சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் - ஜன.1ல் தேரோட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சிதம்பரம், பாபநாசம், சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது. ஜனவரி 2ல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தொடர்ந்து காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, பசுக்கொடி வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத முறைப்படி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிதம்பரத்தில் கொடியேற்றம்

சிதம்பரத்தில் கொடியேற்றம்

அதைத்தொடர்ந்து, நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 8.35 மணிக்கு வேத மந்திரம் முழங்க ஆருத்ரா தரிசன விழா கொடியை தீட்சிதர்கள் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் சிவ, சிவா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

தேரோட்டம்

31ஆம்தேதி வரையில் வெவ்வெறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதிஉலா வர இருக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1ஆம்தேதி நடக்கிறது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வர இருக்கின்றனர்.

மகா அபிஷேகம்

மகா அபிஷேகம்

அதைத்தொடர்ந்து சிகர விழாவான ஆருத்ரா தரிசனம் 2ஆம்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் சித் சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

பச்சை மரகத நடராஜர்

பச்சை மரகத நடராஜர்

புத்தாண்டு தினமான திங்கள்கிழமை காலையில் அருள்மிகு பச்சைமரகதக்கல் நடராஜருக்குச் சந்தனப்பூச்சு கலைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. அன்று ஒரு நாள் பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக பச்சை மரகத மேனியுடன் அருள்மிகு நடராஜர் காட்சியளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு ஆருத்ரா தரிசன நாளை முன்னிட்டு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்த பின்னர் அருள்மிகு நடராஜருக்கு மீண்டும் சந்தனக்கலவை பூசப்படும்.

மார்கழி திருவாதிரை

மார்கழி திருவாதிரை

பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சங்கரநாராயணசாதி

சங்கரநாராயணசாதி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.45 மணிக்கு சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chidambaram Natarajar Temple the Arudra Darisanam festival for the month of Margazhi begins. The first day of the festival begins flag hoisting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற