For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் வைகாசி வசந்த உற்சவம் கோலாகலம் - புதுமண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரரேஸ்வரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஜூன் 3 முதல் 12ஆம் தேதி வரை நடக்கிறது.

Google Oneindia Tamil News

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை கால வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரருடன் புது மண்டபத்தில் எழுந்தருளினார். வசந்த உற்சவத்தை முன்னிட்டு புது மண்டபம் முழுவதும் தோரணங்கள் கட்டியும், வண்ண விளக்குகள் ஒளிர விட்டு அழகுற காட்சி அளிக்கிறது.

பழம்பெருமையும் தொன்மை சிறப்பும் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றால் முதலில் நினைவுக்கு வருவது புதுமண்டபம். கோடை காலத்தில் இந்த மண்டபத்தில்தான் வசந்த விழா நடந்தது. இதற்கு வசந்த மண்டபம் என்ற பெயரும் உண்டு. இது மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளது.

கோடைக்காலத்தில் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக, மன்னர் திருமலை நாயக்கர் 1635ஆம் ஆண்டு இந்த மண்டபத்தை கட்டியுள்ளார். இந்த மண்டபம் முற்றிலும் கருங்கற்களால் ஆனது. 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்டது.

 புது மண்டபம்

புது மண்டபம்

புதுமண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் அமைந்துள்ளன. இங்கு தலைசிறந்த கலைஞர்கள் மூலம் சிற்பங்கள் நேர்த்தியாகவும், அழகாகவும். வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், தடாதகை பிராட்டி, மீனாட்சி திருக்கல்யாணம், யாழிகள், குதிரை வீரர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.

அற்புதமான சிற்பங்கள்

அற்புதமான சிற்பங்கள்

கோவிலின் புனிதமான இடங்களில் ஒன்றாக கருதப்படும் புது மண்டபம், தமிழ்நாட்டின் சிற்ப, கட்டிட கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இங்கு அரிய வகை சிற்பங்களும் உள்ளன. ராமரால் கொல்லப்பட்ட வாலியை மடியில் தாங்கி இருப்பது, சிவபெருமானின் திருவிளையாடல், புலிக்குட்டிக்கு பன்றி பாலூட்டுவது, சிவபெருமானுக்கு நந்தி பால் அபிஷேகம் செய்வது, சூரியசந்திரர்கள், அர்த்தநாரீசுவரர், சங்கர நாராயணன், திரிபுராந்தகர், ஏகபாத மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி - என்று வடிவமைக்கப்பட்ட சொல்லிக்கொண்டே போகலாம்.

வசந்த மண்டவம்

வசந்த மண்டவம்

இங்குள்ள ஒவ்வொரு தூணுக்கும்கூட உயிர் உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இந்த தூண்களின் அழகை ரசித்துவிட்டு செல்கின்றனர். இதனை வசந்த மண்டபம் என்றும் அழைப்பர். மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி-சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி அளிப்பர்.

நீராழி மண்டபம்

நீராழி மண்டபம்

இந்த விழா நடக்கும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக சிறிய அகழி போன்று முற்காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.
விழா நாட்களை தவிர மற்ற காலங்களில் இந்த மண்டபம் பக்தர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, அங்கு பூஜை பொருள் கடைகள், துணிக்கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் செயல்பட்டு வந்தன.

 புதுப்பொலிடன் மாறிய புது மண்டபம்

புதுப்பொலிடன் மாறிய புது மண்டபம்

வணிக மண்டபமாக மாறியதால் அதன் சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது. எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை பக்தர்கள் காணும் வகையில் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தன. இதையடுத்து கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டன. புதுமண்டபம் வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டது. இதனை ஆயிரங்கால் மண்டபம் போலவே பேணி பாதுகாக்க வேண்டும். புதுமண்டபம் புத்தெழுச்சி பெற்ற பிறகு இங்கு மீண்டும் வசந்த விழா கொண்டாட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து புது மண்டபம் புதுப்பொலிவு பெற்றது.

வைகாசி வசந்த உற்சவம்

வைகாசி வசந்த உற்சவம்

இதனையடுத்து நடப்பாண்டு மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று மண்டபத்தை சுற்றிலும் நீர் நிரப்பி, பாரம்பரிய வழக்கப்படி நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. புதுமண்டபம் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. அகழிகளில் நீர் நிரப்பப்பட்டன.
வெள்ளிக்கிழமை ஜூன் 3ஆம் தேதி வசந்த உற்சாகம் கோலாகலமாக தொடங்கியது.

சுவாமி அம்மன் புறப்பாடு

சுவாமி அம்மன் புறப்பாடு

பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் புறப்பாடு மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேஸ்வரருடன் கோவிலில் இருந்து புது மண்டபம் சென்று எழுந்தருளினார். இதனையடுத்து வீதி உலா- தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர்.

 சுவாமி அம்மன் எழுந்தருளல்

சுவாமி அம்மன் எழுந்தருளல்

வசந்த உற்சவத்தின் பத்து நாட்களும் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறும். 12ஆம் தேதி அன்று சுவாமிகள் காலையில் புது மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்கு பகல் முழுவதும் தங்கி சுவாமிகள் அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3ஆம்தேதி முதல் 12ஆம்தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் திருவிழா நடப்பதால், அன்றைய நாட்களில் திருக்கோவில் சார்பாக உபய தங்க ரதம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Vaikasi Vasantha Utsavam festival began at Meenakshi Sundareswarar temple on Friday. The 10-day festival would be usually held in the Tamil month of Vaikasi at the Puthu Mandapam of the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X