• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1

By Staff
|

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

இன்றைய தமிழ்ச்சிறுகதை

அழகிய பெரியவன்

இன்றைய தமிழ்ச்சிறுகதை, பல அரிதான வண்ணங்களுடன், நுணுக்கமான வேலைப்பாட்டு ஒழுங்கோடு ஒரு பெரிய சீலையில்தீட்டப்படும் ஓவியம் போல் இருக்கிறது. படிக்கின்றவரை தன்பால் ஈர்க்கும் வல்லமை கொண்டிருக்கின்றன அவை.

"இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்

படிக்க நேரிடுமானால்

தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்

வெப்புறாளம் வந்து கண்மயக்கும்

மூளை கலங்கும்

தான் படித்த எல்லாம் வலுவற்றுப் போகும் என்று

இப்போது

என் எழுத்துக்களில் நான் வாதைகளை

ஏவி விட்டிருக்கிறேன்"

என்ற என்.டி.ராஜ்குமாரின் கவிதையைப் போலத்தான் அக்கதைகள் படிக்கிறவனை லேசில் விடாத ஒரு வாதையைக்கொண்டுள்ளன.

மிகத் தொடக்கத்தில் தமிழ்ச் சிறுகதைகள் ஒரு விதமான அச்சில் வார்க்கப்பட்டு வாசகருக்குத் தரப்பட்டிருந்ததை யாராலும்மறுக்கமுடியாது. அதற்குக் காரணங்கள் இருந்தன. தமிழில் உரைநடை தனது அசலான வடிவுடன் முகிழிக்காத ஒரு காலமது. கதைகூறும் மரபு வாய்மொழி மரபாகவும் புராண மரபாகவும் இருந்த சூழல்... சில சங்கப்பாடல்கள் மிக நுணுக்கமானகதைச்சித்திரங்களை தன்னகத்தே கொண்டு கவிதைச் சிறுகதைகளாக மிளிர்ந்தபோது, பெருங்கதையாடல்களை காப்பியங்கள்கொண்டிருந்தன. ஆனால் இவை யாவும் பாவகைகளின் வரையறைகளுக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டன.

இந்த வரையறைகளற்ற உரைநடை வடிவம் தமிழில் தீவிரமாகக் கையாளப்படத் தொடங்கியபோது, இணைந்தே சிறுகதைகளும்எழுதப்பட்டன. இக்கதைகள் மேற்கத்திய புனைகதைகளின் தாக்கத்தையும், சாயலையும் கொண்டவை. இவ்வடிவம் மிகக் குறுகியகாலத்திலேயே தனக்கான ஒரு இடத்தை இங்கே பிடித்துக்கொண்டு சாதனைகளை நிகழ்த்தத் தொடங்கியது. புதுமைப்பித்தன்மரபான சிறுகதையின் வடிவத்தையும், உள்ளடகத்தையும் உலுக்கினார் என்றால் மெளனி போன்ற வெகு சிலர் அதைப்பூடகப்படுத்தினார்கள்.

தொடக்ககால சிறுகதையாசிரியர்களுக்கு தங்களின் வீடு, தெரு, திண்ணை, புழக்கடை இப்படி குறுகிய இடங்களை மட்டுமேஎழுத முடிந்தது அல்லது அதற்கே அவர்களுக்கு நேரமிருந்தது. பெரும்பாலானவர்களுக்கு வரலாற்று ஓர்மை இருந்ததாகவேதெரியவில்லை. விடுதலைப் போராட்டம், நீதிக்கட்சி மற்றும் அதற்குப் பிறகான திராவிட இயக்கங்கள் ஆகியவற்றின் சமூகசீர்த்திருத்தக் குரல்கள், பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகரத் தாக்கங்கள், தலித் இயக்கங்கள், பெண் பிரச்சினைகள்போன்றவற்றின் தாக்கமோ, குறிப்புகளோ, உள்ளீடோ அவர்களின் கதைகளில்லை. சிறுகதைகளின் திருமூலர் என்றுஅழைக்கப்பட்ட, இன்னும் ஒரு சிறுகதை ஆவியாக உலவி பலரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிற மெளனியின் கதைகளில்அன்றைய தாசிகளைப் பற்றிய சித்திரங்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் அதே கால கட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்ததேவதாசி ஒழிப்புச் செயல்பாடுகளைப் பற்றி அக்கதைகள் மெளனம் சாதிக்கின்றன. ஒரு எதிர்புரட்சி மனநிலையில் நின்றுஅக்கதைகள் எழுதப்பட்டிருப்பதாய் நம்புவதற்கு அக்கதைகளில் அதிகம் இடமிருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம்,அவர்களே வரித்துக்கொண்ட அவர்களுக்கேயான உலகம். அவர்கள் அவரவர்தம் எல்லையிலேயே நின்று, ஆச்சாரஅனுஷ்டானங்களோடு தங்களின் கதைகளையும் படைத்தனர். இதை மீறி வர யன்ற ஒன்றிரண்டு எழுத்தாளர்களிடம்கூட,மரபான சிந்தனையில் பொதிந்திருந்த பிற்போக்குத்தனங்கள் அவர்களையும் அறியாமலோ, அறிந்தோ சிலநேரங்களில்வெளிப்பட்டன. புதுமைப்பித்தன், க.நா.சு., ராஜாஜி போன்றோரின் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய பார்வையை இங்குஉதாரணமாகக் கொள்ளலாம்.

