For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தை பொங்கல்: இனிக்கும் கரும்பு.. மங்களம் தரும் மஞ்சள்… மருந்தாகும் இஞ்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sugarcane
பொங்கல் விழாவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்ச பூதங்களுக்கு ஒப்பிடுகின்றனர். மண்பானை என்பது நிலம், அதில் நிரப்பப்படுகின்ற தண்ணீர், வீட்டின் முன்பக்கம் திறந்தவெளியில் பற்ற வைக்கப்படுகின்ற நெருப்பு, அது எரிய துணைபுரிகின்ற காற்று, அதன் புகை செல்கின்ற ஆகாயம் என்று பஞ்ச பூதங்களும் பொங்கலுடன் நிறைந்து நிற்கிறது.

பொங்கல் என்றாலே கரும்பு, இஞ்சி, மஞ்சள் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும். பச்சரியில் பசு நெய் ஊற்றி, அதனுடன் வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலம் சேர்த்து மணக்க மணக்க பொங்கல் வைப்பார்கள். இந்த பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்கின்றனர் முன்னோர்கள்.

பச்சரியும் பசுநெய்யும்...

பொங்கல் வைக்க பச்சரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். பச்சரிசி என்பது ஒருவரது பக்குவமில்லாத நிலையை காட்டுகிறது. அது பொங்கி வெந்த உடன் சாப்பிடும் நிலைக்கு வந்து விடுகிறது. அரிசியுடன் வெல்லம், நெய், ஏலம், சுக்கு, உலர் திராட்சை என்ற அன்பு, அருள், சாந்தம், கருணை உள்ளிட்ட நல்ல குணங்களையும் கலந்து விடும்போது அது அருட்பிரசாதமாகி விடுகிறது. மனம் என்ற அடுப்பில் இறை சிந்தனை என்ற நெருப்பை பற்ற வைப்பதின் மூலம் அது ஆண்டவன் விரும்பும் நிவேத்தியமாகிறது. இதுவே பொங்கலுக்கு பச்சரிசி பயன்படுத் துதலின் தத்துவமாக பார்க்கப்படுகிறது.

இனிக்கும் கரும்பு

பொங்கலுக்கு கரும்பு முக்கியமானது. கரும்பு கடிக்காமல் பொங்கல் உண்டா? அந்த கரும்பு சுவைப்பதின் தத்துவம் என்ன தெரியுமா? கரும்பின் எல்லாப் பகுதியும் இனிப்பைத் தருவதில்லை. நுனிக் கரும்பு லேசான இனிப்புடன் அதிக அளவில் உப்புக் கரிப்பதுபோலிருக்கும். ஆனால், அடிக் கரும்பு, மிகவும் இனிப்பாக இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள் முன்னேற கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு ஆரம்பத்தில் இனிமையைத் தராது. கஷ்டங்களையே கொடுக்கும். ஆனால் போகப்போக அடிக் கரும்பின் இனிப்பைப் போல அதிக வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும்.

மேலும், கரும்பின் வெளிப்புறம் கரடு முரடாகவும், வளைவுகளும் ,முடிச்சுகளும் நிறைந்து இருக்கும் . வெளிப்புறம் ஒரு கடினமான தோற்றத்தையே வெளிப்படுத்தும். கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு, உரித்து எடுத்தால்தான் உட்புறத்தில் இருக்கும் இனிமையான சாறு கிடைக்கும். அதுபோல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் இருந்தாலும், அவற்றை கடும் முயற்சியோடு, அந்த கரடு முரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பதுதான் கரும்பு உணர்த்தும் தத்துவம்.

மங்களமான மஞ்சள்

பொங்கல் பண்டிகையின் அடையாளமான பொங்கல் பொங்கும் பானையைச் சுற்றி மஞ்சள் செடியைக் கட்டியிருப்பார்கள். தமிழரின் வாழ்வுடன் மஞ்சள் அந்த அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளதையே பொங்கல் பானையிலும் அது மாலையாய் சுற்றப்பட்டு பாரம்பரியத்தின பிரதிபலிப்பாக திகழ்கிறது. மஞ்சள் என்ற ஒரு செடியின் கிழங்கு, நம்முடன் பின்னிப் பிணைந்து காலம் தொட்டு வாழ்ந்து வரும் ஒரு தெய்வீகப் பொருள். உணவு, மருந்து என்று பல கோணங்களில் நமக்கு உதவுகிறது. மஞ்சள் நிறத்திற்கு நோய் கிரிமிகளை எதிர்த்து அழிக்கும் தன்மை உண்டு. பெண்மைக்கு மிகவும் புனிதத்துவத்தை சேர்ப்பது மஞ்சள், சருமத்தையும் மிருதுவாக பாதுகாக்கும் தன்மை கொண்டது. உணவில் கலந்துள்ள விஷத்தினை முறிக்கும், நல்ல மணத்தையும் அளிக்கும். குடற்புண்னை போக்கி துர்நாற்றத்தையும் போக்கும்.

மருந்தாகும் இஞ்சிக்கொத்து

மஞ்சளைப் போல இஞ்சிக்கொத்தையும் பொங்கல் பானையில் கட்டுவார்கள். இது பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. தலைவலி, ஜலதோஷம் போக்குகிறது.இஞ்சியானது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கொழுப்புச்சத்தை குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டி இருதய, சுவாசத்தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

பெண்ணின் குணம்

பொங்கல் சீர் வரிசையில் கரும்பு, மஞ்சள், இஞ்சியை அடுத்து சிறு கிழங்கு, காய்ச்சி கிழங்கு, பனங்கிழங்கு, கூவை, சேனை, சேப்பக்கிழங்கு என்று பல தரப்பட்ட கிழங்குகள் இடம்பெறுகின்றன. பலவிதப்பட்ட மண்ணில் விளைந்தவையாக இருந்தாலும் அங்குள்ள தன்மைக்கு ஏற்ப, நீர் வளத்திற்கு ஏற்ப மாறி விளைச்சலை கொடுப்பது போன்று புகுந்த வீட்டிற்கு செல்கின்ற மணப்பெண்ணும் தனது கணவனின் வீட்டில் உள்ளவர்கள் எத்தகைய குணங்கள் உடையவர்களாக இருந்தாலும் அவர்களுடன் அனுசரித்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். அத்துடன் தானும் அதில் வளமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

English summary
Thai Pongal has arrived. Here is an article on the importance of Ginger, Sugarcane and Turmeric.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X