கோலவிழியம்மா... முண்டக்கண்ணியம்மா...கற்பகாம்பாள் - சென்னையை காக்கும் காவல் தெய்வங்கள்
அம்மன் நோய் தீர்ப்பவள். வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதி. நோய் தீர வேண்டிக்கொண்டாலே போதும் துயர் துடைப்பவள். சென்னை தினம் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படும் நேரத்தில் சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவில்களை பார்க்கலாம்
சென்னை: முண்டகக்கண்ணியம்மனோ, கோலவிழியம்மனோ, கற்பகாம்பாளோ, வடிவுடை அம்மனோ எந்த அம்மனாக இருந்தாலும் நம்பிக்கையோடு சென்று கையெடுத்து கும்பிட்டவர்களை கைவிடமாட்டார்கள். நோய்கள், கஷ்டங்கள், துயரங்களை தீர்த்து வைக்கும் வணங்கினால் கை மேல் பலன் கிடைக்கும் கஷ்டங்கள் நீங்கும். சென்னையின் காவல் தெய்வங்களாக திகழும் சிறப்பு வாய்ந்த கோவில்களை பார்க்கலாம்.
Recommended Video
மயிலையே கயிலை என்று போற்றப்படும் பெருமை கொண்ட மயிலாப்பூரில் சிவ ஆலயங்கள் அதிகம் உள்ளன. மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஆலயம், சுக்கிரன் வழிபட்ட வெள்ளீஸ்வரர் ஆலயம், விருபாக்ஷீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், வாலீஸ்வரர் ஆலயம், மல்லீஸ்வரர் ஆலயம், தீர்த்தபாலீஸ்வரர், காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் ஆலயங்கள் உள்ளன.
சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன் ஆலயங்கள் ராகு கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்த அம்மனை வணங்கினால் திருமணம் கை கூடி வரும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவரின் ஆயுள் கூடும், மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இந்த தலங்கள்
முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சளும் வேப்பிலையும் தீர்த்தமும். அம்மை நோய் தீர்க்கும் அருமருந்தாகும். கண் நோய் தீர்க்கும் காவல் தெய்வமாக திகழ்கிறாள் முண்டகக் கண்ணியம்மன். புற்றில் பால் ஊற்றி அம்மனை வழிபட்டால் ராகு கேது தோஷம் நீங்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
புராண காலத்தில் இத்தலம் பிருந்தாரண்ய க்ஷேத்ரம் என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் பார்த்தனாகிய அர்ஜுனனுக்கு அவனின் ரதத்தை செலுத்தும் சாரதியாக பகவான் கண்ணன் ஏவல் புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு பார்த்தசாரதி பெருமாள் என பெயர் ஏற்பட்டது. கேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் திரு அல்லிக் கேணி என்று அழிக்கப்பட்டது. காலப்போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும், இக்கோவிலை 7 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் பல்லவ மன்னர்கள் ஆவர். பின்னாளில் சோழர்களும், வீஜயநகர பேரரசர்களும் இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார், மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யபட்ட திருத்தலம் ஆகும் இது. வைணவ கோவில்களில் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர் வந்து வழிபட்டுள்ளனர்.

