தாழப் பறக்கும் காக்கைகள் - 25: ஆணவ படம் இல்லீங்க...
-கதிர்
விஜய் டீவியில் செய்தி ஒளிபரப்பு தொடங்க ரொம்ப ஆர்வமாக இருந்தார் ரபி பெர்னாட். அதற்காகவே 'சீனியர் ப்ரொட்யூசர் - நியூஸ் & கரன்ட் அஃபேர்ஸ்' என்ற பதவியை உருவாக்கிக் கொடுத்தார். உற்சாகமாக ஏற்றுக் கொண்டேன்.
மல்லய்யாவின் செல்வத்தால் சன் டிவியின் செல்வாக்கை வெல்ல முடியவில்லை. நியூஸ் புல்லட்டின் ஒளிபரப்ப மத்திய அரசு அனுமதி கிடைக்கவே இல்லை. முக்கியத்துவம் இல்லாத நாட்டு நடப்புகளைத் தயாரித்து வழங்கி போரடித்தபோது விகடன் அழைப்பு வந்தது. ஜூனியர் விகடன் பொறுப்பை ஏற்க ரபியைப் பிரிந்தேன்.
நாளிதழ் திட்டத்துக்கு தலைமை தாங்க தகுதியானவனா என்று மதிப்பிடவே மதன் - ராவ் ஜோடி அளவிட்டது என்பது அப்போது தெரியாது. குமார், கோசல், வெங்கி, திருமா, லச்சு.. என்று பரந்து விரிந்த அதிரடிப் படையின் அபார பங்களிப்பால் வேகமாக வளர்ந்த விகடன் பேப்பர் 'தவிர்க்க முடியாத காரணங்களால்' திடுமென நிறுத்தப்பட்டது.
நியாயமான இழப்பீடு தொகையுடன் பலரும் விடை பெற்றார்கள். சிலர் வெவ்வேறு விகடன்களுக்கு மாற்றப்பட்டனர். நாளிதழ் தலைவனாக இருந்தவனுக்கு ஆறுதல் பரிசாக மகளிர் இதழின் பொறுப்பு தரப்பட்டது. நிர்வாகத்தின் நோக்கம் என்னவென்று மற்றவர்கள் பட்டிமன்றம் நடத்தினர். சீனிவாசன் மூலமாக இறைவன் அளித்த பெரும் வரம் அந்த பொறுப்பு என்பது எனக்கும் அப்போது தெரியாது.
அவள் விகடன் வழியாக புதிதாய்ப் பிறந்தேன். தினமும் இறந்தேன். புதிதாய் சுவாசித்தேன். புது உலகைப் பார்த்தேன். ரசித்தேன். படித்தேன். அழுதேன். சிரித்தேன். பயந்தேன். துணிந்தேன். தொழுதேன்.
பெண் என்பவள் உண்மையில் யார்? அவளுக்கென்று ஒரு மனம் இருப்பது உண்மையா? ஆண் உலகத்துடன் அவள் உலகம் எவ்வாறு மாறுபட்டது? ஆண் பற்றிய அவள் பார்வை என்ன? பலவீனங்கள் என்ன? பலங்கள் என்னென்ன? விருப்பங்கள் என்ன? கனவுகள் என்ன?
இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தேட வழிகாட்டிய களம் அது. அம்பை, பாலகுமாரன், சுதா மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதி, ரமணி சந்திரன் போன்றவர்களின் முதல் பிரதியை எடிட் செய்யும்போது புதிய ஆழங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தமிழ் தெரிந்த வாசகிகள் அனைவரையும் எழுத்தாளர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அப்போது உதித்ததுதான். அதற்கு செயல்வடிவம் கொடுத்தபோது சுழலில் சிக்குவேன் என நினைக்கவில்லை.
முன்னணி நடிகை முதல் முதியோர் இல்லத்தின் பொறுப்பாளர் வரை அத்தனை அலைவரிசை பெண்மணிகளும் மனம் திறந்து அனுபவங்களைக் கொண்டு வந்து கொட்டியபோது திக்குமுக்காடிப் போனேன்.
ஆண் ஆதிக்க சமுதாயம் என்ற வார்த்தைகளை பலநூறு தடவை கேட்டிருந்தாலும், அதன் நிஜமான அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. ஆண்களின் வக்கிரங்களில்தான் எத்தனை வகைகள். எத்தனை ரகங்கள்.
வக்கிரம் என்பதை உணராமலே வார்த்தைகளை உச்சரிப்போர் அதிகம் என்பது ஆறுதலா சாபமா தெரியவில்லை.
எனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தை திட்டுகளை வரிசைப்படுத்திப் பார்த்தேன். 99 சதவிதம் பெண் சம்பந்தப்பட்டவை. மட்டமான ஒரு ஆணை திட்டும்போதும் எந்த வகையிலும் சம்பந்தப்படாத அவனது தாய், தங்கை, தாரத்தை முன்மொழிந்துதான் வசை பாடுகிறோம்.

என் வாயிலிருந்து கெட்ட வார்த்தை வந்ததில்லை. ஆனால் மனதிலும் தோன்றாமல் ஒழிந்தால்தான் என்னை நான் மன்னிக்க இயலும்.
திட்டாமலும் தாக்காமலும் பெண்களைக் காயப்படுத்தத் தெரிந்த ஆண்கள் அதிகம். அதையெல்லாம் இங்கே விவரிக்க அவசியம் இல்லை. வாசிக்கும் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் அது தெரியும்.
கடிதங்கள், டெலிபோன் மூலமாக உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட வாசகிகள் ஏராளம். ஒவ்வொரு அனுபவத்தையும் டீமில் இருந்த கல்பனா, சந்திரா, ஜெயா, கோமளா, துரை போன்ற சகாக்களுடன் சேர்ந்து அலசும்போது புதுப்புது பரிமாணங்கள் தெரியவரும்.
ரகசிய சித்ரவதையைப் பகிரங்கமாக செய்யக்கூடிய ஆண்களை அப்போது இனங்காண முடிந்தது.

‘முகம் பார்க்கக்கூடத் தேவையில்லை. மாதவிலக்கு என்பதை மோப்பம் பிடித்தே கண்டு பிடித்து விடுவார் அந்த டைரக்டர். அழைப்புக்கு இணங்காத எனக்காக சிறப்புக் காட்சி அமைத்தார். மூன்றடி ஆழமுள்ள குளத்தில் குளிக்கும் காட்சி. மூன்று நாள் தொடர்ந்து நீருக்குள் நிற்கவைத்து பழி தீர்த்தார். எனக்கு புண்கள் சரியாக மூன்று மாதம் தேவைப்பட்டது' என்று அந்த நடிகை விவரித்தபோது எங்களால் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை.
இந்த சம்பவங்களை இங்கே நினைவு கூரக் காரணம் உண்டு.
பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் தாக்குதல்கள் ஏராளம். அவற்றின் உச்சகட்டம் பலவந்த உடலுறவு. இந்தியா அந்த விஷயத்தில் முதல் இடம் வகிக்கிறது. 21 நிமிடத்துக்கு ஒரு பெண் இங்கே வல்லுறவுக்கு ஆளாகிறாள்.
ஊடகங்கள் பொறுப்புடனும் பெரும்பாலும் பொறுப்பில்லாமலும் அந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. ஆனாலும் வன்புணர்வாளர்கள் அடங்கவில்லை.
இது உடல் நோயல்ல. மன நோய். ஆண்களின் சிந்தனை ஓட்டத்தைச் சரியாக தெரிந்து கொண்டால்தான் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.
லெஸ்லி உட்வின் என்ற பிரிட்டிஷ் பெண்மணி அதற்காக நமக்கு உதவி இருக்கிறார். பிபிசி அதற்கு தோள் கொடுத்திருக்கிறது. 'இண்டியா'ஸ் டாட்டர்' என்று பொருத்தமாக தலைப்பிட்ட 59 நிமிட டாக்குமென்டரியை அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.
அந்த ஆவணப் படத்தின் பெற்றோர் ஆசையும் அகம்பாவமும் அல்ல. நேர்மையும் நல்லெண்ணமும்.
அதற்கு வழங்க வேண்டியது தடையும் தண்டனையும் அல்ல. விருதும் பாராட்டும். ஓராயிரம் சொற்கள் சொல்வதை காட்டிலும் ஒரு போட்டோ அதிகமான உண்மைகளை அறியவைக்கும் என்பார்கள்.
ஓராயிரம் போட்டோக்கள், போராட்டங்களைவிட ஒரு ஆவணப்படம் அழுத்தமாக உள்ளத்தைக் கிள்ள முடியும் என்று நிரூபித்து இருக்கிறது 'இந்தியாவின் புதல்வி'. படம் பார்த்த பல லட்சம் பேரில் கதறி அழாதவர்கள் பத்து பேர் தேறலாம். காட்சிகளை இங்கே விவரித்து உங்கள் கண்ணீருக்கு அணை கட்ட எனக்கு மனமில்லை.
அது ஜோதி சிங் நினைவுக்கு நான் செய்யும் மரியாதை ஆகாது.
ஆமாம். நிர்பயா எனும் பெயரால் நிஜத்தை மூட நினைக்கும் ஆண் வர்க்கத்துக்கு சவாலாக அவளது பெற்றோர் அம்பலப்படுத்திய உண்மைப் பெயர்.
மோடி இடத்தில் நான் இருந்திருந்தால் இப்படி ஆணையிட்டு இருப்பேன்:
'இந்தியாவின் புதல்வி ஆவணப்படத்தை மத்திய அரசு விலைக்கு வாங்கி அனைத்து மொழிகளிலும் டப் செய்து டீவி சேனல்களிலும் தியேட்டர்களிலும் வெளியிடும். சேனல்களில் படம் முடிந்தபின் 10 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்'.

படத்தைப் பார்க்காமலே தடை அறிவிக்கும் அரசின் தலைவர் அவ்வாறு ஆணையிடுவது அரிது.
ஆனால் ஜெயலலிதா செய்யலாம்!
(தொடரும்)
தொடர்புக்கு: [email protected]












Click it and Unblock the Notifications