கதை சொல்லக் காத்திருப்பாள் என் கண்மணி.. முத்த மழையுடன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று குழந்தைகள் தினம்..!

குதூகலமாய் கொண்டாட வேண்டிய நாள் இன்று. குழந்தைகளுடன் இருந்த நேருவின் நெகிழ்வில், மகிழ்வில் அவர் உதிர்த்த வார்த்தை முத்துக்கள் - குழந்தைகள் தினமாய் கொண்டாடுகிறோம். நேருவுக்கு எப்படி ரோஜாக்களை பிடித்ததோ அதேபோல குழந்தைகளுக்கும் ரோஜாக்களை பிடிக்கிறது அதுவும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் என்றால் இஷ்டமோ இஷ்டம். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியா என்றார். ஆனால் நாமோ இன்றைய குழந்தைகள் தான் நாளைய பணியாளர்கள் என்று வளர்க்கிறோம். அதிலும் அழுத்தமாய் பணி என்று சொல்லியே வளர்க்கிறோம்.

Children's day special story

உளவியல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவராலேயே தன் குழந்தையை சரியாக வளர்க்க தடுமாறுகிறார்கள். இதை கேட்டால் இந்த உலகத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஓட வேண்டும் என்கிறார்கள். அப்படி ஓடி எதை சாதிக்க வேண்டும்? கூகிள் சுந்தர் பிச்சையாய் இருந்தாலும் சரி, அம்பானியாய் இருந்தாலும், குழந்தைகள் என்ற உலகத்தில் குதூகலமாய் குதித்து கொண்டாடிவிட்டு இன்று உலகத்தினரால் கொண்டாடப்படுகிறார்கள்.

நம் குழந்தைகள் அடிமைகள் அல்ல அவர்கள் நம்முடைய அன்பு பரிசுகள் என்று நினைத்து அரவணைத்தாலே அவர்கள் இந்த எல்லையில்லா உலகத்தை வென்று உங்கள் காலடியில் வைப்பார்கள். என் குழந்தை என் சொத்து என்று நினைக்காமல் என் குழந்தை என் அன்பு பரிசு என்று எண்ணும்போது உண்மையான உலகம் உங்கள் குழந்தையின் காலடியில் இருக்கும். சிறு வயதில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே ஆலமரமாய் அவர்கள் மனதில் வேரூன்றி தழைக்கும். நிறைந்த அன்பு உங்களின் வாழ்க்கையை உயர்த்தி பிடிக்கும். குழந்தைகள் உங்கள் வாழ்க்கையின் உணர்வுகள், உறவுகள் மற்றும் உயரங்கள். இந்த உணர்வுகளை , உறவுகளை உயர்த்தி பிடிப்போம்.

குட்டீஸ்களின் தினத்தில் ஒரு குட்டீஸ் கவிதை...

குறு குறு விழிகளோடு
விளையாட்டில் ரசனையோடு விளையாடி
கதைகள் சொல்ல காத்திருப்பாள் என் கண்மணி.

கற்பனை கதைகளை மட்டுமே
கேட்ட என் காதுகளுக்கு - தன்
வகுப்பு நிஜக் கதைகளை சொல்ல
காத்திருப்பாள் என் கண்மணி.

வீட்டிற்கு சென்றதுமே விளையாடலாம்
என்ற நினைப்பு - ஆனால்
அவள் வயிறு பசித்து காத்திருப்பதை
விழிகளில் சொல்வாள் என் கண்மணி.

சமைக்க ஆரம்பித்ததுமே அம்மா
இன்னைக்கு என்ன நடந்துச்சின்னா ...
என்று என் பதிலை கூட கேட்காமலே
பதில் சொல்ல எத்தனிக்கும் அழகே அழகு.

செல்லமாய் நான் கோபித்தாலும்
அவள் கொஞ்சல் நடையில் என்
குணத்தை மாற்றுவாள் - என்னை
குயில் போல இசைக்க வைப்பாள்.

அப்பாவிடம் அன்பு காட்டுவதை
அம்மா கோபிப்பாளோ என்று
செல்லமாய் சிணுங்கி கொண்டே
நெருங்கி கட்டி அணைப்பாள் முத்த
மழையில் என்னை மூழ்க வைப்பாள்.

இப்படி என் செல்லத்தை
தங்கமே என்று கூப்பிட்டால்
சேதாரம் எவ்வளவு என்பார்கள்
தமிழே என்று கூப்பிட்டால்
முத்தமிழில் எந்த தமிழ் என்பார்கள் .
ஈடில்லா என் மகளை எப்படி கூப்பிட்டாலும்
அப்பொருளைவிட உயர்ந்தவள்
விலை மதிப்பற்றவள்.

- தனிஷ்ஸ்ரீ, சென்னை

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today is Children's day and here goes a special story from our reader.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற