அதிகார விளக்கம்: தமக்கு துன்பமாக இருப்பதைப் பிறருக்கும் செய்யக்கூடாது. பிறரின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து நடப்பது மனிதநேயத்தின் அடிப்படையாகும்; தீங்கு செய்யாமல் வாழ்வதே உயர்ந்த அறநெறியாகக் கருதப்படுகிறது.
| எண் | குறள் |
|---|---|
| 311 |
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் பொருள்: சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
|
| 312 |
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் பொருள்: நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
|
| 313 |
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் பொருள்: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
|
| 314 |
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல் பொருள்: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
|
| 315 |
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை பொருள்: அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
|
| 316 |
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் பொருள்: தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
|
| 317 |
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை பொருள்: எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
|
| 318 |
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் பொருள்: அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?
|
| 319 |
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் பொருள்: அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
|
| 320 |
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் பொருள்: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
|