சியாமளா நவராத்திரி: கல்வி, செல்வம், குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் வசந்த பஞ்சமி
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள் சியாமளா. இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே சியாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.
சென்னை: சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். சனிக்கிழமை பிப்ரவரி 5ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.
சியாமளா நவராத்திரி இன்று முதல் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. முக்கியமாக சியாமளாவின் அம்சமாக திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.
தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதியை வணங்கினால் கல்வி வளமும், மகாலட்சுமியை வணங்கினால் செல்வ வளமும் ரதி மன்மதனை வணங்கினால் தம்பதியர் இடையே ஒற்றுமையும் அதிகரிக்கும்.

அம்பிகை வழிபாடு
நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது. இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

நவராத்திரி பண்டிகைகள்
ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி. ஆனி மாதத்தில் ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.

கலைகளின் தேவதைக்கு வழிபாடு
சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே சியாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

சரஸ்வதியும் வீணையும்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. 'கச்சபி' என்பது சரஸ்வதியின் வீணை. சங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர். இவளும் சரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. சரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் 'சியாமளா' என்று பெயர்.

வசந்த பஞ்சமி
சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். சனிக்கிழமை பிப்ரவரி 5ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

செல்வ வளம் கிடைக்கும்
தை மாதம் 23ஆம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி சனிக்கிழமையன்று வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி பூஜை செய்வதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும். அதே போல அன்றைய தினம் விஷ்ணு பூஜையும் பிரம்ம போஜனமும் செய்ய வேண்டும். மகாலட்சுமியை வணங்கி வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்ய ஐஸ்வர்யம் பெருகும்.

தம்பதிகள் ஒற்றுமை
வசந்த பஞ்சமி நாளில் ரதி மன்மதனை பூஜை செய்ய தம்பதிகள் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளியும் நிம்மதியும் பிறக்கும். சியாமளா நவராத்திரி நன்னாளில் சியாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியின் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக.












Click it and Unblock the Notifications