புதுமைப்பித்தன் படைத்த தலித் எதார்த்தங்கள் எப்படிப்பட்ட உள் பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை எதார்த்தஇலக்கியத்தின் மனிதாபிமான அழகியலால் உணர டியாது. மேலிருந்து திணிக்கப்பட்ட மேற்சாதி காந்தியத்திற்கும், தலித்தின்வாழ்க்கைச் சிக்கலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்பதை உயர்சாதி அரசியலால் பரிசீலிக்கத் தோன்றவில்லை. அதுஅதற்குத் தேவையுமில்லை (1) என்று கடுமையாய் விமர்சிக்கிறார் தலித் விமர்சகர் ராஜ்கெளதமன். க.நா.சு. அவர்களின்பொய்த்தேவு நாவலை ஆய்வு செய்யும் கோ. ராஜாராம் அதில் சாதியைப் புகழும் கடும் பிராமணீயத்தனம் இருப்பதாகச்சொல்கிறார்(2). தொடக்க காலத்தில் எழுந்த சில மாற்று முயற்சிகள் கூட விமர்சிக்கப்பட்டுள்ளன. தீண்டாமைக்கு எதிரானகருத்துகளைக் கொண்டிருந்த மாதவையாவின் "முத்து மீனாட்சி" நாவல் ஹிந்து நாளேடால் விமர்சிக்கப்பட்டுள்ளது. மூவலூர்இராமாமிர்தம் அம்மையார் "தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்" நாவலை இதுபோன்ற சூழல்களில்தான்எழுதியுள்ளார்.

இப்படியான காலத்தில் மணிக்கொடி தொடங்கி அதன் பிறகான சிறுகதை மறுமலர்ச்சிக் காலத்தில் உருவான மிக முக்கியமானசிறுகதையாசிரியர்கள் என்று கருதப்படும் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், மெளனி, வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா, தி.ஜா., வல்லிக்கண்ணன் போன்றவர்களுக்கு இணையாகவும் அடுத்தும் திராவிட மற்றும் முற்போக்குஎழுத்தாளர்களும் சிறுகதையை தீவிரமாகக் கையாளத் தொடங்கினார்கள். இவர்களுடன் கருத்தியல் சாராத பலரும் கூட சேர்ந்துகொண்டனர். அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயகாந்தன், விந்தன், ரகுநாதன், ஜி. நாகராஜன், டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி,பூமணி, பொன்னீலன், கி.ராஜநாராயணன், ஐசக் அருமைராஜன், வண்ணநிலவன், வண்ணதாசன், சா.கந்தசாமி, கோபிகிருஷ்ணன்,தஞ்சை பிரகாஷ், ந.முத்துசாமி, நீல பத்மநாபன், ஆ.மாதவன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, நகுலன், அசோகமித்திரன்,பிரபஞ்சன், கந்தர்வன், ராஜம் கிருஷ்ணன், அம்பை, சு.சமுத்திரம், நாஞ்சில்நாடன், பா. செயப்பிரகாசம் என்று ஏராளமானவர்கள்எழுதப் புகுந்தபோது சிறுகதைகளில் பல்வேறு நிலப்பரப்பும், மனிதர்களும் வாழ்க்கைச் சிக்கல்களும் இடம் பெறத்தொடங்கின.இவர்களைப் பற்றி பேசும்போது இவர்களோடு செயல்பட்ட அரசியல் அல்லது கருத்தியல் பார்வையையும் கவனத்தில்கொள்ளவேண்டியது க்கியம். மார்க்சியமும், பெண்ணியமும், வேறுபல ற்போக்குப் பார்வைகளும் இவர்களில் சிலரிடம்செல்வாக்குப் பெற்றிருந்தன. தொடக்க நிலை தலித்தியமும் இவர்களின் கடிதைகளில் காணக் கிடைக்கும் ஒரு குறிப்பிடத் தகுந்தஅம்சமாகும்.

