• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்வி, தொழில் வியாபாரம் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வழிபாடு - பூஜைக்கு நல்ல நேரம்

|

சென்னை: மலைமகள்,அலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையின் மிக முக்கிய வழிபாடாக சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம்.

தமிழகம் முழுவதும் நாளைய தினம் ஆயுதபூஜையும்,, சரஸ்வதி பூஜையும், திங்கட்கிழமை விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.

Navarathiri 2020: Auspicious time for ayudha pooja and saraswathi pooja

சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை ஐப்பசி 09ஆம் தேதி அக்டோபர் 25ஆம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7.42 மணிவரை பிற்பகல் பகல் 2.14 மணி முதல் மாலை 04.23 மணிவரை பூஜை செய்யலாம். இரவு 09.14 மணி முதல் 12.14 மணி வரை பூஜை செய்யலாம்.

ஆயுதபூஜைக்கு முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத் தூய்மை செய்ய வேண்டும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினை பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.

மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உபயோகக்கருவிகளாகிய அரிவாள்மன, கத்தி, அரிவாள், கடப்பாறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி பொட்டுவைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக்கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம்.

பூஜை அறையில் குங்குமம், சந்தனம், விபூதி, உதிரிப்பூக்கள், பூச்சரங்கள், மாலைகள், பொரிகடலை, சர்க்கரை, சுண்டல், இனிப்புவகைகள், பழங்கள், வெற்றிலைப்பாக்கு, சூடம், பத்தி, சாம்பிராணி, குத்துவிளக்குகள் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும். பூஜைக்கு ஏற்றாற்போல் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திக்கொண்டு விளக்கேற்றி மணியடித்து பூஜையைத் துவக்கவும்.

மஞ்சள் பொடியில் அல்லது பசுசாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லினால் 'ஓம் கணபதயே நமஹ' என்று அர்ச்சனை செய்து தூபம் காட்டி பழம், வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும்.

எங்களின் படிப்பு தொழி்ல் வியாபாரம் எல்லாம் எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடக்க சரஸ்வதியையும் விநாயகரையும் வேண்டிக்கொண்டு முதலில் புத்தகங்களை பூக்களால் "ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவ்யை நமஹ" என்று அர்ச்சிக்கவும்.

ஒருதட்டில் நிவேதனப் பொருட்களை வைத்து எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ அங்கெல்லாம் சென்று மணியடித்தவாறு நீரினால் மூன்று முறைச் சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள், எழுதுகோல்கள், ஆயுதங்களுக்கு நிவேதனம் செய்யவும். தேங்காய் உடைத்து பழம் வெற்றிலைப்பாக்குகளுடன் நிவேதிக்கவும். பிறகு சூடம் ஏற்றி புத்தகங்களில் துவங்கி முன்போல் மணியடித்தவாறு எல்லாவற்றிற்கும் தீபாராதனை செய்து வழிபடவும்.

பிறகு குடும்பத்தினர்கள் மற்றும் அங்கிருப்பவர்கள் எல்லோர் கையிலும் புஷ்பம் கொடுத்து போடச்சொல்லி எல்லோரும் நமஸ்காரம் செய்து வழிபடவும். விபூதி குங்குமம் மற்றும் பொரிகடலை இனிப்புகள் ஆகியவற்றை எல்லோருக்கும் விநியோகித்து ஆரத்தியெடுத்து பூஜையை நிறைவு செய்யவும்.

 
 
 
English summary
Navarathiri 2020: Auspicious time for ayudha pooja and saraswathi pooja. Ayudha Puja takes place on the ninth day of the auspicious Navratri festival. It is a ritual or festival which is performed to worship the tools which are associated with one’s livelihood. As per the Hindu mythology, it is believed that by observing the Ayudha Puja, the devotees ritually purify the tools with the divine blessings of the deity.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X