• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அறிந்தும் அறியாமலும் - 13: ஒன்றே இன்னொன்று

By Shankar
|

-சுப வீரபாண்டியன்

கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்பதெல்லாம், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதத்தின் வேறு பெயர்களே ஆகும். காலந்தோறும், நாடுகள் தோறும் இவ்வாதம் முடிவற்றதாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது.

‘உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்னும் சமரசப் போக்கும், "நாங்கள் கடவுள் என்கிறோம், நீங்கள் இயற்கை என்கிறீர்கள். விடுங்கள் இயற்கைதான் கடவுள்" என்று ஒத்துப்போகும் போக்கும், ‘நழுவல் போக்குகளாக'ச் சிலநேரம் எழுவதுண்டு.

திருமூலரின் ‘அன்பே சிவம்' என்னும் பாடல் வரியை ஏற்றுக் கொள்வர் சிலர். "கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை விடுவோம், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குதானே?" என்று கேட்டு மறிப்பார் சிலர்.

இயற்கை, அன்பு, சக்தி முதலான எந்த ஒரு சொல்லும், ‘கடவுள்' என்னும் கோட்பாட்டிற்குப் பொருந்திவரக் கூடிய, அதற்கு இணையான சொல் ஆக முடியாது. வாதத்தைத் தொடர விரும்பாதவர்களும், இயலாதவர்களும் ஏற்றுக்கொள்கின்ற ஓர் இடைநிலை ஏற்பாடுதான் அது!

நாம் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்புடையவர்கள். அவற்றுள் ஒன்றாகவே ‘அன்பு' என்னும் உணர்ச்சி உள்ளது. அந்த ஒன்று மட்டுமே எப்படிக் கடவுளாக மாறும்? அப்படியானால் மற்ற உணர்ச்சிகளுக்கெல்லாம் என்ன பெயர்? மேலும், அன்பே கடவுள் என்றால், அறிவுக்கு என்ன பெயர்?

அவ்வாறுதான் ‘சக்தி' என்பதும்! சக்தி என்றால் தமிழில் ஆற்றல். உலகில் உள்ள பொருள்(matter)களிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது. பொருளுக்கும், ஆற்றலுக்கும் (energy) உள்ள தொடர்பையும், அவை எந்த விகிதத்தில் எப்படி ஒன்று இன்னொன்றாக மாறுகின்றது என்பதையும் (E=mc2) தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து 1905ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் (Einstin)வெளியிட்டார். அதனைத்தான் பொதுச் சார்பியல் தத்துவம் (General Theory of Relativity)என நாம் அழைக்கின்றோம். பிறகு எப்படிப் பொருள் இல்லாமல் ஆற்றல்(சக்தி) மட்டும் கடவுளாகிவிடும்?

‘இயற்கைதான் கடவுள்' என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்று போலத் தோன்றும். ஆனால் அதுவும் பிழையானதே! இறை நம்பிக்கையாளர்கள், மழையை, நெருப்பை, காற்றைக் கடவுள் என்று சிலவேளைகளில் கூறினாலும் (வருண பகவான், வாயு பகவான்), இவற்றையெல்லாம் கடவுள்தான் நமக்குத் தருகின்றார் என்றும் நம்புகின்றனர். பூமி, வானம், பேரண்டம் எல்லாவற்றையும் கடவுள்தான் படைத்தார் என்கின்றனர். அதாவது இயற்கையையே இயக்குகின்ற, இயற்கையை விஞ்சிய ஆற்றல் (Super natural power) ஒன்று இருப்பதாக எண்ணுகின்றனர். பிறகு எப்படி அவர்கள் இயற்கையைக் கடவுள் என ஏற்க முடியும்?

பேரண்டம் (Universe), உலகம், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்தும், அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறும் படைப்புக் கொள்கையை (Theory of Creation) நம்புவோரும், எதுவும், யாராலும் படைக்கப்படவில்லை, இயற்கையாக ஒன்று, இன்னொன்றாக மாறி வளர்ந்த வளர்ச்சியே உண்மையானது என்று கூறும் பரிணாமக் கொள்கையை (Theory of Evolution)ஏற்போரும், ஒரு நாளும் ஒன்றுபட முடியாது. இவ்விரு கருத்துகளும், இரு துருவங்களாகவே நிற்கும்!

"கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை. மாறாக, மனிதர்களே கடவுளைப்படைத்தார்கள். அதாவது, மனித மூளை என்னும் ‘பொருளில்' இருந்து உருவான ‘கருத்து'தான் கடவுள். ஆதலால், பொருள்தான் முதலில் தோன்றியது. கடவுள் என்னும் கருத்து பின்னால் தோன்றியது" என்பதே பொருள் முதல் வாதம் (Materialism).

"குயவர் இல்லாமல் பானை வர முடியுமா? தச்சர் இல்லாமல் நாற்காலி வர முடியுமா? எந்த ஒன்றும், ஆக்குவோன், படைப்போன் இல்லாமல் தானே உருவாக முடியாது. உலகமும் அப்படித்தான். படைத்தவன் இல்லாமல் தானே வந்திருக்க முடியாது. அந்தக் கடவுள் சிந்தனை(கருத்து)தான் முதலில்! பொருள்கள் எல்லாம், அந்தக் கருத்திலிருந்து பிறந்து வளர்ந்தவையே" என்று கூறுவது கருத்து முதல் வாதம்(Idealism).

கடவுள் என்று கூறாமல், பிரம்மம், ஆன்மா(பரமாத்மா, ஜீவாத்மா) என இரண்டு சொற்களைக் கூறி, அவை இரண்டுமே ஒன்றுதான்(‘அஹம் பிரம்மாஸ்மி') என்கிறது ஓர் உபநிடதம். "உலகம் ஒரு மாயை. எல்லாம் வெறும் தோற்றம். ஆத்மா ஒன்றே உண்மை. பிரம்மமும், ஆத்மாவும் இரண்டில்லை, ஒன்றேதான்" என்றார் ஆதிசங்கரர். இதனைத்தான் அத்துவைதம் (துவைதம் = இரண்டு, அ+துவைதம் = இரண்டில்லை) அல்லது மாயாவாதம் என்று கூறுகின்றனர். இந்த அத்வைதக் கொள்கையைத்தான், தன் வாழ்நாள் முழுவதும், வெவ்வேறு வடிவங்களில் உயர்த்திப் பிடித்தார் விவேகானந்தர். "தெய்வம் நீ என்று உணர்" என்றார் பாரதியார். ஆக மொத்தம், யாக்ஞவல்லீயரின் உபநிடதக் கொள்கைதான், இந்து மதத்தின் கருத்து முதல் வாதமாகக் காட்சியளிக்கிறது.

‘உலகே மாயம்' என்னும் கோட்பாட்டை உலகத்திற்கு அறிவித்த யாக்ஞவல்லீயர், ஜனக மன்னருக்கும் அதனை எடுத்துரைத்தாராம். அவரின் அறிவுத்திறன் கண்டு வியந்த மன்னர், 10 ஆயிரம் பசுமாடுகளையும், ஓர் இலக்கம் (ஒரு லட்சம்) பொற்காசுகளையும் பரிசாக அவருக்கு அளித்தாராம். "பசு மாடுகள், பொற்காசுகள் எல்லாம் மாயை. எனக்கு எதற்கு இந்த மாயத்தோற்றங்கள்?" என்று கேட்டு யாக்ஞவல்லீயர் அவை அனைத்தையும் புறக்கணித்துவிடவில்லை.

எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, இரண்டு பெண்களை மணந்து கொண்டு இன்பமாக வாழ்ந்தாராம்.

‘உலகே மாயம், வாழ்வே மாயம், பொருள்கள் எல்லாம் மாயம்' என்று எழுதலாம். பேசலாம். ஆனால் பொருள்கள் இன்றி இவ்வுலகில் எவர் ஒருவராலும் வாழ முடியாது.

அது சரி...ஆனால், பொருள்கள் எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவைதானே என்கின்றனர், கருத்து முதல்வாதிகள். பொருள்கள் படைக்கப்பட்டவைகளாக இருந்தால், அவை அழியக்கூடியனவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் தர்க்கம் (logic).

Subavee's Arinthum Ariyamalum - Part 13

எந்தப் பொருளையும், யாராலும், கடவுள் உள்பட அழிக்க முடியவில்லை என்பதுதானே உண்மை. சிவபெருமான் ‘நெற்றிக் கண்ணைத்' திறந்து எதிரில் உள்ளவரைச் சாம்பலாக்கி விட்டதாகப் புராணம் சொல்கிறது. சாம்பலும் இந்தப் பிரபஞ்சத்தில்தானே உள்ளது. முற்றுமாக அழிந்துவிடவில்லையே!

