அதிகார விளக்கம்: அன்பு மனித வாழ்க்கையின் அடிப்படைப் பண்பாகும். அன்பு குடும்ப உறவுகளையும் நட்பையும் சமூக ஒற்றுமையையும் வளர்க்கிறது. அன்பில்லாத வாழ்க்கை பயனற்றதாகும்; அன்புடன் வாழ்பவர்கள் பிறரின் துன்பத்தையும் உணர்ந்து உதவ முன்வருகின்றனர்.
| எண் | குறள் |
|---|---|
| 71 |
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும் பொருள்: அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.
|
| 72 |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
|
| 73 |
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு பொருள்: பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்
|
| 74 |
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு பொருள்: குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்
|
| 75 |
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு பொருள்: இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்
|
| 76 |
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை பொருள்: அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.
|
| 77 |
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் பொருள்: எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
|
| 78 |
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று பொருள்: மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
|
| 79 |
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு பொருள்: குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?
|
| 80 |
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு பொருள்: அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்
|