அங்காளபரமேஸ்வரி
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் விளங்கும் அன்னை ஆதிபராசக்தி பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு திருப்பெயர்களோடு அருளாட்சி புரிந்து வருகிறாள். திருவல்லிக்கேணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம். கேட்கும் வரங்களை கேட்டவாறே தரும் தாய் இவள் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. இத்தலத்தில் மாசி மகா சிவராத்திரியன்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வித அலங்காரம் செய்து வீதியுலாவும் அதற்கு அடுத்த நாள் மயான சூறை விழாவும் சிறப்பாக நடைபெறும். அந்த சமயத்தில் பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், காய்கறிகள், நாணயங்கள் என இறைவியின் மேல் சூறையாக வீசி எறிவர். பின் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் விமரிசையாக நடக்கிறது. பிரதி அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. தடைகளை நீக்கி நல்ல முறையில் திருமணம் நிறைவேற அருள்பவள் இந்த அன்னை. நோய்களை ஓட ஓட விரட்டுபவள். இந்த அன்னையின் அருளால் நலம் பெற்றவர்கள் மாங்கல்யம் சாத்தியும், குழந்தைப் பேறு பெற்றவர்கள் பாலாடையை தானம் செய்தும், நோய் நொடிகளிலிருந்து விடுபட்டவர்கள் கொழுக்கட்டையில் உருவம் செய்து சூறை விட்டும் விதவிதமாக பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். சென்னை- திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை டாக்டர் நடேசன் சாலையில் இத்தலம் உள்ளது
அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் உள்ள லட்சுமி காமாட்சி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது போலவே அச்சு அசலாக காமாட்சி அன்னையை இத்தலத்தில் தரிசிக்கலாம். அன்னையின் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் இந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷமான வழிபாடுகள் நடக்கின்றன. இத்தலத்தில் காமாட்சியோடு அரூபலட்சுமி, வாராகி, மாதங்கி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பரந்தாமன், அர்ச்சாவதார மூர்த்தமாய் பல்வேறு தலங்களில் அருள்கிறான். அவற்றில் ஒன்று, சென்னை- வில்லிவாக்கத்திலுள்ள சௌமிய தாமோதரப் பெருமாள் ஆலயம். வில்வ மரங்கள் அடர்ந்த காடாக இந்தப் பகுதி திகழ்ந்ததால் வில்லிவாக்கம் என அழைக்கப்பட்டது. சௌந்தர்ய உருவம் கொண்ட பெருமாள் புதன் கிரகத்திற்கு அதிதேவதை. எனவே, புதன் கிரக தோஷம் உள்ளவர்களும், புதன்கிழமைகளில் ஜன்ம நட்சத்திரம் வரும் அன்பர்களும், இந்தப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து பச்சைப்பயறு சுண்டல் அல்லது பால் பாயசம் நிவேதித்து புதன் தோஷம் நீங்கப் பெறுகின்றனர். சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ளது.

அஷ்டலட்சுமி - பெசன்ட்நகர்
திருமாலோடு மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் சேர்ந்து வங்கக்கடல் ஓரத்தில் கோயில் கொண்டருளும் தலம் இது. இக்கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சந்நதிகளுடன் திகழ்கிறது. மேரு அமைப்புடன், படியேறி இறங்கி சந்நதிகளை அடையலாம். இந்தப் பாதை ஓம் வடிவத்தில் இருப்பது அற்புதம். இங்கே, வங்கக்கடல், சமுத்ரபுஷ்கரணி எனும் பெயரில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது. தலவிருட்சம், வில்வமரம். வில்வ இலையில் மகாலட்சுமி வசிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் உப வடிவங்களான சங்கநிதியும் பதுமநிதியும் இங்கே உண்டியல் உருவில் சந்நதி கொண்டுள்ளனர். தங்கள் சங்கடங்கள் நீங்க சங்கநிதியிலும் நலன்கள் பெருக பதுமநிதியிலும் காணிக்கை செலுத்துவது பக்தர்கள் வழக்கம்.
