அதிகார விளக்கம்: இனிமையான சொற்கள் பிறரின் மனதில் மகிழ்ச்சியையும் நெருக்கத்தையும் உருவாக்குகின்றன. கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்து, உண்மையுடனும் அன்புடனும் பயனுள்ள சொற்களைப் பேசுவது நல்ல உறவுகளையும் நற்பெயரையும் உருவாக்கும்.
| எண் | குறள் |
|---|---|
| 91 |
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் பொருள்: அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
|
| 92 |
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் பொருள்: முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
|
| 93 |
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் பொருள்: பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
|
| 94 |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு பொருள்: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
|
| 95 |
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற பொருள்: தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
|
| 96 |
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் பொருள்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
|
| 97 |
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் பொருள்: பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
|
| 98 |
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் பொருள்: பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
|
| 99 |
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது பொருள்: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
|
| 100 |
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று பொருள்: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
|