• search

மயிலு முதல் கோகிலா வரை: உள்ளம் கவர்ந்த 5 முக்கிய ஸ்ரீதேவி பாத்திரங்கள்

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  துபாயில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் இறந்த நடிகை ஸ்ரீதேவி, ஏறக்குறைய 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  'துணைவன்' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, எண்ணற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  குழந்தை நட்சத்திரமாக, குறும்பான குமரி பெண்ணாக, பாடகியாக, ஆபத்தை அறியாத துணிக்கடை விற்பனை பெண்ணாக, ஆங்கிலம் தெரியவில்லை என பிள்ளைகளும், கணவரும் பரிகாசம் செய்யப்படும்போது சவாலாக எடுத்துக் கொண்டு ஆங்கிலம் கற்கும் நடுத்தர வயது பெண்ணாக என ஸ்ரீதேவி ஏற்று நடித்திராத கதாப்பாத்திரமே இல்லை எனலாம்.

  தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவியின் 5 முக்கிய திரைப்படங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

  16 வயதினிலே

  திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு கிராமத்து வெகுளிப் பெண்ணாக தோன்றும் ஸ்ரீதேவி, தான் ஏமாற்றப்பட்ட பின்னர் மிகவும் முதிர்ச்சியான மனோபாவத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்.

  தான் முன்பு ஏளனம் செய்த கமல் ஹாசனை ஏற்றுக்கொள்வதும், வில்லன் ரஜினியை புறந்தள்ளும் கண்டிப்பும் அந்த சிறு வயதிலேயே ஸ்ரீதேவியின் நடிப்பாற்றல் ஒரு சிறந்த நடிகை உருவாக உள்ளார் என்று புரியவைத்தது.

  மயிலு மயிலுதான்.

  மூன்றாம் பிறை

  தனது நினைவுகளை தொலைத்த ஒரு இளம் பெண்ணாக மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி மிக சிறப்பாக நடித்திருப்பார்.

  கமல் ஹாசனோடு ரயில் தண்டவாளத்தில் காது வைத்து ரயில் வரும் சத்தத்தைக் கேட்கும் காட்சியும், நாய்குட்டியை 'சுப்பிரமணி' என வாஞ்சையோடு அழைக்கும் பாங்கும், 'கண்ணே கலைமானே' பாடலில் அவர் காட்டும் ஆயிரமாயிரம் முகபாவங்களும் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருதையும், ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

  ஜானி

  அர்ச்சனா என்ற பாடகி கதாப்பாத்திரத்தில் தோன்றிய ஸ்ரீதேவி, அர்ச்சனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.

  தனது காதலன் சரியான பாதையில் செல்லவில்லையோ என்ற பரிதவிப்பும், சந்தேகமும் இருந்தாலும் கொட்டும் மழையில் ரஜினிகாந்தை எதிர்பார்த்து அவர் பாடும் பாடலில் நவரசத்தையும் வெளிபடுத்தியிருப்பார்.

  இந்த படத்தில் இடம்பெறும் இனிமை மிகுந்த பாடல்களை பாடியிருப்பது பாடகி ஜென்சியா அல்லது ஸ்ரீதேவியா என்று தோன்றும் அளவுக்கு ஸ்ரீதேவியின் பங்களிப்பு இருக்கும்.

  வறுமையின் நிறம் சிவப்பு

  இயக்குநர் கே. பாலசந்தரின் நடிப்பிலும், கமல் ஹாசனுக்கு இணையாகவும் ஸ்ரீதேவி நடித்த மற்றொரு படம் வரிசையில் வறுமையின் நிறம் சிகப்பு இடம்பெற்றாலும், இந்த படம் பல அம்சங்களில் தனித்துவத்தோடு திகழ்கிறது.

  பொறுப்பில்லாத தந்தை, நடுத்தர குடும்பம் என பல குடும்ப சுமைகளை தாங்கும் ஸ்ரீதேவி கமலோடு ஆரம்பத்தில் நட்போடும், பின்னர் காதலோடும் அருமையாக நடித்திருப்பார்

  'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது...' பாடலில் என்னென்ன முகபாவங்கள்! அமர்க்களப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி.

  மீண்டும் கோகிலா

  மடிசார் அணிந்து ஒரு குடும்பப் பெண்ணாக மீண்டும் கோகிலா திரைப்படத்தில் வலம்வந்த ஸ்ரீதேவி, பெண் பார்க்க வந்த கமலை பார்க்க தயங்குவதும், திருமணமான பின்னர் கமலை ஆதிக்கம் செய்ய முயல்வதும் நடிப்பில் பல மைல்களை கடந்திருப்பார்.

  தனது குழந்தையிடம் மொட்டை மாடியில் 'இதுதான் அப்பா போற ஃபிளைட்' என்று வானத்தில் சிறுபுள்ளியாக தெரியும் விமானத்தை சுட்டிக்காட்டுவது கொள்ளை அழகு.

  பிற செய்திகள் :


  BBC Tamil
  English summary
  ரயில் தண்டவாளத்தில் காது வைத்து ரயில் வரும் சத்தத்தைக் கேட்கும் காட்சியும், நாய்குட்டியை 'சுப்பிரமணி' என வாஞ்சையோடு அழைக்கும் பாங்கும், 'கண்ணே கலைமானே' பாடலில் அவர் காட்டும் ஆயிரமாயிரம் முகபாவங்களும் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருதையும், ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற