• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோளிப்பள்ளியார்

By Staff
|

கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005

- பெருமாள் முருகன்

1990 ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நண்பர் ஒருவர் எம்.எல்.ஏ. விடுதிக்கு என்னை அழைத்தார். ஏதோஒரு காரியமாக எம்.எல். ஏ. ஒருவரைப் பார்க்கும் நோக்கம். பேச்சுத் துணையாக நான். அங்கே போக எனக்கு விருப்பமில்லை. அரசியல்வாதிகளின்போலிமையும் பகட்டும் எரிச்சல் ஊட்டும் விஷயங்கள். எனக்குத் தெரிந்த என் உறவினர்களான உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரது முகத்தில்விழிப்பதற்கே அஞ்சுவேன். அவர்களுக்கு முன்னால் தயவுச் சொற்களைப் பிரயோகிக்க நேராமல் என்னைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பதேஎன்னுடைய அப்போதைய வேண்டுதல்.

பணத்தைப் பெருக்கும் பல வழிகளில் ஒன்றாக அரசியலைப் பாவிக்கும் அவர்களிடமிருந்து விலகி இருப்பதையே பெரிதும் விரும்பினேன். ஏதேனும் ஒருசந்தர்ப்பத்தில் எதிர்ப்பட நேர்ந்தால் மிகக் குறைந்த சொற்களோடு - பெரும்பாலும் விளிச் சொற்கள், நலம் விசாரித்தல் - கழன்று கொள்ளப் பார்ப்பதுவழக்கம். நான் தவிர்க்கும் ஆட்களைப் போன்றவர்களே குழுமியிருக்கும் இடத்தைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை. இருப்பினும் நண்பருக்காக உடன்சென்றேன்.

விடுதி கலகலப்பாக இருந்தது. எங்கெங்கு காணினும் கரைத் துண்டுகள். வாகனங்கள். சிரிப்பும் பேச்சுமான இரைச்சல்கள். மக்கள் பிரதிநிதிகளைச்சுற்றிலும் மக்கள் கூட்டம்தான். அந்நியச் சூழலாக இருந்தாலும் ரசனைக்கு உகந்ததாக இருந்தது. நண்பர் தேடிப்போன எம்.எல்.ஏ.வைக் காண மாடிவராண்டாவில் நடந்தபோது ஓர் அறையில் சிவப்பு நிறத் துண்டுடன் ஒரே ஒருவர் மட்டும் இருக்கக் கண்டேன்.

துணை எவருமின்றி, அரவற்று அந்த அறையில் இருந்தவர் எங்கள் ஊர் எம்.எல்.ஏ.தான்.அவருடன் பேச விருப்பம் கூடிற்று. நண்பரிடம் கேட்டேன்.வேலையை முடித்து வரும் வேகத்தில் இருந்தவர், திரும்பும்போது சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறி அனுமதி கொடுத்தார். எம்.எல்.ஏ.வைப் பார்த்துப் பேசஎதுவுமில்லை எனினும் அவரின் தனிமை என்னைச் செலுத்தியது. எங்கள் ஊர்க்காரர் என்னும் பற்றும் உந்தியிருக்கக் கூடும்.

மேலும் எங்கள் எம்.எல்.ஏ.வுக்கு விஷேசம் ஒன்றுண்டு. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.அப்போது அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. அத்தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனஇரு பிரிவாகப் பிரிந்து விட்ட நிலையில் திமுகவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

ஆகவே தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருந்த திமுககாரர்கள் அந்தத் தேர்தலை மிகவும் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள்எதிர்பார்ப்புக்கு மாறாகத் திமுக, திருச்செங்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி விட்டது. திருச்செங்கோடு, அதிமுகவின் கோட்டைஎன்பதான எண்ணம் அப்போது வலுவாக இருந்தது. அதனால் வெற்றி பெறும் வாய்ப்பு சந்தேகம் எனத் திமுக கருதியிருக்கக் கூடும். அச்சந்தேகம் ஒருவகையில் நல்லதாக முடிந்து விட்டது. அதுவரைக்கும் இருந்த கவுண்டர் அல்லது முதலியார் சாதியைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாகும் நிலை மாறியது.

தொழிலாளர்களுக்கு நன்கு அறிமுகமானவரும், நாடார் சாதிக்காரருமான மோளிப்பள்ளி வி. ராமசாமி என்னும் பெயர் பொதுமக்கள் பார்வைக்குவந்தது. தேர்தல் பிரச்சாரம் வேகமாக இல்லை. திமுகவைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் முன்நிற்கவில்லை. மக்களுக்கு அறிமுகமான சின்னமும்இல்லை. சுயேட்சை வேட்பாளரைப் போலத்தான் அவரும் தோன்றினார். ஆனால் அவர் வெற்றி பெற்றார். 1952 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்பொதுவுடைமைக் கட்சி மீண்டும் 1989ல் வென்றது. மோளிப்பள்ளி வி.ராமசாமி என்னும் பெயர் தமிழ்நாடு முழுக்கத் தெரிந்தது.

சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நான் சந்திக்க விரும்பியவர் அவர்தான். எப்படி வரவேற்பாரோ என்னும் தயக்கத்தோடு அவருடைய அறை வாயிலில்நின்றேன். அவர் கவனிக்கவில்லை. கவனத்தை திருப்பி வணக்கம் சொன்னேன். புருவம் சுழிபட வணக்கம் என்று சொல்லிவிட்டு, யார் என விசாரித்தார்.என்னைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஊர் திருச்செங்கோடு என்பதும் பல்கலைக்கழக மாணவன் என்பதும் அறிமுகத்தில் மையவிஷயங்களாக இருந்தன.

உற்சாகத்தோடு என்னை அமரச் சொல்லி உண்ணப் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தார். வெள்ளை நிற உடம்பில் ரத்தப் புள்ளிகள் போல அங்கங்கேகொப்புளங்கள். சிறுகண்கள். அதுவும் இடுக்கிக்கொண்டு பார்க்கும் பார்வை. வெண்ணிற உடை. தோளில் சிவப்புத் துண்டு. கிழப்பழம் போலிருந்தார். எதிரில்உட்கார்ந்து கொண்டு என் கிராமத்தின் பெயரை விசாரித்தார். அனேகமாக அவருக்கு திருச்செங்கோட்டைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும்தெரிந்திருந்தன.

என் ஊரைக் கேட்டதும் அங்கிருந்து பள்ளிபாளையம் சேஷசாயி காகித ஆலை வேலைக்குப் போகும் தொழிலாளர் சிலர் பெயரைச் சொல்லி, அந்த ஊராஎன்றார். அத்தனை நெருக்கமாக என் ஊரை அறிந்திருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்தத் தொழிலாளர்களுள் முன்னணியில் இருந்த ஒருவர் பெயரைச்சொல்லி, அவர் வீடு தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றும் அவர் வீட்டுக்குப் போகும் வழியில் நிலத்திற்குள் இருந்த என் வீட்டையும்அடையாளம் சொன்னேன். என்னுடைய வீடே அவருக்குப் பிடிபட்டு விட்டது.

அவர் சொன்ன தொழிலாளர்கள் அனைவரும் நாடார்கள். நாடார் தெருவுக்கு எங்கள் வீட்டு வழியாகத்தான் போக வேண்டும். அவர்கள் தொழிலாளர்கள்என்பதால் உங்களுக்குத் தெரியுமா, நாடார்கள் என்பதால் தெரியுமா? என்றேன். எதையும் நேரிடையாகக் கேட்டுவிடும் வேக சுபாவம் என் குரலில்சற்றே கோபத்தோடு வெளிப்பட்டுவிட்டது. சிறுபையனான என் கோபம் அவருக்கு ரசிக்கத்தக்கதாக இருந்தது. இரண்டாலும்தான் என்றார். அவர்வாழ்க்கையில் இருந்த முரணை நிதானத்தோடு எனக்குச் சொன்னார்.

ராஜாஜியால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு புதுப்பாளையம் காந்தி ஆசிரமத்தில் குருகுலக் கல்வி கற்றவர் அவர். அங்கு மாணவனாக இருந்தபோதுகள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். அந்த ஆசிரமம் தமிழ்நாட்டில் மது ஒழிப்பில் தீவிரமாக இருந்த ஆசிரமம். அங்கிருந்துதான் விமோசனம்என்னும் மதுவிலக்குப் பிரச்சார இதழை ராஜாஜி வெளியிட்டார். உலகிலேயே மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு என்று வந்த ஒரே இதழ் விமோசனம்தான் என்று பெருமைப்படுவதுண்டு. எங்கள் பகுதி நாடார்களின் குலத்தொழில் பனைமரம் ஏறுதல். அந்த சாதியில் பிறந்து, கள் வேண்டாம் எனப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயலைச் சொல்லிச் சிரித்தார்.

அத்தோடு கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டையும் இன்னொரு நிகழ்வால் புரிந்து கொண்டதாகச் சொன்னார். ராஜாஜி தொடங்கியஆசிரமத்தின் மாணவனாக கள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது மிகுந்த உணர்ச்சியோடுதான் என்றாலும் ராஜாஜியே சென்னை மாகாண முதல்வராகிசேலம் ஜில்லாவில் மதுவிலக்கை அமல்படுத்தியபோதுதான் அதன் விளைவை உணர்ந்தார் அவர். கள் விற்பனை இல்லை என்றதும் ஏராளமானமரமேறிகளின் வாழ்க்கை இருளடைந்து போன எதார்த்தத்தைக் கண்டார்.

கள் உடலுக்குக் கெடுதலை விளைவிப்பதில்லை என்பது ஒரு புறம் இருகக, கள் இல்லையென்றால் எத்தனையோ பேர் தொழிலை இழக்கவேண்டியிருக்கிறது. அதுவும் காலகாலமாகச் செய்து வந்த தொழில். வறட்சியைத் தாங்கி நிற்கும் பனை மரம , உண்மையிலேயே தேவதாருதான்.பனையை வைத்துப் பல தொழில்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மையமானது கள் இறக்கும தொழில். அயல்நாட்டு மதுபானக் கடைகளுக்குஅனுமதி கொடுத்துச் சில நபர்கள் மட்டுமே லாபம் பெறும் கொள்கையைக் கொண்டவை நம் அரசுகள். உள்ளூர் அளவில் பணப்புழக்கம் ஏற்படவழிவகுக்கும் கள் இறக்கும் தொழிலைத் தடை செய்து வைத்திருக்கின்றன. கள் இறக்குபவர்களைக் குற்றவாளிகளாகக் கருதும் மக்கள் விரோதப்போக்கைக் கொண்டவை இந்த அரசுகள்.

ஆக, மதுவிலக்கினால் பெரும் துயரத்திற்கு ஆளான தம் சொந்த சாதி மக்களுக்கு ஆதரவாகக் கள் இறக்க அனுமதி வேண்டும் என்னும்போராட்டத்தில் ஈடுபட்டார் மோளிப்பள்ளி வி.ராமசாமி அவர்கள். மதுவிலக்கைக் கொண்டு வருவதும் தளர்த்துவதும் என அரசுகள் மாறி மாறிஎடுத்த நிலைப்பாடுகளினால் அந்தப் பகுதி நாடார்களின் பிரச்சினையைக் கையிலெடுக்கும் ஆஸ்தானத் தலைவராக ஆகி விட்டார். அதைக் கொண்டு சாதிமுத்திரை குத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், தாம் முன்னின்று கட்டிய தொழிற்சங்கங்கள், போராட்டங்கள் எனப் பலவற்றைப்பட்டியலிட்டுக் காட்டினார்.

அவருடைய ஊர்க்காரனாக இருந்தும் அவரை அறிந்து கொள்ளாத என்மேல் கோபம் ஏற்பட்டது. இப்போதேனும் அவரைச் சந்திக்க வாய்ப்புஏற்பட்டதற்கு மகிழ்ந்தேன். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எனக்காகச் சில மணி நேரங்களை ஒதுக்கியதும் சந்தோஷமாக இருந்தது.

பின், சிறுநோட்டை என்னிடம் கொடுத்துச் சில தொலைபேசி எண்கள், முகவரிகள் ஆகியவறைைக் குறித்துக் கொடுக்கச் சொன்னார். செய்து தந்தேன்.சிலவற்றைப் படித்துக் காட்டச் சொன்னார். பொறுமையாகப் படித்தேன். அவருடைய கண் பார்வை வெகுவாகக் குறைந்து விட்டது போல. எனினும்கண்ணாடி அணியவில்லை. அத்தனை நேரம் வரைக்கும் அவரைப் பார்க்க ஒருவரும் வரவில்லை.

உதவியாளர் கூட இல்லாமல், முதிய வயதில், தன்னந் தனியாக அவர் சென்னை வந்து தங்கியிருப்பதைக் காண கஷ்டமாக இருந்தது. அவரைச் சந்தித்துப் பேசியமன நிறைவோடு விடைபெற எழுந்தேன். அவருடனே இரவு தங்கிக் கொள்ளலாம் என்று வற்புறுத்தினார். நான் எவ்வளவோ சொல்லியும்வற்புறுத்தலை விடவில்லை. முதுமையும் தனிமையும் அவ்வாறு வற்புறுத்த அவரைத் தூண்டியிருக்கக் கூடும். எனினும் தங்காமல் விடைபெற்றுக்கொண்டேன்.

ஒரு மாதம் கழிந்திருக்கும். ஊருக்குச் சென்றேன். என் அம்மா பூரிப்போடு சொன்ன செய்தி வியப்பானது. எங்கள் ஊருக்கு ஏதோ நிகழ்ச்சிக்கு வந்த, விசாரித்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். நிலத்திற்குள் தனியான ஓலை வீட்டில் என் அம்மா மட்டும் வசித்துக்கொண்டிருந்தது. என்னைச் சென்னையில் பார்த்ததையும் என் நலத்தையும் கூறிவிட்டு அம்மாவுக்கு தைரியம் சொல்லிச் சென்றாராம். சாப்பிடச் சொல்லியும்கேட்காமல் மனுசன் மோர் மட்டும் குடித்துவிட்டுப் போய்விட்டார் என அம்மா வருத்தப்பட்டது.

அப்பேர்ப்பட்ட மனிதர் அவர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X