For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு - கேது தோஷம் போக்கும் மயிலை முண்டகக் கண்ணி அம்மன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மயிலையில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இது ராகு - கேது தோஷம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது.

ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்களுக்குப் பஞ்சமிருக்காது. பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழும் சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்தைப் பற்றி இன்றைய ஆலய உலா பகுதியில் அறிந்து கொள்வோம்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் முண்டகக் கண்ணி அம்மன். முண்டகம் என்பதற்குப் பல்வேறு பொருள் வழங்கப்பட்டாலும், தாமரை மலர் என்பதே பொருத்தம். கண்ணி என்பதற்கு கண்களை உடையவள் என்று பொருள் கூறப்படுகிறது. தாமரை போன்ற கண்களையும் உடையவள் என்ற பொருளில் முண்டகக் கண்ணி என்றப் பெயரில் இங்குள்ள அன்னை அழைக்கப்படுகிறாள்.

எளிமையும், அழகும், அருளும் நிறைந்த இந்த ஆலயம், மயிலாப்பூரில் நடுவே அமைந்துள்ளது. அன்னை முண்டகக்கண்ணி வீற்றிருப்பதால் அந்த தெருவின் பெயரே முண்டகக் கண்ணியம்மன் கோவில் தெரு என்று அழைக்கப்படுகிறது. மாதவப் பெருமாள் கோவிலின் பின்புறத்தில் கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது.

கம்பீர ராஜகோபுரம்

கம்பீர ராஜகோபுரம்

எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. ராஜகோபுரம் அமைந்துள்ள ஆலயம் என்றாலும் அன்னை வீற்றிருப்பதோ எளிமையான தென்னங்கீற்றைக் கொண்டு வேயப்பட்ட கொட்டகையின் உள்ளேதான்.

எளிய ஆலயம்

எளிய ஆலயம்

அன்னைக்கு கருவறை கட்டிடம் கட்ட பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு வழிகளில் தடை ஏற்பட்ட தாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே, அன்னைக்கு தென்னங்கூரையே கருவறை விமானமாக இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது. உலக மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இந்தக் கோலம் கொண்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

சுயம்பு வடிவ அன்னை

சுயம்பு வடிவ அன்னை

தன்னை நாடிவரும் பக்தர்கள் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், எளிமையாக வாழ்வதே சிறந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இக்கோலம் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்பாக, இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்கின்றனர். உள்ளே பிரமாண்ட பிரபையின் முன்பாக, முண்டகக் கண்ணி அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளாள்.

அழகிய அம்மன்

அழகிய அம்மன்

அன்னையின் திருவுருவம் மலர்வதற்கு முந்தைய தாமரை மொட்டின் வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கற்திருமேனியான அன்னையின் முன்புறமும், பின்புறமும் புடைப்புச் சிற்பமாக சூலம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னையின் அழகை காணும் போதே பக்தர்களின் மேனியில் ஒருவித சிலிர்ப்பு இயற்கையாகவே ஏற்படுகிறது.

தாமரை மொட்டில் அன்னை

தாமரை மொட்டில் அன்னை

அன்னை சுயம்பு வடிவத்தில் தாமரை மொட்டாய் அமர்ந்திருக்க, அன்னைக்கு கவசமாக பெரிய பிரபை அமைப்பு காணப்படுகிறது. இது வெள்ளிக் கவசத்தால் போர்த்தப்பட்டுள்ளது. இதில் ஐந்துதலை நாகம் படம் விரித்து நிழல்தரும் கோலத்தில் அமைந்துள்ளது. இதன் இருபுறமும் துவார பாலகிகள் அமைந்துள்ளனர்.

நாகம் வழிபடும் ஆலயம்

நாகம் வழிபடும் ஆலயம்

அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம்.

அன்னையின் வலதுபுற எதிரில் மிகப்பெரிய அரச மரமும், அதனடியில் நாகக் கன்னிகளும் உள்ளன. அன்னையின் பின்புறம் தல மரமான ஆலம் விழுதுகள் இல்லாத அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம்.

உற்சவர் சன்னிதி

உற்சவர் சன்னிதி

அன்னையின் இடதுபுறம் உற்சவர் சன்னிதி உள்ளது. அதன் எதிரே பிரமாண்ட வேப்ப மரமும் இருக்கிறது. உற்சவர் அன்னை, சாந்தம் தவழும் முகத்துடன் காட்சிஅளிக்கிறார். அன்னையின் சிரசில் கரந்த மகுடம் உள்ளது. முன்னிரு கைகள் ஒன்றில் கத்தியும், மற்றொன்றில் அபய முத்திரையும், பின்னிரு கைகள் ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் ஏலமும் ஏந்தி, அமர்ந்த கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள்.
அன்னை ஒளி வீசும் முகத்துடன் புன்னகை பூத்துக் காட்சி தருவதைக் காண, கண் கோடி வேண்டும்.

சப்த கன்னியர்கள்

சப்த கன்னியர்கள்

உற்சவர் சன்னிதியின் இடதுபுறம் மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி, வராகி என சப்த கன்னியர் சிறு கல் வடிவில் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்கு இருபுறத்திலும் ஜமத்கினி முனிவர் மற்றும் பரசுராமர் சுதை வடிவில் உள்ளனர்.

நாகதோஷம் நீங்கும்

நாகதோஷம் நீங்கும்

இத்தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். அம்மை நோய்க்கும், கண் நோய்க்கும் இந்த அம்மனை வழிபடலாம். மேலும், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகளுக்கும் வரம் தரும் அன்னையாகத் திகழ்கின்றாள்.

அலங்கார நாயகி

அலங்கார நாயகி

அன்னைக்கு காலையில் தொடங்கி, நண்பகல் வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அன்னைக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, சந்தனம், பன்னீர் என பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதன்பின், அன்னையின் திருமுகத்தில் பெரிய மஞ்சள் உருண்டையைத் தட்டையாக்கிப் பதிய வைத்து, கண் மலர், நாசி, அதரம் வைத்து, வேப்பிலை பாவாடை கட்டி, பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுகின்றனர்.

சிறப்பு விழாக்கள்

சிறப்பு விழாக்கள்

சித்திரைப் புத்தாண்டு பிறப்பு அன்று 108 விளக்கு பூஜை, சித்திரை பவுர்ணமியில் 1,008 பால்குடப் பெருவிழா, ஆடியில் பூரத் திருவிழா, 1,008 கூடையில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூரம், விஜயதசமி, தைக் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய ஐந்து நாட்களில் மட்டுமே அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவது வழக்கம்.

திறந்திருக்கும் நேரம்

திறந்திருக்கும் நேரம்

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களிலும், முக்கிய திருவிழா நாட்களிலும் வெள்ளி மற்றும் தங்கத் திருமுகம், நாகாபரணம் மற்றும் கிரீடம் ஆகியவை அம்மனுக்கு சார்த்தி அலங்கரிக்கின்றனர். காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். விழாக் காலங்களில் இந்நேரம் மாறுபடும்.

எப்படி வருவது?

எப்படி வருவது?

சென்னை பாரிமுனையில் இருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் மயிலாப்பூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. பறக்கும் ரயில் மூலமும் இந்த ஆலயத்திற்கு எளிதாக வரலாம். முண்டகக் கண்ணியம்மன் கோவில் ரயில் நிலையத்தில் இறங்கி 5 நிமிடங்களில் கோவிலை அடையலாம்.

English summary
Mundaka Kanni Amman Temple is a Hindu temple in the neighbourhood of Mylapore in Chennai. The temple is one of the most famous shrines dedicated to Mariamman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X