காதல் ஜோதிடம்..காதல் கிரகங்கள் யாருக்கு இன்ப வலியை தரும்..பிரிந்தவர்கள் இணைய என்ன பரிகாரம்?
சென்னை: காதலா..காதலா..காதலின் சாரலா? என்று இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரையும் இந்த காதல் பாடாய் படுத்தும். கண்கள் என்ற தூண்டிலில் மீன்களாய் சிக்கிக்கொண்டாலும் அது இன்ப வேதனைதான். யாருக்கெல்லாம் காதல் வரும்? காதல் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையில் செய்யும் மாற்றங்கள் எப்படி இருக்கும்? அமைதியான மனக்குளத்தில் காதல் என்ற கல் விழுந்து அலையை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.
செவ்வாய் வீரத்திற்கு உரியவர். காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். இவர் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. தாம்பத்ய உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.
அது போல நிலவைப் பார்த்து காதலர்கள் அதிகம் லயிப்பதற்குக் காரணம் சந்திரன்தான் காதல் செய்ய தூண்டுபவர். இவர் மனிதர்களின் மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதலுக்கு மனதிற்கும் எந்த அளவிற்கு தொடர்பு உண்டோ அதே அளவு காதலுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு.
சனி பகவான் பொதுவாக காதலில் சிக்கியவர்களுக்கு அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார். மதம் மாறிய, குலம் மாறிய வழக்கத்துக்கு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு புதன் -ராகு காதல் தடை ஏற்படுத்தும். ஒரு தலைக்காதல். சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர்.

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. இவை ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.
ஜாதகத்தில் சுக்கிரன் பாதகமாக அமைந்தவர்கள், சுக்கிரப் பரிகாரத் தலங்களை வெள்ளிக்கிழமை தரிசிப்பது நல்லது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்களும் வெள்ளிக்கிழமை சுக்கிரனை வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடுவார்கள். கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், குன்றத்தூர் அருகில் உள்ள மாங்காடு ஆகிய ஆலயங்கள் சுக்கிர பரிகார தலங்கலாகும். அருகில் இருக்கும் சிவ ஆலயங்களுக்கு சென்று நவகிரக சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.












Click it and Unblock the Notifications