ஆடி செவ்வாய்- ராகு - கேது தோஷம் நீக்கும் மயிலை முண்டகக்கண்ணி அம்மன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூரில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். ஆடி செவ்வாய் தினத்தில் ராகு - கேது தோஷம் போக்கும் இந்த தலம் பற்றி அறிந்து கொள்வோம்.

ஆடி செவ்வாய் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த நாள். அன்னையை பாம்பாகி வந்தவளே என்றும் புற்றாகி நின்றவளே என்றும் மனமுருகி வேண்டி வழிபடுகின்றனர். மயிலையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முண்டகக்கண்ணியம்மன்

நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

ராகு-கேது தோஷம் நீக்கும் தலம் என்ற சிறப்பு உடையது இந்த ஆலயம். எனவேதான் ஆடி மாதம் பிறந்து விட்டாளே முண்டகக்கண்ணியம்மனைக் காண பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மயிலைக்கு வந்து விடுவார்கள். பொங்கல் வைத்து வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

முண்டகக்கண்ணியம்மன்

முண்டகக்கண்ணியம்மன்

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் முண்டகக்கண்ணியம்மன். முண்டகம் என்பதற்குப் பல்வேறு பொருள் வழங்கப்பட்டாலும், தாமரை மலர் என்பதே பொருத்தம். கண்ணி என்பதற்கு கண்களை உடையவள் என்று பொருள் கூறப்படுகிறது. தாமரை போன்ற கண்களையும் உடையவள் என்ற பொருளில் முண்டகக் கண்ணி என்றப் பெயரில் இங்குள்ள அன்னை அழைக்கப்படுகிறாள்.

கயிலையே மயிலை

கயிலையே மயிலை

எளிமையும், அழகும், அருளும் நிறைந்த இந்த ஆலயம், மயிலாப்பூரில் நடுவே அமைந்துள்ளது. அன்னைக்கு காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அன்னைக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் என பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

மஞ்சள் முகத்தாள்

மஞ்சள் முகத்தாள்

அபிஷேகங்கள் முடிந்த பின்னர் அன்னையின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி, அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர்.

கல்நாகம்

கல்நாகம்

அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன.

நாக வழிபாடு

நாக வழிபாடு

பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள்.

நாக தோஷம் நீங்கும்

நாக தோஷம் நீங்கும்

நாகதோஷம் இருப்பவர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வழிப்பட்டு, நாகக்கன்னி சிலை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாட்களுக்கு நீரிலேயே நாகக்கன்னியை வைத்திருந்து, அதை ஆலயத்தின் முகப்பில் இருக்கிற மரத்தடியில் பிரதிஷ்டை செய்து,அதற்கு பாலாபிஷேகமும் வழிபாடும் நடத்தி வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம்.

ஆடி மாதம் வழிபாடு

ஆடி மாதம் வழிபாடு

இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை வழிபட்டால் தீராத நோய் நிவர்த்தியாகும். பில்லி சூன்யம், நாகதோஷம், கிரக தோஷம் நீங்கும். திருமணத் தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள். அதேபோல ஆடி மாதம் அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் காப்பு மற்றும் அன்னாபிஷேகம் செய்வதும் இங்கு விசேஷம்.

வேப்பிலை ஆடை

வேப்பிலை ஆடை

நோயற்ற உடல் வேண்டி அங்கபிரதட்சணம், வேப்பிலை பாவாடை அணிந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், சர்க்கரை பொங்கல், கண்மலர், கை, கால் உருவங்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

தீர்த்தமே அருமருந்து

தீர்த்தமே அருமருந்து

அம்மை நோய், கண் நோய் நீங்கவும் இந்த அம்மனை வழிபடலாம். அம்மை நோய் கண்டவர்கள் இந்த ஆலய தீர்த்தம், மஞ்சளை வாங்கிச் சென்று உடலில் பூசி வேப்பிலையால் தடவி விட்டால் நோயின் தாக்கம் எளிதில் குறைந்து விடும்.
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஆலயத்திற்கு வர மின்சார ரயில் வசதி, பேருந்து வசதிகள் உள்ளன. பறக்கும் ரயிலில் முண்டகக்கண்ணியம்மன் ஆலய நிறுத்தத்தில் இறக்கி வரலாம். பேருந்தில் திருவள்ளூவர் ஸ்டாப், கச்சேரி சாலை ஸ்டாப் இறங்கி கோவிலுக்கு வரலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aadi Chevvai is one of the auspicious pujas held in all Devi Temples dedicated to Goddess Shakti. Mundaka Kanni Amman Temple is a Hindu temple in the neighbourhood of Mylapore in Chennai.
Please Wait while comments are loading...