ளது.

பால்சு அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

பழனியப்பா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியும், தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியும் குறிப்பிடத்தக்க அகரமுதலிகளாகும்.

ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி சுமார் 22,000 முக்கியச் சொற்களையும் மற்றும் 35,000 வழிச் சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளம் சென்று இதனை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

தமிழ் -தமிழ் -ஆங்கில அகரமுதலியில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளன. இதில் உலாவும் முறையும், தேடும் முறைமையையும் கொண்டுள்ளது.

உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களைப் புத்தக வடிவினைப் போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் தமிழ் அகரமுதலி http://www.tamilvu.org/library/dicIndex.htm

தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் பல அகரமுதலிகள் உள்ளன.அவற்றுள் ஒன்று பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் தமிழ் அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பக்கம் பார்த்தல், சொல்தேடல்,அகரவரிசைப் பார்த்தல் என்ற அமைப்பில் சொற்களைத் தேடலாம். பக்கம் பார்த்தல் பகுதியில் பக்க எண் குறிப்பிட்டுச் சொல் தேடலாம். சொல்தேடல் பகுதியில் சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடலாம்.அகர வரிசைப் பார்த்தல் பகுதியில் அகரவரிசையைக் கொண்டு சொற்களைத் தேடலாம். தமிழ் இணையப் பல்கலக்கழகத் தளத்தில் நான்கு அகரமுதலிகள் உள்ளன (செ.ப.பேரகராதி,பால்சு அகராதி,சண்முகம் பிள்ளை,சென்னைப் பல்கலைக்கழ ஆங்கிலம்-தமிழ் அகராதி)

விசைத்தமிழின் தமிழ்-ஆங்கிலம் அகராதி http://dictionary.sarma.co.in/Default.aspx

புதுக்கோட்டை சர்மா சானடோரியத் தயாரிப்பான விசைத்தமிழ் மென்பொருளின் தமிழ்- ஆங்கிலம் அகராதியில் ஏறத்தாழ 60,000 ஆங்கிலச் சொற்களுக்கு 2,30,000 தமிழ்ப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குகுறியிலும் மாற்றிக் கொள்ள முடியும்.

அகராதி.காம் http://www.agaraadhi.com/d/DH.jsp

அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறையும்,மொழியியல் ஆய்வுக்கூடமும் இணைந்து உருவாக்கியுள்ள மின் அகரமுதலித் தளம் அகராதி.காம் என்பதாகும். இணையம் வழியாகத் தமிழ்,ஆங்கிலத் தட்டச்சுகளின் துணைகொண்டு தமிழ்ச்சொற்களுக்குரிய பொருளும் ஆங்கிலச்சொற்களுக்கு உரிய தமிழ்ப்பொருளும் அறியலாம். இரண்டு இலட்சம் தமிழ்ச் சொற்களுக்கு உரிய பொருளும் விளக்கமும் இந்த அகரமுதலியில் உள்ளன. செல்பேசிகளிலும் அகராதி.காம் பயன்கொள்ள முடியும். பலவகையான புதிய பயன்பாட்டுக்குத் தக இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடும்பொழுது அந்தச் சொல் உணர்த்தும் பல பொருள்கள் உள்ளன. மேலும் அம்மா என்பதை விளக்கும்பொழுது அம்ம என்று வருவதும் அம்மா என்று திருக்குறளில் வரும் இடம் சார்ந்த மேற்கோளும்,அம்மா என்பதிலிருந்து உருவாகும் பிற சொல்வடிவங்களுக்கும் (அம்மாவிலிருந்து, அம்மாவுக்கு என்பது போல்...) அம்மா என்று இடம்பெறும் திரைப்படப்பபாடல் வரிகளும் உள்ளன. இந்த வகையில் பிற அகரமுதலிகளிலிருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிப்பொறித்துறை அகரமுதலி குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

அப்பா என்ற சொல்லைத் தமிழில் தட்டச்சிட்டுத் தேடினால் அப்பா என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொற்கள், தமிழில் சொற்பொருள் விளக்கம் காட்டப்பட்டுள்ளன. திருக்குறளிலிருந்து தவறுதலாக "மருந்தாகித் தப்பா" என்ற குறள் அப்பா என்பதற்குச் சான்றாக இடம்பெற்றுள்ளது. அகராதியில் இடம்பெறும் சொற்கள் தொடர்பான விளக்கங்களை நண்பர்களுக்கு மின்னஞ்சலாகவோ, பேசு புத்தகத்திலோ,டுவிட்டரிலோ,அச்சிடவோ தக்க வசதிகள் இந்த அகரமுதலியில் உள்ளன.திரைப்படம் தொடர்பான குறிப்பு இடம்பெறும் போது,படம், பாடலாசியர்,இசையமைப்பாளர்,பாடல் உள்ளிட்ட குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உலகப் போக்குக்கு ஏற்ப மின்னகரமுதலிகளைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இம் மின்னகரமுதலிகள் இன்னும் பல நிலைகளில் மேம்படுத்த வேண்டுவனவாக உள்ளன. முன்பு அச்சில் வெளிவந்துள்ள அகரமுதலிகள்தான் மின் அகரமுதலிகளாக வெளிவந்துள்ளன. இவை பழைமை போற்றும் முயற்சியாக உள்ளது. தமிழக அரசு அல்லது பல்கலைக்கழகங்கள் பலவகையான அகரமுதலிகளைப் புதியதாக உருவாக்கி மின் அகரமுதலிகளாக வைக்க வேண்டும். படிமக் கோப்புகளாக உள்ள மின் அகரமுதலிகள் ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றப்பட வேண்டும்.அதுபோல் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் புதிய பதிப்பு மின் அகராதியாக மாறும்பொழுது உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் தளமாக விளங்கும். இதுவும் ஒருங்குகுறியில் இருந்தால் சிறப்பு நல்கும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி செம்பதிப்பு அச்சில் வருவதுடன் இணையத்தில் இருக்கும்பொழுது உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கும், ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்கும் பேருதவிபுரியும்.மற்ற நிறுவனங்களின் அகரமுதலிகளை நாம் திருத்தவோ,விளக்கம் சேர்க்கவோ இயலாது. ஆனால் தமிழ் விக்சனரியை நாம் மேம்படுத்தி வளர்த்தெடுக்கமுடியும். தமிழில் வழக்குச்சொல்லகராதி,இணைச்சொல் அகராதி போன்று பல அகராதிகளை இணையத்தில் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலகுக்கு வழங்குமுடியும்.

நன்றி: http://muelangovan.blogspot.com/

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+