அதிகார விளக்கம்: உயிர்களைக் கொன்று அவற்றின் உடலை உணவாக உட்கொள்வதைத் தவிர்த்து, அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்ட வேண்டும். உயிரின் மதிப்பை உணர்ந்து வாழ்வது கருணை, அறம் மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 251 |
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் பொருள்: தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
|
| 252 |
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு பொருள்: பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
|
| 253 |
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் பொருள்: கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
|
| 254 |
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல் பொருள்: இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
|
| 255 |
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு பொருள்: இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
|
| 256 |
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில் பொருள்: தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
|
| 257 |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின் பொருள்: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
|
| 258 |
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன் பொருள்: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
|
| 259 |
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று பொருள்: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
|
| 260 |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் பொருள்: எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
|