திடப்பொருளைத் திரவமாக்கலாம், திரவத்தைக் காற்றாக(வாயு) ஆக்கலாம். வடிவ மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியுமே அல்லாமல், ஒன்றுமே இல்லாத சூனியமாக்கிவிட முடியுமா? அப்படியானால் எந்த ஒன்றையும் முற்றாக அழிக்க முடியவில்லை என்றுதானே பொருள். அழிக்க முடியாத ஒன்று எப்படி ஆக்கப்பட்டிருக்கும்? சூனியம்(வெறுமை) ஆக்கமுடியாத ஒன்று, எப்படிச் சூனியத்திலிருந்து வந்திருக்க முடியும்?

நாம் காணும் பொருள் அனைத்தும், ஏற்கனவே உலகில் இருந்தவைதான். புதிதென்று ஏதும் இல்லை. ஒரு வீட்டில் புதிய கதவொன்று வந்துள்ளதென்றால், எங்கோ ஒரு பழைய மரம் வெட்டப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம். ஒன்றே இன்னொன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று, ஒன்றுக்காக இன்னொன்று இப்படித்தான் உலகம் இயங்குகின்றது.

உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வடிவத்திலிருந்து, இன்னொரு வடிவத்திற்கு மாறுகின்றன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுகின்றன. மற்றபடி உருவாக்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. நிகழ்வதெல்லாம் உருமாற்றமும், இடமாற்றமுமே! இவ்விரு மாற்றங்களுக்கும் மனித உழைப்பே அடிப்படையாக உள்ளது.

இந்த அடிப்படையில், உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் ஆக்கப்படவில்லை, மனித உழைப்பினால் ஆக்கப்படுகிறது என்னும் கோட்பாட்டை, 1848இல், சமூக விஞ்ஞானிகளான கார்ல் மார்க்சும், ஃபிரெடரிக் எங்கெல்சும் முன்வைத்தனர். ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்' (Dialectical Materialism)என்று அத் தத்துவத்திற்குப் பெயர் சூட்டினர்.

அவர்களுக்கு முன்பே, அதற்கு வித்திட்ட ஜெர்மானியத் தத்துவாசிரியர்கள் இருவரை நாம் மறக்காமல் குறிக்க வேண்டும். ஒருவர், ஃபிரடெரிக் ஹெகல் (Fredrich Hegal - 1770 -1831). இன்னொருவர், ஃபாயர்பாக் (Feuerbach - 1804 - 1872)தத்துவத் துறையில், இவ்விருவரின் கொடையும் மிகப் பெரியது.

அறிஞர் ஹெகல்தான், இயக்கவியல் சிந்தனையை மிகத் தெளிவாக வெளியிட்டவர். "உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கும். இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது" என்னும் அரிய செய்தியை அவரே வெளியிட்டார். ஆனால் இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கடவுளே என்று நம்பிய கருத்து முதல்வாதியாக அவர் இருந்தார்.

கடவுளை மறுத்துப் பகுத்தறிவுக் கருத்தைச் சொன்னவர் ஃபாயர் பாக். அவர் இறுதியாக ஆற்றிய உரையின் சில பகுதிகளை, எழுத்தாளர் ஜவஹரின் நூல் (கம்யூனிசம் நேற்று & இன்று & நாளை) நமக்குத் தமிழில் தருகிறது.

இதோ அவ்வரிகள்:

மனிதர்களைக் கடவுளின் நண்பர்களாக இருப்பதிலிருந்து,

மனிதர்களின் நண்பர்களாக

நம்பிக்கைவாதிகளாய் இருப்பதிலிருந்து,

சிந்தனையாளர்களாக

பிரார்த்தனை செய்பவர்களிலிருந்து,

உழைப்பவர்களாக

சொர்க்கத்துக்கு மனுப் போடுபவர்களிலிருந்து,

இந்த உலகத்தின் மாணவர்களாக

பாதி மிருகம், பாதி தேவதை என்று ஒப்புக்கொள்ளும் கிறித்துவர்களிடமிருந்து, மனிதர்களாக, முழுமையான மனிதர்களாக

ஆக்குவதையே என் கடமையாக் கொண்டுள்ளேன்".

இவ்வாறு இயங்கியலை ஹெகலும், பொருள்முதல் வாதத்தைப் ஃபாயர்பாக்கும் முன்வைக்க, இரண்டையும் செழுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து (synthesis) ‘இயங்கியல் பொருள்முதல் வாதத்தை' இவ்வுலகிற்கு அளித்தனர், மார்க்-சும், எங்கெல்சும்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The 13th part of Subavee's Arinthum Ariyamalum discusses about God, materialism and idealism.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more