அதிகார விளக்கம்: சமூகத்திற்கும் பிறருக்கும் தேவையான நேரத்தில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வது மனிதனின் கடமையாகும். பிறரின் தேவையை உணர்ந்து உதவுவது அன்பையும் சமூக ஒற்றுமையையும் வளர்த்து, வாழ்க்கைக்கு உண்மையான பயனை அளிக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 211 |
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு பொருள்: பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?
|
| 212 |
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு பொருள்: முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
|
| 213 |
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற பொருள்: தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.
|
| 214 |
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் பொருள்: உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
|
| 215 |
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு பொருள்: உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
|
| 216 |
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் பொருள்: பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.
|
| 217 |
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் பொருள்: பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
|
| 218 |
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் பொருள்: செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
|
| 219 |
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு பொருள்: உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.
|
| 220 |
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து பொருள்: இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
|