அதிகார விளக்கம்: ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது குறை கூறுவதும் அவதூறு பேசுவதும் உறவுகளையும் நம்பிக்கையையும் அழிக்கும். பிறரின் குறைகளைப் பரப்பாமல், உண்மை, அன்பு மற்றும் நன்மை தரும் சொற்களைப் பேச வேண்டும்.
| எண் | குறள் |
|---|---|
| 181 |
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது பொருள்: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது
|
| 182 |
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை பொருள்: அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
|
| 183 |
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் பொருள்: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
|
| 184 |
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் பொருள்: ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
|
| 185 |
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் பொருள்: அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
|
| 186 |
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும் பொருள்: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
|
| 187 |
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் பொருள்: கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
|
| 188 |
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு பொருள்: தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
|
| 189 |
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை பொருள்: பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!
|
| 190 |
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு பொருள்: புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
|