எண்பதுகளின் தொடக்கத்திலே இங்கே அறிகமான அமைப்பியல், இருத்தலியல், நவீனத்துவம், மாயா எதார்த்தவாதம் போன்றகருத்தியல்களின் அடிப்படையிலும் தொன்னூறுகளின் பிற்பகுதி வரை தீவிரமான பரிசோதனைமுறை கதைகள் எழுதப்பட்டன.கோணங்கி, சில்வியா, நாகார்ஜூனன், ரவிக்குமார், ரமேஷ் பிரேம், தேவிபாரதி, சாருநிவேதிதா, தமிழவன், ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன் என்று தொடங்கி நீளும் பட்டியல் அது. இதே காலகட்டத்திலேயே ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், பவாசெல்லத்துரை, பாவண்ணன், தோப்பில் கம்மது மீரான், மா. அரங்கநாதன், பெருமாள் முருகன், சோ. தருமன், மேலாண்மை,சுப்ரபாரதிமணியன், சிவகாமி போன்றவைகளால் இயல்பு வாத எழுத்தின் அதிகபட்ச சாத்தியக் கூறுகளை பரிசோதிக்கும்வகையிலான கதைகள் எழுதப்பட்டன.

பெண்ணிலைவாத எழுத்துக்கு தமிழிலே ஒரு வளமான மரபு உண்டு. ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, அம்பை, திலகவதி, வாசந்தி,சிவகாமி என்று பலர் சிறுகதைகளில் பெண்களின் குரல்களை பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றும் தீவிரமாகஎழுதி வருகிறார்கள். தொன்னூறுகளுக்குப் பின்பு தொடங்கிய தலித் இலக்கியம் விழி.பா.இதயவேந்தன், இமையம், அபிமானி,பாமா, ராஜ்கெளதமன், அழகிய பெரியவன் ஆகியோரால் காத்திரமாகக் கையாளப்படுகிறது.

இன்று எழுதப்படும் சிறுகதைகள் பல வளமான கருத்தியல் மற்றும் சிந்தனை மரபுகளை தாண்டி வந்திருக்கின்றன.கருத்தியல்களும், புதிய சிந்தனைகளும் சிறுகதையிலே சித்தரிக்கப்படும் புனைவுத்தளங்களின் சாத்தியப்பாடுகளைஅதிகப்படுத்தியுள்ளன. தட்டையான பார்வையில் கதைகளைக் கையாளுவதற்கு இன்று தயக்கம் இருக்கிறது. வளமான நமதுகதைகூறும் நாட்டார் மரபையும், எதார்த்தத்தின் பல தளங்களை எழுதி ஒரு ஒற்றைத் தன்மையை உடைக்கும் யற்சிகளையும்இன்று மிக எளிதாக தமிழ்ச்சிறுகதைகளில் காணலாம். மேலும் அதிமுக்கியமாக பாலூறவுச் சிக்கல்கள் உள்ளிட்ட எந்தஅம்சங்களையும் சொல்லத் தயங்கும் கட்டுப்பெட்டித்தனம் இன்று இல்லை. தொடக்ககாலக் கதைகளிலிருந்து இடம் பெயர்ந்தகதைகள் மேல்தட்டு மனிதர்களிலிருந்து கீழிறங்கி வெகு காலமாக விக்கிரமாதித்யன் தோளில் தொங்கிய வேதாளமெனநடுத்தட்டு மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளைச் சுமந்தது. ஊருக்கு வெளியிலிருப் பவர்களையும், வீட்டின் பின்கட்டுசமையலறையில் இருப்பவர்களையும் அது பார்க்காமல் முகம் திருப்பிக்கொண்டது. இந்தப் போக்குகள் இன்று இல்லை.வகைவகையான மனிதர்கள், வகைவகையான வாழ்முறை, வகைவகையான கதைகூறு முறைகள் என இன்று சிறுகதைஉருவாகி நிற்கிறது.

சிறுகதைகளில் கதை என்ற ஒன்றேகூட தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இன்று எழுதுமுறைகள் உருவாகியுள்ளன.சிறுகதைகளின் உரைநடை மொழிக்கு அழகையும், சிக்கனத்தையும் கூட்டிய சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன்,பிரபஞ்சன் போன்றோரின் ஆளுமைகளை இன்று மொழி அனாயசமாகக் கடந்திருக்கின்றது. வட்டார வழக்குகளும்,சொலவடைகளும், அந்தந்தப் பகுதிகளுக்கேயுரிய விசேடத் தன்மைகளும் இன்று மொழிப்பிரயோகத்தைஎளிதாக்கியிருக்கின்றன.

நேற்றை

இன்றை

கடப்பதுபோல

நாளையைக் கடந்தும்

பறந்துகொண்டிருக்கிறது

ஒரு பறவை

என்று கண்டராதித்தன் ஒரு கவிதையில் கூறுவது போல நாளையும் கடக்க சிறகை விரித்துள்ளது சிறுகதையெனும் பறவை.

இன்றைய பொழுதில் தமிழில் உருப்படியான சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் என்று ஒரு பட்டியல்தயாரித்தீர்களென்றால் அதிலே ஒரு நூறு பேராவது தேறுவார்கள் என்பது உறுதி. அதிலிருந்து தனிமொழி, தனித்துவமான நடை,கையாளும் சிக்கல்கள், ஆளுமை என்ற சில அம்சங்களின்படி சிலரைத் தேர்வு செய்யலாம். எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேம்,ஜீ.ருகன், ஆதவன் தீட்சண்யா, ஜே.பி.சாணக்கியா, செழியன், பாமா, உமா மகேஸ்வரி, சுதாகர் கத்தக், கண்மணி குணசேகரன்இப்படி அந்தப்பட்டியல் அமையும்.

எல்லா வகைமைகளிலும் இருந்து தேர்ந்தெடுத்து இப்படி அமைக்காமல் தனித்தனி இலக்கியப் போக்குகளுக்கு ஏற்பஅமைக்கலாமென்றால், ஒவ்வோர் போக்குக்கும் பல பெயர்களை உள்ளடக்கிய பெயர் வரிசை உருவாகும்.

கடந்த பத்தாண்டுகளாக எழுதிவருகிறவர்களும், அய்ந்தாண்டுகளில் எழுத வந்தவர்களுமாக இவர்களில் பலர் இருக்கின்றனர்.இவர்களிடள்ள சாதக அம்சம் என்னவெனில் அவர்கள் பின்னிருக்கும் வளமான, பல சோதனைகளை எதிர்கொண்ட இலக்கியப்பிரதிகள் தான். புதிதாக எழுதப்புகுமுன் ஏற்கனவே எழுதப்பட்டவற்றின் சாரத்தை உள்வாங்க வேண்டியது அவசியமாய்இருக்கிறது. அதை இன்று தனக்கேயான தனி உலகை உருவாக்கி எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மொழியின் சாத்தியக்கூறுகளையும், வீச்சையும், அழகையும் அறிந்தவர்களாகவும், ஒரே வகையான எழுத்து றைமைகளுக்குள்சிக்க விரும்பாதவர்களாகவும், ஏற்கனவே செய்யப்பட்ட சாதனைகளை கடந்து முன்செல்ல முனைபவர்களாகவும் அவர்களைஅவர்களின் கதைகள் அடையாளம் காட்டுகின்றன. புதிய இடங்களை கண்டடையும் தீவிரமும், பிரச்சார நெடியின்றிஇயல்பாகவும், உண்மையுடனும் ஒரு சிக்கலை சொல்லும் நேர்த்தியும் இவர்களால் எழுதப்படும் கதைகளை வாசிக்கிறபோதுதெரிகின்றது. தமிழின் வளமான மரபை உள்வாங்கியிருக்கும் இவர்களுக்கு இச் சமூகம் கையளித்திருக்கும் சாதீய, பண்பாட்டுமரபுகளும் உடனிருக்கின்றன.

"மரபு என்னும் சொல் ஏமாற்றும் மயங்கவைக்கும் ஒன்றாகும் அது பின்னடைவுக்கான வடிவத்தை மேற்கொள்வது. தேக்கமுற்றுபோனதன் அறிகுறி. எப்போதெல்லாம் புதிய சிந்தனைகள் முன் வைக்கப்படுகின்றனவோ அப்போதெல்லாம் இந்த மரபுஎன்னும் சொல் தற்காப்புக் கேடயமாக ன் வைக்கப்படும்" என்கிறார் ஒடுக்கப்பட்டோரின் இலக்கியத்தை விமர்சனப் பூர்வமாகஅணுகும் ஆர்ஜீன் டாங்ளே தம் தலித் இலக்கியம் என்கிற நூலில். இப்படியான மனோநிலையோடு மரபை வீசி எறிந்துவிட்டுபுதுப் பார்வையுடன் இலக்கியத்தை அணுகுகிறவர்களாகவே இவர்கள் தென்படுகிறார்கள். இவர்களில் பலருக்கும் கொள்கைகோட்பாடுகள் என்று கருத்தியல் ரீதியாக எதுவும் இல்லை. சிலருக்கு மிக வெளிப்படையாகவே அரசியல் ரீதியிலானபார்வையுண்டு. ஆனாலும் ஒரு விமர்சனப்பூர்வமான அரசியல் நிலைபாட்டு பார்வையே இவர்களிடம் ஊடாடுகிறது. பலஆண்டுகளாக எழுதிவரும் எஸ்.ராமகிருஷ்ணன் புதுவகை எழுத்தை இன்றும் தனித்துவத்துடன் தருபவராகவே இருக்கின்றார்.இவர் யாதார்த்தத்தின் தளங்களை, கதைகளில் வரும் ஒற்றைத் தன்மையை உடைக்க யல்வதாகச் சொல்கிறார்கள்.

நாவல் எனும் பெரும் பரப்பில் இவர் நிகழ்ந்த முனையும் பழைய இலக்கியங்களின் மறு வாசிப்பை (உபபாண்டவம்)சிறுகதைகளிலும் நிகழ்த்துகிறார். அந்த வகையில் உயிர்மையின் தொடக்க இதழில் வெளிவந்த இவரின் சிறுகதை மிகமுக்கியமானது. அதில் சிலப்பதிகாரத்தினை மறுவாசிப்பின் வழியே அணுகி கண்ணகியின் உக்கிர பிம்பத்துக்குள்ளான, ஒருநெகிழ்வு மிக்க காதலுக்கு ஏங்குகிற பெண்ணை தேடிப்பிடிக்கிறார்.

புதுவகை எழுத்தின் இன்றைய தீவிரமான அடையாளமாக யுவன், ஜீ.முருகன், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார இந்திரஜித்போன்றோரை சொல்லலாம். இவர்களில் ஜீ.முருகன் மிகவும் தனித்து தெரிகின்ற ஒரு எழுத்துக்காரராவார். தேவைக்கதைகள்,நேர்க்கோட்டுத் தன்மை கொண்ட கதைகள், பாலுறவுக் கதைகள் இப்படி பல வகையான கதைகளை ஜீ.ருகனின்கதைத்தொகுப்புகள் கொண்டுள்ளன. கதைக்கூறு முறையின் பல்வகை சாத்தியப்பாடுகளை கொண்டதாகவும், வாசிப்பவனுக்குபல்வேறு அர்த்தத்தளங்களை தருவதாகவும் இவரின் கதைகள் இருக்கின்றன. ஜீ.முருகனின் இன்னொரு முக்கியஅடையாளமாக அவரின் பாலுறவுக் கதைகளை சொல்லலாம்.

இன்று இவருடன் சேர்ந்து ஜே.பி. சாணக்யா, புகழ், சாருநிவேதிதா ஆகியோரால் எழுதப்படும் கதைகளும் கூட அப்பட்டமான ஒருபாலுறவுத் தன்மையினைக் (போர்னோ) கொண்டிருக்கின்றன. காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களில் சமீப காலமாக இதுபோன்ற கதைகளே அதிக முக்கியத்துவத்துடன் இடம்பெறுகின்றன. கதா காலச்சுவடு நடத்திய கதைப்போட்டியில் சமூகவிமர்சனத்தை கருவாகக் கொண்ட ஆதவன் தீட்சண்யா போன்றோரின் கதைகள் சிறுகதைகளுக்கான ஆழமும், அடர்த்தியும்கூடிய படைப்பாவேசத்தின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல தருணங்கள் கூடிவரவில்லை என்று பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒருபெண்ணின் பாலுறவு விடயங்களை பேசும் ஜே.பி. சாணக்கியாவின் கதை முன்னிருத்தப்பட்டது.

பாலுறவுக் சிக்கல்களை, உடல் மொழியுடன் துல்லியமாகக் கையாளும் கதைகளாக இவர்களின் கதைகள் இருக்கின்றன. இது ஒருதுணிச்சலான எழுத்துச் செயல்பாடுதான். ஆனால் சில கேள்விகளை நாம் இப்பிரதிகளின் வழியே எழுப்பிக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண் மனதோடு எழுதப்படும் இக்கதைகளின் தேவை என்ன? இக்கதைகளில் வருகின்றவர்கள்பெரும்பாலும் நடுத்தட்டு அல்லது விளிம்பு நிலை பெண்களாகவே இருக்கின்றனர். இக்கதைகள் சாதி ரீதியான இழிவை மேலும்அவர்கள் மீது சுமத்துவதோடன்றி, பெண்களை உடலோடு மட்டுமே தொடர்புபடுத்தி பார்க்கும் ஆண் துடிப்பு மனோநிலையையும்கொண்டிருக்கின்றன. விளிம்பு நிலை மக்களின் மீது இங்கே கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் இழிமையானகருத்துருவாக்கங்களை இக்கதைகள் உடைக்காமல் இருத்துகின்றன.

மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் என்று மக்கள் விடுதலை சார்ந்து இயங்குகிறவர்களாக நவீன படைப்பாளிகளில்இருப்போரின் கதைகள் வேறு உலகத்தை கொண்டு இயங்குகின்றன. இங்கு உடனடியாக சொல்ல வேண்டியது ஒன்றிருக்கிறது.கோட்பாடுகளின் வறட்டுக் கூச்சல் இவர்களின் கதைகளில் கேட்பதில்லை. மாறாக அவை அக்கதைகளின் மெல்லியஇழையாகவோ, உயிரோட்டமுள்ள சிக்கலாகவோ மாறுகின்றன.

ஆதவன் தீட்சண்யா, கதைகளிலே எள்ளல் தொனியுடன், மொழியை சாட்டையைப் போல கையாளுகிறார். அவரின்அன்னைய்யா, நமப்பு, விரகமல்ல தனிமை, கடவுளுக்குத் தெரியாதவர்கள் போன்ற கதைகள் தனித்தனி பிரதேசங்களையும்,தனித்தனி மொழியாளுமைகளையும் கொண்டவை. கண்மணி குணசேகரனும், சுதாகர் கத்துக்கும் சற்றேறக்குறைய ஒரேபிரதேசத்தில் புழங்குகிறவர்களாக ஆனால் எதிரெதிரே நிற்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் உலகம் வெகுளித்தனம்நிறைந்த மனிதர்களின் அபிலாசைகளை ரத்தம் சதையுமாய் ன் வைப்பது. வெறுமனே அவர்களின் மொழியையும்,பாடுகளையும், வாழ்க்கையையும், சொற்ப இன்பங்களையும் கண்மணி குணசேகரன் தன் கதைகளில் காட்டிவிட்டு ஓரமாய் நின்றுக்கொள்கிறார். அவருக்கு இசங்களின் மீதோ நம்பிக்கை கிடையாது. ஒரு கடலைக்காட்டில் பயிரோடு சேர்ந்து வளரும் புல்லும்,களையும், ள்ளுமாய் எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன அவரின் கதைகள். ஆனால் சுதாகர் கத்தக்கின் கதைகள் இதேமனிதர்களின் ஆழ் மனங்களுக்குள்ளும் அவர்களின் தொன்மங்களுக்குள்ளும், நம்பிக்கைகளுக்குள்ளும் பயணம் செய்கிறது.அவரின் வரைவு, திருமணஞ்சேரி, கைம்மண், போன்ற கதைகள் கிராமங்களின் மீது போர்த்தியிருக்கும், நம் கண்களுக்குத்தெரியாத ஆனால் உணர மட்டுமே டிகின்ற தொன்ம வாழ்வின் அன்பை கொண்டிருக்கின்றன. செழியனின் சிறுகதைகள்நகரத்தின் குரூரத்தை நமக்குக் காட்டுவதாக உள்ளன. கூடுதலாக இன்றைய நவீனயுகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றும்திரைப்படத்தின் இருட்டு முகத்தினை வெளிச்சமிடுகின்றன. அவரின் கதைகளில் வரும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைஉருவாக்கிக் கொள்ள வாழ்க்கையை பயணம் வைத்து அலையும் இளைஞர்களை இன்றைய இளைஞர்களில் சரிபாதியின்உருவகமாகக் கொள்ளலாம்.

தலித் எழுத்தின் கலக குணத்தை பாமா தன் ஒவ்வொரு கதைகளிலும் கொண்டுள்ளார். இவரின் சிறப்பம்சமாக நாம் இவரின்தனித்துவம் மிக்க மொழியையும், கதையை ன்வைக்கும் அசலான தன்மையையும் சொல்லலாம். இமையத்தின் கதைகள் நமக்குநுணுக்கமான, விரிவான பதிவுகளை தருவதுடன் நின்றுபோகிறது என்றால் இதயவேந்தன் அபிமானி போன்றோரின் கதைகளில்இன்னும் அழுகை ஓயவில்லை.

இன்று பெண்கள் கவிதை எழுதுவதை விடவும் குறைவாகவே சிறுகதையைக் கையாளுகின்றனர். வாசந்தி, பாமா, சிவகாமி,திலகவதி, சல்மா, உமாமகேஸ்வரி போன்ற மிகச் சிலரே இந்த வகைமைக்குள் வருகின்றனர். இசுலாமிய பெண்களின் பர்தாஅணிந்த வாழ்க்கையை முகத்திரை விலக்கிக் காட்டுகின்றன சல்மாவின் கதைகள் கொஞ்சம் பிசகினாலும் பழமைவாதிகளின்கண்டனத்தில் சிக்கிக் கொள்கிற ஆபத்துடனேயேதான் எழுதுகிறார். எனவே அவரின் வெகுசில கதைகளில் வருகின்ற இசுலாம்பெண்களின் உலகமும், அவர்களின் சில சிக்கல்களும் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. அவற்றிலே மிக நுண்மையாக ஒருவிமர்சனக்குரலும் சேர்ந்தே கேட்கிறது. மஹி என்கிற உமாமகேஸ்வரியின் கதைகள் மிகத்தனித்து தெரியும் பெண்ணிலைவாதகதைகளாக இருக்கின்றன. அவரின் குறுகிய கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்வின்வழியாக தான் பெற்ற அத்தனைஅனுபவங்களையும் நேர்மையுடன் சொல்லியிருக்கிறார். தனது செறிவுமிக்க, கூரிய மொழியினால் அவர் காட்டும் பெண்கள்,உடல்களோடு இல்லாமல் மனதோடு மட்டுமே அதிகப்பட்சமாகக் காட்டப்படுகின்றார்கள்.

என்.ஸ்ரீராம், புகழ், சு.வேணுகோபால், அஜயன்பாலா, மீரான்மைதீன், சோ.தர்மன், களந்தை பீர்கம்மது, இரா. நடராஜன் என்றுஅவரவர்களுக்கேயான தனிப்பாங்குடன் இன்று சிறுகதையாசிரியர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ந்தைய தலைறையின்சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும், பிரபஞ்சனும் இன்னும் அதே நறுவிசோடு தளராமல் சிறுகதைகளைஎழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறுமனே வாழ்க்கைச் சித்திரங்களை, இலக்கிய சாமர்த்திய விளையாட்டுகளைக் கொண்டிருந்த சிறுகதைகள் இன்று அடியோடுமாறிவிட்டன போன்று தோற்றம் தருகின்றன. பெண்களின் சிக்கல்களையும், தலித்துகளின் சிக்கல்களையும், விளிம்பு நிலைமக்களின் சிக்கல்களையும் இன்றைய சிறுகதை கொண்டுள்ளது. அவற்றை செய்தியாக மட்டுமின்றி, செய்நேர்த்தி மிக்க,ஒழுங்கமைதி கொண்ட இலக்கியப்படைப்பாகவும் மாற்றியுள்ளது.

இவற்றோடு மட்டும் அது நின்றுவிடவில்லை. தமிழ் மக்கள் பரப்பின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தன் பார்வையைத் திருப்பிபயணம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் சென்னை செய்திகள்View All

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more