For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் கட்டுப்பாடு: உள்ளூர் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தும் பக்தர்கள்

சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாத தமிழக பக்தர்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சபரிமலைக்கு சென்று ஐயப்பனை காண முடியாத தமிழக பக்தர்கள் தங்களுடைய வீடுகளுக்கு அருகிலுள்ள பதினெட்டு படிளோடு அமைந்துள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசித்து வருகிறார்கள். இங்குள்ள கோவில்களிலும் சபரிமலையில் பின்பற்றப்படும் விதிமுறைகளுடன் தினசரி பூஜைகள் நடைபெறுவதால் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பதினெட்டு படியேறி நெய் அபிஷேகம் செய்து கண் குளிர தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரம்மச்சரிய தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிமலைக்கு, நாடு முழுவதும் இருந்தும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கடும் விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டும், சிலர் விரதம் மட்டும் இருந்து ஐயப்பனை மனம் குளிர கண்டு தரிசிக்க வருவதுண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் மாதம் முதல் நாளன்றும், மண்டல பூஜை காலங்களிலும் மகர விளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்தை காணவும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதுண்டு.

இந்த வழக்கமான நடைமுறைகளெல்லாம் இந்த ஆண்டு காணாமல் போய்விட்டது என்றே சொல்லலாம். காரணம், கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய் தொற்றின் காரணமாக, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட வழக்கமாக ஆண்டு தோறும் மாலையணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் எப்படியும் நமக்கு வழிகாட்டுவார் என்று நம்பிக்கையோடு, இந்த ஆண்டும் மாலையணிந்து விரதமிருந்து வருகிறார்கள்.

ஐயப்பன் கோவில்

ஐயப்பன் கோவில்

ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் கூட ஆன்-லைனில் முன்கூட்டியே பதிவுசெய்யவேண்டும். முன்பதிவு செய்யாவிட்டால் மலையேற அனுமதி கிடையாது. அதோடு சபரிமலைக்கு செல்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழும் கையோடு கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம்.

 நெய் அபிஷேகம் அனுமதியில்லை

நெய் அபிஷேகம் அனுமதியில்லை

முன்பதிவு செய்துவிட்டு மலைக்கு சென்றாலும் கூட, பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. இதனால் மனம் வருந்திய பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள், இந்த ஆண்டு மாலையணிவதையே முற்றிலும் தவிர்த்து விட்டனர். சபரிமலை ஐயப்பன் இந்த வருஷம் ஐயப்பனை தரிசிப்பதற்கு நமக்கு அனுமதி கொடுக்கவில்லையே என்று வருத்தத்துடன் வீடுகளிலேயே விரதம் இருந்து வருகின்றனர்.

உள்ளூர் ஐயப்பன் தரிசனம்

உள்ளூர் ஐயப்பன் தரிசனம்

பெரும்பாலான பக்தர்கள் தங்களுடைய வீடுகளுக்கு அருகிலுள்ள பதினெட்டு படிளோடு அமைந்துள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசித்து வருகிறார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சென்னை ஆர்.ஏ புரம், அம்பத்தூர், மடிப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பதினெட்டு படிகளோடு அமைந்துள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருமுடி கட்டிக்கொண்டு ஐயப்பனை மனமுருக தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

பூஜைகள் ஒன்றுதான்

பூஜைகள் ஒன்றுதான்

இங்குள்ள கோவில்களிலும் சபரிமலையில் பின்பற்றப்படும் விதிமுறைகளே பின்பற்றப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மடிப்பாக்கம் ஐயப்பன் கோவிலிலும், மேல் தளத்திற்கு சென்று வழிபட சபரிமலை போல் இங்கும் பத்து முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

பதினெட்டு படியேறி தரிசனம்

பதினெட்டு படியேறி தரிசனம்

மாலையணிந்து விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே பதினெட்டு படியேறிச் சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாததால் பெருவாரியான ஐயப்ப பக்தர்கள் இங்கு இருமுடி கட்டிக்கொண்டு வருகிறார்கள். பதினெட்டு படியேறிச்சென்றதும் இருமுடியை பிரிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அபிஷேக நெய்யை சன்னிதானத்தில் கொடுத்துவிட வேண்டும்.

சென்னையில் ஐயப்பன் கோவில்கள்

சென்னையில் ஐயப்பன் கோவில்கள்

சென்னை ஆர்.ஏ புரத்திலுள்ள ஐயப்பன் கோவிலுக்கும், அம்பத்தூர் மற்றும் செங்கல்பட்டிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கும் இருமுடி கட்டிக்கொண்டு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக மலையேற முடியாத வயதான பக்தர்களே இங்கு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று அனைத்து தரப்பு பக்தர்களையும் உள்ளூர் கோவில்களை நாடிச்செல்ல வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ஐயப்பன்

மதுரையில் ஐயப்பன்

சபரிமலைக்கு சென்று இருமுடி காணிக்கை செலுத்த முடியாத ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மதுரை அழகர்கோயில் அருகே கள்ளந்திரியில் சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் செயல்படும் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

திருச்சி ஐயப்பன்

திருச்சி ஐயப்பன்

சபரி மலைக்கு இருமுடி கட்டி சென்று நெய் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் கோர்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு வந்து நெய் அபிஷேகத்துக்கு கொடுத்து அபிஷேக நெய், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை மணி 07:10 முதல் 10:00 மணி வரை. மாலை மணி 06:00 முதல் 08:00 மணி வரை, தரிசன நேரம். இருமுடியிலிருந்து சேகரித்த நெய்யும் தனியாக பக்தர்கள் கொடுக்கும் நெய்யும் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய் பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மண்டல பூஜை காலத்தில் மலையேறி சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் மனம் குளிர உள்ளூர் ஐயப்பனை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

English summary
Devotees of Tamil Nadu who are unable to visit Ayyappan in Sabarimala visit the Ayyappan Temple located near their homes on the eighteen steps. In the temples here, daily pujas are performed in accordance with the rules followed in Sabarimala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X