For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் சிங்கப்பூர் மக்கள் லீ குவான் யூவைக் கொண்டாடுகின்றனர்?

By Shankar
Google Oneindia Tamil News

காலமான சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூவுக்கு தமிழக தலைவர்களும் பல அமைப்பினரும் அஞ்சலி செலுத்துகின்றனர். வெளிநாட்டுத் தலைவருக்கு இங்கே இந்த அளவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபூர்வம்.

சிங்கப்பூர் ஒரு நாடு என்று சொல்ல முடியாது. அவ்வளவு சிறியது. நகரம்தான். சிட்டி ஸ்டேட் என்கிறார்கள். சென்னையைவிட அளவில் சற்று பெரிது. ஜனத்தொகையில் பாதிதான்.

வானளாவிய கட்டிடங்கள். பிரமாண்டமான துறைமுகம். மிகப்பெரிய விமான நிலையம். சுத்தமான சாலைகள். தடங்கல் இல்லாத போக்குவரத்து. இதெல்லாம் சிங்கப்பூரின் பெயர் சொன்னதும் நினைவில் கடந்து போகும் விஷயங்கள்.

இவற்றைவிட முக்கியமானது உண்டு. சிங்கப்பூரில் குற்றங்கள் மிக மிக குறைவு. எந்த சட்டத்தையும் எந்த விதையையும் அங்குள்ள மக்கள் மீறுவதில்லை. லஞ்சம் இல்லை. ஊழல் கிடையாது. அரசு நிர்வாக எந்திரத்தின் சக்கரங்கள் அணுவினாடி தடுமாறாமல் துல்லியமாக சுழல்கின்றன.

Thaazha Parakkum Kaakkaigal - 27

இந்த ஒழுங்கையும் கட்டுப்பாடையும் உலகில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. சர்வாதிகார மன்னர் ஆளும் நாடானாலும் சரி, ராணுவ ஆட்சி நடக்கும் நாடானாலும் சரி. எனவே பாடப் புத்தக நாடு என்றார்கள்.

ஏனைய நாடுகள் கனவு மட்டுமே காணக் கூடிய சமூக ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டியவர் என்பது லீ குவான் யூவுக்கு சூடப்படும் மிகப்பெரிய புகழாரம்.

நாடும் மக்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கனவு கண்ட பல தலைவர்களை உலக வரலாறு பதிவு செய்திருக்கிறது. அவர்களில் ஒருவர்கூட கனவு நனவாவதை காண உயிரோடு இருந்ததில்லை. நேருவைக் காட்டிலும் எடுத்துக்காட்டு நமக்கு தேவையில்லை.

லீ மட்டுமே விதிவிலக்கு.

அதனால்தான் உலகமே அவரை கொண்டாடுகிறது. அல்லது அப்படி நமக்கு தோன்றுகிறது.

Thaazha Parakkum Kaakkaigal - 27

இந்த மகத்தான சாதனையை சாத்தியமாக்க லீ கொடுத்த விலை என்ன? இந்த கேள்விக்கு விடை காண்பதில் அடங்கியிருப்பது சிங்கப்பூரின் எதிர்காலம் மட்டுமல்ல. நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் நிகழ்காலமும் கூட.

இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் முயற்சி அல்ல. பெரும்பான்மையானவர்கள் வாசிக்காமலே புரட்டிவிட்டு செல்லும் வரலாற்றின் சில பக்கங்களை உரத்த குரலில் எடுத்து உரைக்கும் பணி.

ஏழ்மையும் முரண்பாடுகளும் மலிந்திருந்த சிங்கப்பூரை உலகின் வளமான நாடாக மாற்றினார் லீ. தனது நாட்டுக்கு அவர் செய்ததை, நமது நாட்டுக்கு தான் செய்ய துடிக்கிறார் மோடி.

"மக்களுக்கு எதுவும் தெரியாது. நல்லது கெட்டது புரியாது. அவர்களுக்கு எது வேண்டும் எது கூடாது என்பதை நாம்தான் (அதாவது அரசாங்கம். அதாவது பிரதமர்) சொல்லிக் கொடுக்க வேண்டும்.

"எதிர்க்கட்சிகள் இந்த மக்களைவிட மேலென்று கருத முடியாது. சாத்தியம் இல்லாத, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பார்கள். அரசாங்கம் நல்லது செய்ய விடாமல் தடுப்பதுதான் அவர்களின் ஒரே வேலை.

"ஊடகங்கள் மக்களின் மூளையை மழுங்கடிக்கும் சாதனங்கள். தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்குகள் அதில் நிறைந்திருக்கிறார்கள்.

மக்களை முட்டாளாக்கி பணம் பண்ணுவது ஊடக முதலாளிகளின் வர்த்தக மந்திரம்.

"ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒருவர் பேசுவது அடுத்தவருக்கு புரியும் வகையில் ஒரே மொழியில் பேச வேண்டும். அதுவே அந்த நாட்டின் முதல் மொழியாக இருக்க வேண்டும். அவரவர் தாய்மொழியை அடுத்ததாக வைத்துக் கொள்ளலாம்.'

"பிறப்பால் வரும் ஏற்றத் தாழ்வுகளை யாராலும் நீக்க முடியாது. உலகில் சில இனங்கள் மற்ற இனங்களை காட்டிலும் மேலானவை என்பது அறிவியல் உண்மை. எல்லோரையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பது எதார்த்த நிலைக்கு மாறானது'.

Thaazha Parakkum Kaakkaigal - 27

"பயிர் வளராது என்று தெரிந்த நிலத்தில் குழி தோண்டி விதை ஊன்றி நீர் ஊற்றி காத்திருப்பது கால விரயம் தவிர வேறில்லை".

-இப்படிப்பட்ட தீர்க்கமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரராக வாழ்ந்தவர் லீ.

இங்கிலாந்தில் படித்தபோது எல்லோரையும்போல கம்யூனிச சித்தாந்தத்தால் கவரப்பட்டு, சொந்த நாட்டில் தொழிற்சங்க வாதியாக உழைப்பாளிகளின் வழக்குரைஞராக முதல் அடி எடுத்து வைத்த லீ வெகு விரைவிலேயே முதலாளித்துவ இலக்குகளுக்கு புது வடிவம் கொடுத்து பாதை மாறிய நிகழ்வு ஆசிய அரசியலின் திருப்புமுனை.

உலகில் மிக அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் லீ. இன்றுள்ள பல தலைவர்களுக்கும் இறந்துபோன பல நாட்டு தலைவர்களுக்கும் ஆசானாக விளங்கியவர். இந்தியாவை மிக நெருக்கமாக கவனித்தவர்.

தமிழர்கள் அறிவாளிகள் என சான்றளித்தவர். ஆனால் பயனற்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடுவதால் அறிவின் பலனை அனுபவிக்க முடியாதவர்கள் என்றும் கணித்தவர்.

லீ நல்லவரா கெட்டவரா?

தொடர்ந்து புரட்டுவோம்.

(தொடரும்...)

English summary
The 27th episode of Kathir's Thaazha Parakkum Kaakkaigal speaks about Singapore former prime minister Late Lee Quan Yew
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X