அதிகார விளக்கம்: ஒழுக்கம் மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையான நற்பண்பாகும். நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்பவர் மதிப்பையும் நற்பெயரையும் பெறுகிறார். ஒழுக்கத்தை இழந்தால் செல்வம், கல்வி மற்றும் பிற சிறப்புகளும் பயனற்றதாகிவிடும்.
| எண் | குறள் |
|---|---|
| 131 |
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் பொருள்: ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
|
| 132 |
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை பொருள்: எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.
|
| 133 |
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் பொருள்: தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
|
| 134 |
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் பொருள்: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
|
| 135 |
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு பொருள்: பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
|
| 136 |
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து பொருள்: ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.
|
| 137 |
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி பொருள்: ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
|
| 138 |
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் பொருள்: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
|
| 139 |
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் பொருள்: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
|
| 140 |
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் பொருள்: முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
|