For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமுறைக்கும் நினைவிருக்கும் ‘தலை தீபாவளி’

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Thalai Deepavali
பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ பண்டிகைகள் நம்மை கடந்து சென்றிருக்கலாம். தனியாளாய் கொண்டாடிய தீபாவளி பண்டிகையை துணையோடு கொண்டாடும் போது அதன் மகிழ்ச்சியே தனிதான். ஆணோ பெண்ணோ திருமணமான பின்பு கொண்டாடப்படும் முதல் தீபாவளியே தலை தீபாவளி எனப்படுகிறது.

புதுமணத் தம்பதியரோ தங்களின் தலை தீபாவளியை புகுந்த வீடுகளில் கொண்டாடுவது வழக்கம். தலை தீபாவளி' தம்பதியரின் மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணம் அதுவரை அவர்கள் கடந்து வந்த தீபாவளி அனைத்திற்கும் மேலாக, ஒருவர்- இருவராகியுள்ளோம்' என்ற பூரிப்பு எனலாம்.

சில தம்பதியர் தலை தீபாவளிக்கு முன்னரே 3 பேராகி (குழந்தையுடன்) கொண்டாடுவதும் உண்டு. தலை தீபாவளிக்கு 3 பேரானால் தம்பதியருக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டியதில்லை.

கலகலப்பான தலை தீபாவளி

இந்த களேபரத்தில் என்னுடைய தீபாவளியை நினைத்து பார்த்தால் இன்றைக்கும் சிரிப்பு வரும். தலை தீபாவளியன்று சகோதரியின் கணவருக்கு மச்சினன்தான் எண்ணெய் தேய்த்து விடவேண்டும் என்பது எங்கள் பகுதிகளில் சம்பிரதாயம். நல்லெண்ணெய் என்பதை கண்ணில் பார்ப்பதோடு சரி அதை எதற்காகவும் உபயோகித்ததில்லை என் கணவர். பாவம் அவரை போய் மனையில் உட்காரவைத்து அடியாட்களைப்போல இருந்த எனது இரண்டு தம்பிகளும் ஆளுக்கு ஒரு கையைப் பிடித்து எண்ணெய் தேய்த்து விட்டால் எப்படி இருந்திருக்கும். குளிர குளிர எண்ணெய் தேய்த்துவிட்ட பின்னர் கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரை அண்டாவில் வைத்து குளிக்க சொன்னால் ஆடிப்போய் விட்டார்.

கங்கா ஸ்நானம்

குளு குளு தண்ணீரில் சில்லென்று குளித்துப் பழகியவரை சுடுதண்ணீரில் குளிக்கச்சொன்னால் எப்படி குளிப்பார். சுடுதண்ணீரில் குளிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தவரை பிடித்து ஒருநாளைக்கு தானே மாமா ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று தாஜா பண்ணியதில் ( புதுப்பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனுமே) தலையில் சீயக்காயை வைக்க ஒத்துக்கொண்டார்.

அதிகாலை 4 மணிக்கு சீயக்காய் தேய்த்து குளித்தபோது கண்ணில் லேசாக விழுந்துவிட்டது. அது லேசாக உறுத்திக்கொண்டிருந்தது. சிவந்த கண்ணுடன் வந்தவருக்கு புது துண்டும் கைலியும் எடுத்து ரெடியாக வைத்திருந்தான் என் பெரிய தம்பி. இதுவேறயா? என்று என்னை பார்த்தவரை, வாங்கிக் கட்டிக்கோங்க என்று கூறியவுடன் எதுவும் பேசாமல் கைலியை கையில் வாங்கினார்.

எப்படிக்கா கல்யாணமான உடனே நீ சொன்ன பேச்சுக்கு மறுபேச்சு பேசாம கேட்க வைக்கிற? என்று என்னை கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர் என் தம்பி, தங்கைகள்.

அப்புறம் என்ன எங்கள் இருவருக்கும் புதுத்துணி கொடுத்து அதனை உடுத்திக்கொண்டு வரச்சொன்னார்கள் என்னோட பெற்றோர்கள். எங்க இரண்டு பேருக்குமே கலர் ஒன்றாக அமைந்ததில் ஒரே சந்தோசம். புதுத்துணி கட்டிக்கொண்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி பெற்றோர்களின் காலின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். புதுமாப்பிள்ளைக்கு ஒரு சவரனில் தங்கச்சங்கிலி போட்டு அழகு பார்த்தான் என் தம்பி.

இட்லியும் ஈரல் கறியும்

மணக்க மணக்க இட்லி சுட்டு வாழை இலையில் பரப்பி வைத்து ஈரலும், கறிக்குழம்புமாய் ஊற்றி கூட்டாக அமர்ந்து சாப்பிட்டோம். அந்த தீபாவளியை என்றைக்குமே மறக்கமுடியாது.

புது மாப்பிள்ளை பட்டாசு வெடிக்கவேண்டும் என்பது முறையாமே. இவருக்கு பட்டாசு என்றாலே துளியும் பயம் கிடையாது. அசால்ட்டாக கையில் பிடித்து வெடிக்கிறவராச்சே. ( இதைப்படித்துவிட்டு தயவு செய்து யாரும் கையில் பிடித்து வெடி வெடிக்க வேண்டாம்). சிவகாசியில் இருந்து ஸ்பெசலாக கொண்டு வந்த வெடிகளை எல்லாம் அசராமல் வெடித்து தள்ளினார். ஒருவாரத்திற்காவது தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது எங்கள் பக்கத்து வழக்கம். ஆனால் பணிச்சுமையினால் மூன்று நாளோடு முடிந்து போனது எங்கள் தலைதீபாவளி.

மூன்றுநாட்களும் இனிப்புப் பலகாரமாய் சாப்பிட்டதில் அவருக்கு நெஞ்சுக்கரிக்க ஆரம்பிவிட்டது. இருக்கவே இருக்கிறது இஞ்சிக்கசாயம் என்று என்பாட்டி ஐடியா கொடுக்க ஐயோ ஆளை விடுங்க என்று எடுத்தாரே ஓட்டம் அதை இன்றைக்கு நினைத்தாலும் ஒரே சிரிப்புதான் போங்கள்.

என்ன தலை தீபாவளி தம்பதிகளே சந்தோசமாக பண்டிகை கொண்டாட ரெடியாகிவிட்டீர்களா ? உங்கள் அனைவருக்கும் இனிய தலை தீபாவளி வாழ்த்துக்கள்.

English summary
Deepavali is especially if it is ‘ Thalai Deepavali’ the first one after the wedding. Newlyweds are pampered by family members and showered with gifts. The newly-wed are invited for the first Deepavali and are provided 'Seer,' a part of the dowry, as per the custom. During the first year after marriage, the girls are also given 'Thalai Karthikai' as a gift. The celebrations include a visit to the temple, gifts of clothes and jewelery, gorging on sweets and receiving blessings of elders. The groom's parents, brothers and sisters come down to join in the celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X