புரட்டாசி சனி விரதம்: தம்பதியர் ஒற்றுமை காக்கும் ஒப்பிலியப்பனை தரிசிப்போம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவிக்காக உப்பையே துறந்த ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதியைப் பற்றி புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு இன்றைய ஆலய தரிசனத்தில் பார்க்கப் போகிறோம். இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் ஊரில் மனைவி சமைத்த உணவில் சிறிதளவு உப்பு கூடினாலோ, உப்பு குறைந்தாலே திட்டுவது கணவரின் வழக்கம். ஆனால் மனைவிக்கு சமையலில் உப்பு போடத் தெரியாது என்பதற்காக வருடம் முழுவதும் உப்பில்லாத உணவை சாப்பிடுகிறார் பெருமாள்.

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒப்பிலியப்பன் ஆலயம் முக்கியமான தலமாகும். 108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் 'தென்திருப்பதி' என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது.

ஒப்பிலியப்பன்

ஒப்பிலியப்பன்

ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

உப்பில்லாத நிவேதனம்

உப்பில்லாத நிவேதனம்

1௦8 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. இதற்கும் மிக சுவாரஸ்யமான புராண கதை ஒன்று கூறுகின்றனர். இங்கு திருமணங்கள் நிறைய நடக்கின்றன.

அழகான திருக்கோலம்

அழகான திருக்கோலம்

திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் ஒப்பற்றவனாய் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீநிவாசனாய், பூமி தேவி நாச்சியார் வலப்பக்கம் மண்டியிட்டு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வணங்கும் திருக்கல்யாணக் கோலத்துடனும், இடப்பக்கம் மார்க்கண்டேய முனிவர் மண்டியிட்டு கன்னிகாதானம் செய்து தரும் கோலத்திலும் காட்சி தருகின்றனர்

தல புராணம்

தல புராணம்

மார்க்கண்டேயர் என்ற முனிவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்த பூமி தேவி அப்போது பருவ வயதை எட்டவில்லை. அவளுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று கனவு காண்கிறார், அவளைப் பெறாமல் பெற்ற தந்தையான மார்க்கண்டேயர். ஒருநாள் முதுமை சுமந்த பெரியவர் ஒருவர் நடுங்கியபடியே மார்க்கண்டேயரைத் தேடி வருகிறார். அவரது மகளைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கூறுகிறார்.

உப்பு போட தெரியாதே

உப்பு போட தெரியாதே

இதைக் கேட்டு ஆத்திரமடைந்தார் மார்க்கண்டேயர். என் மகளுக்கு சமையலில் சரியாக உப்பு கூட போடத் தெரியாதே... அவளை நீங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? உணவில் உப்பு போடத் தெரியவில்லை என்று கூறி அவளை நீங்கள் அடிக்க வேண்டியது வரும். அதனால், உங்களுக்கு என் மகளைத் திருமணம் செய்து தர முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.

பெருமாளுக்கு திருமணம்

பெருமாளுக்கு திருமணம்

அதை அந்த முதியவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அந்த சிறுமிதான் மனைவியாக வரவேண்டும் என்று அடம் பிடிக்காத குறையாகக் கேட்டார். இதையடுத்து, ‘இது என்ன சோதனை பெருமாளே...' என்று கண் மூடி கலங்கினார் முனிவர்.

மகாவிஷ்ணு சோதனை

மகாவிஷ்ணு சோதனை

அப்போது அவர் முன்பு நின்றிருந்த வயதானவர் மறைந்து, அவருக்குப் பதிலாக சர்வ அலங்கார திருக்கோலத்தில் திருமால் நின்றிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் மார்க்கண்டேயர்.

உப்பில்லாத பண்டம்

உப்பில்லாத பண்டம்

அப்போது பகவான், முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும்.

உப்பில்லாத பிரசாதம்

உப்பில்லாத பிரசாதம்

இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்... என்று அருளினார். இந்தக் காரணத்தாலேயே ஒப்பிலியப்பன் கோவிலில் தயார் செய்யும் எந்தப் பிரசாதத்திலும் உப்பு சேர்ப்பதில்லை என்கின்றனர்.

ஏழுமலையானுக்கு அண்ணன்

ஏழுமலையானுக்கு அண்ணன்

திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம்.

மிகப்பெரிய பாவம்

மிகப்பெரிய பாவம்

இங்கே பெருமாளை வணங்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி கொண்டு சென்றால் அது மிகப்பெரிய பாவம் அவர்கள், நரகத்திற்கு செல்வார்கள் என்று தல புராணம் கூறுகிறது.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும் பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து மணவாழ்வில் இன்பம் கிட்டும்.

புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி மாதம் நாளைய தினம் பிறக்க உள்ள நிலையில் சனிக்கிழமை நாளான இன்று ஒப்பிலியப்பனை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம். கும்பகோணம் சென்று அங்கிருந்து ஒப்பிலியப்பன் கோவிலுக்கு செல்லலாம். திருநாகேஸ்வரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது ஒப்பிலியப்பன் கோவில்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puratasi Sanikilamai visit Uppiliappan Temple. The Temple also known as Thiruvinnagar of Venkatachalapathy Temple is a temple dedicated to Hindu god Vishnu, located near Kumbakonam, Tanjavur District.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற