அமாவாசை நாளில் ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராட குவிந்தனர். கடற்கரையில் பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மலையேர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அமாவாசை நாட்களில் ஆறுகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது மரபு. கொரோனா தடை உத்தரவு அமலில் இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பலரும் கவலையில் இருந்தனர். வீடுகளிலேயே பலரும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

சில வாரங்களுக்கு முன்பு தளர்வுகள் அளித்ததையடுத்து கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆனி அமாவாசையான இன்றைய தினம் வெளி மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி புனித நீராடி வருவதால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சதுரகிரியில் மலையேற தடை
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு அமாவாசை நாளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். கனமழையின் காரணமாக நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் வருகை தந்தனர். மழையின் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் 2 வது நாளாக நேற்று பகலில் மழை இல்லாததன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் 1300 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர்களுக்கு திரும்பி சென்ற நிலையில் 200 பக்தர்கள் மலையில் தங்கி இருந்தனர். மாலை நேரத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி சதுரகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.
வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி மலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் கோவிலில் 200 பக்தர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications