For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூக்கள் போலும் அருவிகள் போலும் ..

By Staff
Google Oneindia Tamil News

பச்சை அகலக்கரை போட்ட பளீர் வேட்டியில் இருந்தது யானை. விசாலமான அந்த அறையில் அங்கும் இங்குமாகசுற்றித் திரிந்து கொண்டிருந்தது. யானை மேல் ஆரோகணித்திருந்தாள் அபிநயா.

இரண்டு முன் பற்களை இழந்து அதனால் மேலும் பொலிவாகச் சிரிக்கும் அபிநயா.

அபிநயா சொன்னதையெல்லாம் அந்த யானை தட்டாமல் செய்து கொண்டிருந்தது. அபி இப்போது பாடத்தொடங்கினாள்.

Girl proud"யானை யானை அழகர் யானை

அழகரும் சொக்கரும் ஏறும் யானை

கட்டுக் கரும்பை முறிக்கும் யானை

காவேரித் தண்ணியைக் கலக்கும் யானை

குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்"

"ஏ .. யானை! மெதுவா போ! மகாராணி ஊரையெல்லாம் சுத்திப் பார்க்க வேணாமா .. இப்பதானே அரண்மனைஅகழியைத் தாண்டியிருக்கோம். இன்னும் ஒத்தைக்கால் மண்டபம் வரணும், குதிரை லாயம் வரணும் .. பசு மாடம்வரணும் .. பொறுமையா போ யானை .. "

யானை இடதும் வலதுமாகத் தலையாட்டியது. பிறகு தன் முன்னங்காலை நீட்டியது. முன்னங்காலை நீட்டினால்மகாராணி நகர்வலம் முடிந்தது என்று அர்த்தம். யானை மீதிருந்து முன்னங்கால்படி வழியாக இறங்கினாள்அபிநயா.

யானை மூச்சிரைக்க சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது.

"போதுண்டி செல்வம் .. யானைக்கு ரொம்ப களைப்பா இருக்கு என்றது."

"போ தாத்தா, பெரிய பெரிய அரண்மனைக் கதவெல்லாம் யானை மோதினா திறந்துக்கும்னு நீதானே சொன்னே?"

"ஆமா"

"என்னைத் தூக்கிட்டு ஒரு ரவுண்டு வர்றதுக்குள்ளே புசுபுசுன்னு மூச்சு வாங்கினா அது பேரு யானை இல்லை ..பூனை .. "

"தாத்தாவுக்கு எழுபது வயசாச்சுடா குட்டி .. இதுக்கு மேலே முடியாதுடா!"

அபிநயாவுக்கு வா.வீ.சண்முகசுந்தரம் என்ற வி.வி.எஸ்.நிறைய விளையாட்டுக்களைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். கிச்சுக்கிச்சு தாம்பாளம், சாட்பூட்த்ரீ, ஒளியாங்கண்டு என்று எத்தனையோ இருந்தாலும்அபிநயாவுக்குப் பிடித்தது, இந்த யானை விளையாட்டுதான்.

இருமருங்கிலும் நாட்டு மக்களெல்லாம் பார்த்திருக்க, கம்பீரமாக யானை மேல் லேசாக அசைந்தபடி ஊர்வலம்செல்வது ஒரு தனி இன்பம்.

Grand Father"தாத்தா .. ஒரே ஒரு தடவை .. "என்று அபிநயா வி.வி.எஸ்ஸின் தாடையைப் பிடித்து கெஞ்சும் நேரத்தில் கதவுதிறந்தது. வீரசேது மெளனமாக டை முடிச்சை நிரடியபடி தன் அப்பாவை ஒரு முறையும், மகளை ஒரு முறையும்பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றான்.

இரவு சாப்பாட்டு மேஜையில் அப்பளம் நொறுங்கும் சப்தம் ஐம்பது டெசிபல் அளவுக்கு மேல் இருப்பதாகப்பட்டது. பாதி ரசம் சாதத்தில் வி.வி.எஸ். இருந்தபோது வீர சேது மெதுவாக,

"ஸ்வீடன்ல ஒரு பையன், ஏழு வயசுதான், செஸ்ல உலக சாதனை பண்ணியிருக்கான். எட்டு பேரை ஜெயிச்சுஉலகத்தோட யங்கஸ்ட் செஸ் சாம்பியன் ஆகியிருக்கான். நம்ப அபிக்குட்டி செஸ்ல எவ்வளவு புத்திசாலிங்கறதுஉங்களுக்கே தெரியும்."

வி.வி.எஸ் தலையை உயர்த்தினார்.

"அபிக்குட்டியை இன்டர்நேஷனல் செஸ் சாம்பியனா ஆக்கற முயற்சில நானும் அவ அம்மாவும்ஈடுபட்டிருக்கோம். அந்த ஸ்வீடன் பையனோட சாதனையை முறியடிக்கனும்னா அபிநியா அதை ஆறுவயசுக்குள்ள பண்ணனும். அபிக்குட்டிக்கு ஆறு வயசு முடிய இன்னும் எட்டும் மாசம்தான் இருக்கு. .. அதனாலா .. "

"அதனால?"

"நீங்கதான் உதவி பண்ணனும்."

"என்னன்னு ?"

"அபிநயா இந்த சாதனையை அடையற வரைக்கும் நீங்க அவளைத் தொந்தரவு பண்ணக் கூடாது"

"நான் என்ன தொந்தரவு பண்றேன்?"

"அதான் இந்த, ஏய் அபி என்னடி விளையாட்டு அது?"

"யானை விளையாட்டு!"

"யானை, குதிரைன்னு அவளை திசை திருப்பாதீங்க. ஏன்னா செஸ்ஸுக்கும் நிறைய கான்சன்ட்ரேஷன்தேவைப்படும்."

"ஏன்டா, செஸ்ஸே, யானை, குதிரை விளையாட்டுதானே?"

"அப்பா! நான் சீரியஸா பேசறேன் .. "

இதற்குள் சாப்பாடு முடிந்து விட .. திருமதி வீரசேது, மெள்ள அந்த இடத்தை விட்டு அகல, அபிநயா சாப்பாட்டுமேஜையில் ஏறி உட்கார்ந்து கொண்டு இரண்டு கன்னங்களிலும் கைகளைத் தாங்கிக் கொண்டாள்.

வி.வி.எஸ். பேசத் தொடங்கினார்.

"அபிக் குட்டி பெரிய சாதனைச் சிறுமியா ஆகட்டும். நான் வேணாம்னு சொல்லல, ஆனா, ஒரு விஷயம் .. அறிவு,புத்திசாலித்தனம், திறமை இதெல்லாம் தானா காலப்போக்கில் இயல்பா வர வேண்டிய விஷயங்கள். ஒரு பூ மலர்றமாதிரி .. சின்னச் சின்ன வாய்க்கால ஓடி தடைகளைத் தாண்டி எல்லாம் ஒரு இடத்துல சங்கமமாகி ஓன்னுபேரிரைச்சலோட அருவி கொட்டுதே அப்படி .. "

"இதெல்லாம் ஸில்லி!"

"உன்னோட நிறைவேறாத அசையை அந்தப் பிஞ்சு மேல திணிக்கறதுக்கு என்ன பேரு?"

"ஓ.கே! வளக்காதீங்க. நீங்க அபிக்குட்டியை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, அவ்வளவுதான், முடியுமா, முடியாதா?"

"டிஸ்டர்ப் பண்றதுன்னா என்னன்னு எனக்கு விளக்கிச் சொல்லு ..."

"அவளைப் பாக்காதீங்க .. அவளோட பேசாதீங்க .. கண்ட கண்ட கதைகளையெல்லாம் சொல்லி அவளைக்கெடுக்காதீங்க .. அவளோட அம்மா செஸ்ல, காலேஜ் லெவல் சாம்பியன். நான் ஸ்டேட் டீமை செட் பண்ணினவன்.அபிநயா எங்கள செஸ்ல ஈஸியா ஜெயிக்கறா. உங்களைப் பார்த்தா மட்டும் பட்டிக்காட்டு மங்காத்தா மாதிரியானைங்கறா .. பூனைங்கறா .. இது வேணாம். டெம்போ இருக்காது, கான்சன்ட்ரேஷன் இருக்காது.அவ்வளவுதான், அபி, வா, பிராக்டீஸ் இருக்கு .."

வீரசேது, அபிநயாவுடன் கிளம்ப, வி.வி.எஸ். கூறினார் ..

"ஒரு விஷயம் மறந்துடாதே வீரசேது, குழந்தை, குழந்தையாத்தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். இந்தப்பருவம் ரொம்ப நாளைக்கு நீடிக்காத ஒரு அற்புதமான பருவம். கடைசி வினாடி வரைக்கும் அதை அவங்கஅனுபவிக்கனும். நம்ம அபி அதை இழந்துடக் கூடாதேங்கிறதுதான் என் கவலை .."

இதற்கு ஒரு அலட்சியப் புன்னகையை பதிலாகத் தந்து விட்டு வீரசேது போய் விட்டான்.

வி.வி.எஸ்ஸுக்கு விடியற்காலை நிரம்பப் பிடிக்கும். இருள் பிரியாத அரைகுறை வெளிச்சத்தில் நகரில்மிச்சமிருக்கும் பறவைகளின் ஒலியில், எங்கிருந்தோ காற்றின் ஈரத்தோடு ஈரமாக ஒட்டிக் கொண்டு வரும் பக்திப்பாடலில் கரைந்தபடி நடப்பது பிடிக்கும்.

வி.வி.எஸ். தன்னுடைய காலை நடையைத் துவக்க முயன்றிருந்த வேளையில் பிராக்டீஸ் ரூம் என்று சொல்லக்கூடிய அறையில் இருந்து அபிநயா பேசும் சப்தம் கேட்டது. வீர சேதுவுன் அதட்டல் குரலும் கூடவே. ஒரு நீண்டப்பெருமூச்சுடன் அன்றைய தினத்தைத் துவக்கினார் வி.வி.எஸ்.

எதிரில் எதிர்ப்பட்ட சாந்திவனத்தின் மகிழம்பூ மரங்களை என்றுமில்லாத ஒரு புதுப் பார்வை பார்த்து விட்டுத்திரும்பினார். வீடு திரும்பி நெடு நேரம் வரையில் நாசியில் அந்த மகிழம்பூ வாசனை.

ஒரு வாரம் கரைந்தது.

அபிநயாவைப் பார்க்க விடாமல் ஒரு சாமர்த்திய வியூகம் அமைத்திருந்தான் வீர சேது. பள்ளி நேரம் தவிர மற்றநேரங்களில் பிராக்டீஸ் ரூமிலேயே அடைந்து கிடந்தாள் அபிநயா.

அன்றைய இரவு வீரசேது அலுவலகத்திலுருந்து வீடு திரும்பியபோது வி.வி.எஸ்ஸோ, அவரது புத்தகங்களோ,உடைகளோ எதுவும் வீட்டில் இல்லை.

குஞ்சுகளால் பிய்த்தெறியப்பட்ட கோழி இறகுகளாலும், நீர் அடித்து விலகி விழுந்த நீர்த் திவலைகளாலும்நிரம்பியிருந்த சாந்திவனம் என்று சொல்லப்படும் முதியோர் இல்லத்தில் இருந்தார் வி.வி.எஸ்.

சர்வதேச செஸ் போட்டியில் கலந்து கொள்ள அபிநயாவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும் வரையில்வீரசேது சாந்திவனத்துக்கு வரவில்லை. அன்றொரு நாள் மாலை விமானம் ஏற இருப்பதாகக் கூறிக் கொண்டுஅபிநயாவை அழைத்து வந்தான்.

Girl learn computerஅபிநயா ஓடி வந்து தாத்தா எனக் கட்டிக் கொண்டாள்.

"அபிக்குட்டி .. தாத்தா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க .."

"ஜெயிச்சிட்டுத்தான் வரணும்.." என்றார் வி.வி.எஸ்.

அவர்கள் போன பின் அந்த முதியோர் இல்ல நிர்வாகி கேட்டார்.

"ஏன் சார்? இவ்வளவு வசதி இருக்கு . பையனும் நல்ல மாதிரியாத்தான் இருக்காரு .. அப்புறம் ஏன் இங்கே?"

"சின்ன விஷயம்தான்! மாங்காய் பிஞ்சுல துவர்க்கனும், காயில புளிக்கனும், பழத்துல தான் இனிக்கணும்னேன்.அவனுக்குப் புரியலே, புடிக்கலே வந்துட்டேன்..

குழப்பமாக பார்த்த நிர்வாகியின் தோளில் தட்டி விட்டுத் தூங்கச் சென்றார் வி.வி.எஸ்.

அடுத்த ஒரு வாரத்தில் தினசரிகளின் விளையாட்டுப் பக்கங்களைத் தன் பொக்கை வாய் பற்களுடன்அலங்கரித்தாள் அபிநயா.

"இந்திய கிரீடத்தில் மற்றுமொரு சிறகு .."

"ஸ்வீடன் ராஜாவை வென்ற இந்திய ராணி.."

"அபிநயா! உலகின் இளவயது செஸ் வீராங்கனை .."

வீடே கோலாகலப்பட்டது. எக்கச்சக்க விருந்தினர்கள், மாலைகள், பூங்கொத்துகள், பரிசுப் பொருட்களின்மையத்தில் வீற்றிருந்த அபிநயாவுக்கு எல்லாமே புதுசாக இருந்தது.

உற்சாகத்தின் உச்சியில் இருந்த வீரசேது அபிநயாவிடம் கேட்டான்.

"அபிக்குட்டிஒ இவ்வளவு பெரிய சாதனை பண்ணியிருக்கே ..உனக்கு என்ன வேணும் கேளு. என்னவிலையானாலும் பரவாயில்லை, கேளு, இப்பவே வாங்கி பிரசன்ட் பன்றேன்."

சிலர் அபிநயா காதில் கிசுகிசுத்தனர்.

"கம்ப்யூட்டர் கேளு. "

"நெக்லஸ் கேளும்மா. "

"சான்ட்ரோ கார் கேளுடி"

உலகின் மிக இளவயது செஸ் சாம்பியன் செல்வி அபிநயா அப்பாவை நேருக்கு நேராகப் பார்த்துச் சொன்னள்.

"தாத்தாவோட யானை விளையாட்டு விளையாடனும்"

திருவையாறு அம்மான்கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பாலகுமார், 1990 முதல் எழுதி வருகிறார். வாழ்க்கையின்நிதர்சனங்களை மெல்லிய இழைகளால் ஆன பட்டுப் போலத் துப்புறவாக நெய்து பளிச்சிடுமாறு செய்யும்படைப்பாற்றல் இவரை அடையாளக் காட்டி நிற்கிறது. குழந்தைகளைக் குழந்தைகளாக வளர்க்க வேண்டும்.அவர்கள் மீது நமது திணிப்புகளைச் சுமத்தக் கூடாது என்ற குழந்தைகள் உரிமை இக்கதையின் அடி நாதமாகும்.

நன்றி: "கதாயுதங்கள்"

ஆசிரியர்: பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X