அதிகார விளக்கம்: அளவற்ற ஆசைகள் மனக்குழப்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகின்றன. ஆசைகளை கட்டுப்படுத்தி தேவையானவற்றில் திருப்தியுடன் வாழ்வது மன அமைதியையும் தெளிவையும் வழங்கி, உயர்ந்த வாழ்க்கையை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 361 |
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து பொருள்: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
|
| 362 |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் பொருள்: பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
|
| 363 |
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் பொருள்: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.
|
| 364 |
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் பொருள்: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
|
| 365 |
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்ற திலர் பொருள்: ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
|
| 366 |
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா பொருள்: ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.
|
| 367 |
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் பொருள்: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
|
| 368 |
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும் பொருள்: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
|
| 369 |
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின் பொருள்: ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
|
| 370 |
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் பொருள்: ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
|