அதிகார விளக்கம்: சொல், செயல், ஆசை மற்றும் புலன்களை அடக்கி வாழ்வது மனிதனை உயர்த்தும். அடக்கம் அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்து, கோபம் மற்றும் தவறான செயல்களைத் தவிர்க்க உதவுகிறது; இதனால் நிலையான நற்பெயர் கிடைக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 121 |
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் பொருள்: அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
|
| 122 |
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு பொருள்: அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
|
| 123 |
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின் பொருள்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
|
| 124 |
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது பொருள்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
|
| 125 |
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து பொருள்: செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
|
| 126 |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து பொருள்: ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும்.
|
| 127 |
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு பொருள்: எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
|
| 128 |
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் பொருள்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
|
| 129 |
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு பொருள்: ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
|
| 130 |
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து பொருள்: கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
|