சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு நிம்மதி?.. ராசி மாறுவதால் யாருடைய தலைவிதி மாறும் தெரியுமா?
சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் ஜூலை 12 ஆம் தேதி வக்ரமாவார். இந்த சனி மாற்றத்தால் மீண்டும் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள்.
சென்னை: சனி பகவான் ஆயுள் காரகன். கர்மகாரகன் சனிபகவான் வக்ரபெயர்ச்சியாகி மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார். ஜூலை 12 அன்று, சனி பகவான் தனது சொந்த வீடான மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மகர ராசியில் பிரவேசித்த பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை சனி பகவான் அங்கு தங்கியிருப்பார். மகர ராசிக்கு மாறும் சனியால் சில ராசிக்காரர்களுக்கு 6 மாதங்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். யாரெல்லாம் சனியின் பிடியில் சிக்குவார்கள் என்று பார்க்கலாம்.
சனி இடம் மாறியவுடன், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் தெரியும். சனி மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம், கடகம், துலாம் ராசிக்காரர்கள் அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியின் பிடியில் சிக்குவார்கள். அதே போல தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கக்கும் ஏழரை சனியின் தாக்கம் இருக்கும்.
சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் தவறு செய்பவர்களுக்குத்தான் தண்டனை என்ற பெயரில் படிப்பினைகளைத் தருவார். சனிபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். மகர ராசியில் பயணம் செய்யப்போகும் சனியின் பார்வை மீனம், கடகம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது.

மேஷம்
சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் வக்ரமடைந்து அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோக காரகன். சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இது தர்ம சனி காலம் என்பதால் நிறைய தர்மங்களை செய்யுங்கள்.

மிதுனம்
சனிபகவான் பிடியில் இருந்து சில மாதங்கள் மீண்ட நீங்கள் மீண்டும் அஷ்டம சனியின் பிடியில் சிக்கப்போகிறீர்கள். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். திடீர் பணவரவு கிடைக்கும். இன்னும் 6 மாதங்களுக்கு நீங்கள் அஷ்டம சனியின் பிடியில் சிக்கித்தவிக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்தில் உங்களின் தலைவிதியே மாறலாம் கவனம் தேவை.

கடகம்
கடகம் ராசிக்காரர்களே சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்க்கிறார். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தடைகளை தாண்டி திருமணம் நடைபெறும்.

சிம்மம்
சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். ஆறு மாத காலம் செல்வமும் செல்வாக்கும் கூடும். முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார் சனிபகவான்.

கன்னி
சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். பூர்வ புண்ணிய யோகம் தேடி வரும். பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும். பூர்வஜென்ம புண்ணியங்களை அறுவடை செய்வீர்கள். பிள்ளைகள் விசயத்தில் கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே சனிபகவான் உங்கள் ராசியில்தான் உச்சம் பெற்று பயணம் செய்வார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். ஆறு மாதத்தில் உங்களின் ஆசைகள் குறிக்கோள்களை நிறைவேற்றுவார் சனி பகவான்.

விருச்சிகம்
சனி வக்ர பெயர்ச்சியால் வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே..ஏழரை சனியின் பிடியில் இருந்து நிம்மதி பெருமூச்சு விட்ட நீங்கள் கடைசி ஆறு மாத காலம் மீண்டும் சிரமத்தை சந்திக்கப்போகிறீர்கள். பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். ஏழரை சனியின் கடைசி கால கட்டம் என்பதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மீண்டும் ஜென்மசனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த கால கட்டத்தை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பண விசயங்களில் கவனமும் நிதானமும் தேவை. தொழிலில் அதிகம் கடன் வாங்கி அகலக்கால் வைக்க வேண்டாம்.

கும்பம்
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2020 ஆம் ஆண்டு முதல் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்கியது. அதிசாரமாக வந்த சனியால் ஜென்ம சனியாக மாறியது. இப்போது பின்னோக்கி வக்ரகதியில் பயணிக்கும் சனியால் மீண்டும் விரைய சனி காலம் ஆரம்பமாகிறது. பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு சில மாதங்கள் விரைய சனியாக ஏழரை சனியாக தொடங்கியது. சனி வக்ர கதியில் பயணம் செய்வதால் லாப சனியாக மாறியுள்ளது. செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்.












Click it and Unblock the Notifications