மூலக்கருவறையில் மகாலட்சுமி, திருமாலுடன் மூல விக்ரகமாக அதியற்புத அழகுடன் அருள, உற்சவர் ஸ்ரீநிவாசனாக தரிசனம் தருகிறார். மகாலட்சுமியும் திருமாலும் திருமணக்கோலத்தில் அருள்வதால் மகாலட்சுமிக்கு எப்போதுமே ஒன்பது கஜம் புடவையும் திருமாலுக்கு 10 முழ வேஷ்டியும் சார்த்தப்படுகின்றன. இந்த மூல சந்நதியில் அபிஷேக காலங்கள், பூஜா காலங்களில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது. மற்றபடி, எல்லா நேரங்களிலும் தைரியலட்சுமிக்கே அர்ச்சனை. திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து, திருமண வரம் பெறுகின்றனர். இங்குள்ள தசாவதார சந்நதியை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார விருட்சங்களும் இந்தக் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அலர்மேலு மங்கைத் தாயார் சமேத பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்
சென்னை, மேற்கு சைதாப்பேட்டையில் கோயில் கொண்டுள்ளார், அலர்மேலு மங்கைத் தாயார் சமேத பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள். கருவறையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் பிரசன்ன வேங்கட நரசிம்மர். துளசி, முல்லை, பச்சைக் கற்பூர வாசனையோடு வேங்கடவனின் அருள் மணமும் கலந்து சுவாசத்தில் கலக்கும்போது, கவலை எல்லாம் நொடிப்பொழுதில் மறைகிறது. நின்ற திருக்கோலத்தில் அருளும் பெருமாளின் கீழே சிங்க முகம் காட்டாமல், சாந்த ரூபமாய், அழகியத் திருமுகத்தோடு, அழகிய சிங்கராய் தரிசனம் தருகிறார். வெளிப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார் தனிச்சந்நதியில் அருள்கிறார். இவருக்கு அருகே அலர்மேலுமங்கைத் தாயார் சந்நதி. பேரழகோடு வீற்றிருக்கும் அன்னை, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் ஆலயத் திருப்பணியின் போது பூமியில் இருந்து கிடைத்தவர். அன்னையை 27 நாட்கள் தினமும் 27 முறை வலம் வர வளமெல்லாம் கிடைக்கும். திருமணம் கைகூடும். குழந்தை பேறு நிச்சயம் கிடைக்கும்.

சென்னை- எழும்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள்
ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயம். சப்தரிஷிகளும் இங்கு வந்து, இந்த பெருமாளை பூஜித்ததால் இத்தலம் எழுமூர் என வழங்கப்பட்டு, நாளடைவில் மறுவி எழும்பூர் என்றானது. சுமார் அறுநூறு ஆண்டுகள் பழைமையான ஆலயம் இது. இங்கு அருளும் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும் திருமணத்தடை உள்ளவர்களின் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பாரிமுனை காளிகாம்பாள்
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
தற்போதுள்ள ஆலயம் 1639ஆம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது ராகு கேது தோஷத்தை நீக்கும்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன்
பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவிய தலமாதலால், இது, திருவொற்றியூர் ஆயிற்று. மூலவர் படம்பக்கநாதர் எனும் புற்றிடங்கொண்டாரின் சந்நதி ஆண்டு முழுதும் வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டுமே கவசமில்லாது தரிசனம் கிடைக்கும். சுந்தரரின் காதலுக்கு, தானே தூது சென்று, சுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருமணத்தை இங்கிருக்கும் மகிழ மரத்தடியில் இறைவனே நடத்தி வைத்த தலம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் ஓருருவம் கொண்ட ஏகபாத மூர்த்தியாக இத்தலத்தில் காணலாம். அம்பிகை வடிவுடையம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை செய்யப்படுவது சிறப்பு.
இத்தலத்தில் தியாகராஜர் எனும் பெயரில் நடராஜப் பெருமான் அமர்ந்த நிலையில் அஜபா நடனமாடுகிறார். பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த தலம். மாசி மகத்தன்று இத்தலத்தில் தியாகராஜரின் 18 வகை திருநடனங்களையும் கண்டு களிக்கலாம். கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு திருவருள் புரிந்த வட்டப்பாறை அம்மன், வரப்பிரசாதியாய் இத்தலத்தில் தனி சந்நதி கொண்டுள்ளாள். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாய் 27 நட்சத்திர லிங்கங்களை பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
விளக்கேற்றி சிவகைங்கரியம் செய்து வந்த கலியநாயனார் ஒருமுறை விளக்கேற்ற எண்ணெய் இல்லாமல் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கத் துணிந்த போது இத்தல ஈசன் அவரை தடுத்தாட்கொண்டார். ஆலயத்திற்கு வெளியே வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். சென்னைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது, திருவொற்றியூர். சென்னையிலும் புறநகர் பகுதிகளும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களின் சிறப்புகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
-
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications