• search

மனநலம் குன்றியோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி: அமெரிக்கர்களையும் அசத்திய ‘வள்ளியின் காதல்’!

Posted By:
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  டல்லாஸ்(யு.எஸ்): தமிழகத்தில் உள்ள மனநலம் குன்றியோருக்கு நிதி திரட்ட, அமெரிக்காவில் நடத்தப்பட்ட வள்ளியின் காதல் நடன நாடகத்தை தமிழர்கள் மட்டுமல்லாது, அமெரிக்கர்களும் பார்த்து அசந்தனர். இதில் ரூ 1 லட்சம் டாலர் வரை நிதி திரண்டது.

  தமிழகத்தில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பிற்கு நிதி திரட்டுவதற்காக, டல்லாஸில் 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம் நடைபெற்றது.

  செப்டம்பர் 7ம் தேதி, ரிச்சர்ட்ஸனிலுள்ள ஐஸ்மன் சென்டரில் (Eisemann Center) , சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ராதிகா கணேஷ் வடிவமைத்து இயக்கி இருந்தார். இவர் எக்ஸ்பிரஷன்ஸ் (Expressions) என்ற பிரபல நடனப்பள்ளியை நடத்தி வருவதுடன், பல்வேறு பிரபலமான நடன நாட்டியை நிகழ்ச்சிகளை இயக்கிய வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  வள்ளியின் காதலை காண, 1200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். தமிழர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கர்கள், வேற்று மொழியினர்கள் என பலதரப்பட்டவர்களும் வந்திருந்தனர். சுமார் இரண்டே கால் மணி நேரம் நடைபெற்ற 'வள்ளியின் காதல்' நாட்டிய நாடகம், விறுவிறுப்பான திரைப்படம் போலத்தான் இருந்தது.

  பல்லக்கில் பவனி வந்த முருகன்

  பல்லக்கில் பவனி வந்த முருகன்

  பாரம்பரிய நடனத்துடன் மேடையில் ஆரம்பமான நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அரங்கத்தின் நுழைவாயில் வழியாக, பார்வையாளார்கள் மத்தியில் பல்லக்கில், வள்ளி தெய்வானையுடன் முருகன் பவனி வந்து சொக்க வைத்தார்.

  திருவிழாக்களில் நடைபெறும் கதா கலாட்சேபம் போல் வள்ளியின் காதல் கதையை சொல்வது போல் வடிவமைத்திருந்தார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் காலத்திற்கேற்ப ஸ்டாண்ட் அப் காமெடியாக அமைத்திருந்தார்கள்.

  அன்றும் இன்றும்

  அன்றும் இன்றும்

  ஒரு கட்டத்தில் தருமி ஸ்டைல் கேள்வி பதிலில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என திரையுலக ஜாம்பவான்களையும் இணைத்து கதை சொன்ன விதம் பார்வையாளர்களை ரிலாக்ஸாக வைத்திருந்தது. அதே சமயத்தில், வள்ளி - முருகன் காதல் கதையை மேடையில் காட்டிய விதம், புராண காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

  வள்ளியின் பிறப்பும் நம்பிராஜனின் ஆட்சியும்

  வள்ளியின் பிறப்பும் நம்பிராஜனின் ஆட்சியும்

  பெண் குழந்தைக்காக தவம் இருந்து வந்த நம்பிராஜனுக்கு (இவருக்கு வேஷப் பொருத்தம் அத்தனை இயல்பாக இருந்தது!), வள்ளிக்கொடி அருகில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை மீது கொள்ளை பிரியம். வள்ளி என பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். வள்ளிக்கு பெயர் சூட்டி, தாலாட்டி வளர்க்கிறார்கள் மலைவாழ் மக்கள். இந்த காட்சிகளில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

  களறி, வாள் சண்டை, சிலம்பாட்டம்

  களறி, வாள் சண்டை, சிலம்பாட்டம்

  தமிழர்களின் பாரம்பரியமான வீரக் கலைகளான சிலம்பாட்டம், களறி, வாள் சண்டை என அனைத்து வித்தைகளையும் மேடையில் செய்து காட்டினர். அமெரிக்கத் தமிழ் குழந்தைகளுக்கு இது ஆச்சரியமான புதிய விஷயங்களாக அமைந்திருந்தது. தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர்களுக்கு எளிதாக எடுத்துரைக்கும் விதத்திலும் இருந்தது.

  ஹீரோ அறிமுகம் போல் முருகன் நடனம்

  ஹீரோ அறிமுகம் போல் முருகன் நடனம்

  பொதுவாக சிவபெருமானின் நடனத்தைத்தான் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பார்த்திருக்கிறோம். இங்கே முருகன் அறிமுகமாகும் நடனம், திரைப்படத்தில் ஹீரோ அறிமுகக் காட்சி போல் சிறப்பாக அமைந்திருந்தது.

  காதல் என்றாலே மோதலில் தான் வரவேண்டும் என்ற நியதியை, வேடனாக வந்து வள்ளியிடம் வம்பு செய்த முருகன் தான் ஏற்படுத்தினாரோ? மிரண்டு போன வள்ளி தந்தையிடமும், அண்ணனிடம் முறையிட்ட காட்சி கலகலப்பாக இருந்தது.

  வளையல்கார இளைஞன்

  வளையல்கார இளைஞன்

  பெண்களைக் கவர, அவர்களுக்கு பிடித்தமானவற்றை விற்கும் சேல்ஸ்மேனாக வருவதும் ஒரு யுத்திதான் என்று காட்டினார் வளையல்காரராக வந்த முருகன். தாத்தா என்று பரிதாபப்பட்டு உதவி செய்யும் வள்ளியிடமே குறும்பு செய்து, வந்திருப்பது முருகன் தான என வெளிப்படுத்தும் காட்சி ரொம்ப சுவாரஸ்யம் (எம்ஜிஆர் உள்பட எத்தனை ஹீரோக்களுக்கு சீன் எடுத்துக் கொடுத்திருக்கிறார் முருகன் பாருங்கள்!).

  மேடையில் வந்த யானை

  மேடையில் வந்த யானை

  அண்ணன் விநாயகரை, முருகன் தனது காதலுக்கு துணையாக அழைத்த போது, நிஜ யானை மேடைக்கு வந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு காட்சி அமைந்திருந்தது. அது வரையிலும் தாத்தா வேடத்தில் இருந்த முருகன், சட்டென்று சுய உருவத்திற்கும் திரும்பும் காட்சியில் பார்வையாளார்கள் மலைத்து போய் விட்டனர். மேடை மற்றும் உடை அலங்கார யுத்தி வெகு இயல்பாகவும், நேர்த்தியாகவும் இருந்தது.

  திருமணக் கோலம்

  திருமணக் கோலம்

  முருகனே தனது மகளுக்கு மணாளனாக வந்திருப்பதை அறிந்த நம்பிராஜன், வள்ளியை மணமுடித்துக் கொடுக்கும் காட்சியில் மெய் சிலிர்த்த பார்வையாளர்கள், பக்தர்களாக உருகிப்போய்விட்டனர். மணமேடைக்கு முருகனை அழைக்கும் போது 'அ முதல் ஔ வரை' வரவேற்புரை அமைத்து, மிக நேர்த்தியாக வசனங்களை எழுதியிருந்தார் இயக்குனர் ராதிகா கணேஷ். தமிழ்க் கடவுள் முருகன் என்பதை நினைவு கூறும் வகையில் இருந்தது.

  மயிலாட்டம், கரகாட்டம், பால்குடம்...

  மயிலாட்டம், கரகாட்டம், பால்குடம்...

  தமிழர்களின் பாரம்பரக் கலைகளை வலியுறுத்தும் வகையில் மயிலாட்டம், கரகாட்டம், பால்குடம், வேல், மாவிளக்கு, காவடி, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற நடனம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஆடல் பாடல்களுடன் இறுதிக்காட்சியை திருவிழாவாக அமைத்திருந்தார்கள்.

  வள்ளி தெய்வானையுடன் தரிசனம்

  வள்ளி தெய்வானையுடன் தரிசனம்

  திருவிழாக் காட்சியின் நிறைவில், வள்ளி தெய்வானையுடன் மலையிலிருந்து, வள்ளி தெய்வானயுடன் முருகன் காட்சி தந்த காட்சியில், பல பார்வையாளர்கள், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பத் தொடங்கி விட்டனர்.

  தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம் அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைத்த திருமதி ராதிகா கணேஷ், திரைப்பட்த்திற்கு நிகரான விறுவிறுப்புடனும் காட்சிகளை உருவாக்கி இயக்கி இருந்தார். தமிழிசை, காவடி சிந்து, திருப்புகழ், பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், என தமிழின் அனைத்து இசை வடிவங்களையும் பிண்ணனியாக கோர்த்திருந்தார்.

  82 ஆயிரம் டாலர் உதவித் தொகை

  82 ஆயிரம் டாலர் உதவித் தொகை

  டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு சிறப்பான தமிழ் நிகழ்ச்சியை வழங்குவதோடு, நற்பணிகளையும் ஒருங்கே செயல்படுத்தி வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, ‘வள்ளியின் காதல்' நிகழ்ச்சி மூலம் 100 ஆயிரம் டாலர்கள் நன்கொடை திரட்டியிருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு தவிர்த்து, 82 ஆயிரம் டாலர்கள் உதவும் கரங்கள் அமைப்பிற்க்கு நன்கொடையாக வழங்கப் பட்டது. திருவண்ணாமலையில் உதவும் கரங்கள் அமைப்பின் 'மன நலம் குன்றிய பெண்கள் காப்பக கட்டிட நிதிக்காக கொடுக்கப்பட்டது.

  சிறப்பு விருந்தினர்

  சிறப்பு விருந்தினர்

  ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சாதனைத் தமிழர், தமிழ் மொழிக்கு அரும்பணியாற்றி வருபவர் என்ற வரிசையில் சிறப்பு விருந்தினரை அழைத்து கவுரப்படுத்துவது சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் முக்கிய் நோக்கமாகும். 'வள்ளியின் காதல்' நிகழ்ச்சியில் அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் நிறுவனர், தலைவர் முனைவர் அரசு செல்லையா சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்பட்டார்.

  சொன்ன நேரத்தில் ஆரம்பித்து...

  சொன்ன நேரத்தில் ஆரம்பித்து...

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை வேலு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் குழு கவனித்து வந்தார்கள். பார்வையாளர்களின் நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து, சரியான நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்தனர்.

  நூறு கலைஞர்கள்

  நூறு கலைஞர்கள்

  Expressions நடனப்பள்ளியின் 30 நடனக் கலைஞர்கள், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை தொண்டர்கள் 25 பேர், ப்ளேனோ தமிழ்ப் பள்ளியின் 25 மாணவ மாணவியர்கள் மற்றும் மேடை நிர்வாகம், ஒப்பனை, உடையலங்காரம், அரங்கப் பொருட்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு 20 பேர் என 100 கலைஞர்களுடன் வள்ளியின் காதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  வள்ளியின் காதல் பற்றி, இயக்குனர் ராதிகா கணேஷ் கூறுகையில், முருகன் - வள்ளியின் காதலை திரைப்படம் போன்ற காட்சியமைப்புடனும், நடனத்துடனும், மேடையில் அரங்கேற்றும் முயற்சி செய்தோம். தமிழ் மொழியின் அடையாளமான, நாட்டுப்புற நடனம், பாரம்பரிய நடனம், தமிழர்களின் வீரதீரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரியமான கலைகள், வித்தைகள் மற்றும் தமிழ் இசை என அனைத்தையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை வடிவமைத்தோம், என்றார்.

  அசந்து போன அமெரிக்கர்கள்

  அசந்து போன அமெரிக்கர்கள்

  ஐஸ்மென் சென்டரில் நாள் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளது. இந்திய நிகழ்ச்சிகளும் பெருமளவில் நடைபெறுகின்றன. அரங்கத்தை நிர்வகிக்கும் அமெரிக்க ஊழியர்கள், இது வரையிலும் பார்த்த இந்திய நிகழ்ச்சிகளில் இது தான் மிகச்சிறந்த்தாகும் என்று கருத்து தெரிவித்தனர். இசை, நடனம், பங்கேற்பாளர்களின் எனர்ஜி லெவல் என அனைத்திலும் சிறப்பாக இருந்தது என்றனர். மொழி தெரியாதவர்களுக்கும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என்றால் அது தமிழ் மொழியின் சிறப்புதானே!

  அடுத்த தலைமுறை தமிழர்களை நோக்கி

  அடுத்த தலைமுறை தமிழர்களை நோக்கி

  சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும், இயக்குனருமான வேலு கூறுகையில், 'அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ்க் குடும்ப குழந்தைகளுக்கு, தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரங்களை முழுமையாக தெரியப் படுத்தவும், அவர்கள் 'தமிழர்' என்று பெருமிதத்தோடு தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவும் பல்வேறு நிகழ்ச்சிகளையும், ப்ளேனோ தமிழ்ப் பள்ளி வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். வள்ளியின் காதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மற்றும் கண்டுகளிக்கும் குழந்தைகளுக்கு, தமிழ் மற்றும் தமிழர்களின் அடையாளங்கள், எளிதில் மனதில் சென்றடைகின்றன. தன்னார்வ சேவை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்ற வாழ்க்கை நெறிகளும் அறிந்து கொள்கின்றனர். சாதனையாளர்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும், தமிழ்க் குழந்தைகளுக்கு, பெரிய ஊக்க சக்தியாகவும் அது அமைகிறது' என்றார்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Many Americans have stunned after watched Valliyin Kadhal, a two and half hour dance drama was performed in Dallas US, based on Lord Muruga - Valli love marriage.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more